53 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தபால் அலுவலகம் திறப்பு... மெல்ல மெல்ல உயிர் பெறும் தனுஷ்கோடி! | Post office reopened in Dhanushkodi after 53 years

வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (22/02/2017)

கடைசி தொடர்பு:17:50 (22/02/2017)

53 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தபால் அலுவலகம் திறப்பு... மெல்ல மெல்ல உயிர் பெறும் தனுஷ்கோடி!

தனுஷ்கோடி

ன்று தகவல் தொடர்பு பெருமளவு வளர்ந்து விட்டது. செல்போன், இமெயில், வாட்ஸ்அப் என தகவல் தொடர்பு எங்கோ சென்று விட்டது. இந்த வசதிகளில் ஒன்று கூட இல்லாதபோது கடிதங்கள் தான் முக்கிய தொலைத் தொடர்பாக இருந்தது. ஆனால் தகவல் தொடர்பில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக தபால்துறை தனது முக்கியத்துவத்தை இழந்தது. இதனால் தபால் அலுவலகங்களின் செயல்பாடும் குறைந்தது. தபால் அலுவலகங்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் புதிய தபால் நிலையம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. ஆழிப்பேரலை தாக்குதலில் தனது அடையாளம் முழுமையும் இழந்த தனுஷ்கோடியில் தான் இந்த தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

புகழ்மிக்க துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கி வந்த தனுஷ்கோடி 1964-ம் ஆண்டு எழுந்த ஆழிப்பேரலையில் உருக்குலைந்து போனது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கீழ் திசை நாடுகளுக்கு கடல் வழிப் பயணம் மேற்கொள்ள தனுஷ்கோடி பெரும் உதவியாக இருந்து வந்தது. இதனால் இங்கு ரயில் நிலையம், மருத்துவமனை, பஞ்சாயத்து அலுவலகம், ரயில் பழுது பார்க்கும் பணிமனை, மிகப்பெரிய அஞ்சலகம் என எல்லா அரசுத் துறை அலுவலகங்களும் இயங்கி வந்தது. இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்த அஞ்சலகத்தின் மூலமே கடிதங்கள், பார்சல்கள் அனுப்பப்பட்டு வந்தன. இந்த அஞ்சலகத்தில் வெளிநாட்டு அஞ்சல் பிரிவும் இயங்கி வந்தது.

தனுஷ்கோடி

இந்நிலையில்தான் ஆழிப்பேரலை இங்கு வாழ்ந்த மக்களை மட்டுமில்லாமல் அரசு கட்டடங்களையும் அழித்துச் சென்றது. அந்தக் கோர நிகழ்வின் எஞ்சிய சாட்சிகளாக இன்றும் சில கட்டட இடிபாடுகள் காட்சிப் பொருளாக இருந்து வருகிறது. புயலுக்குப் பின் வாழ தகுதியற்ற பகுதியாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு மாற்று வழி இல்லாததால் சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இங்கேயே தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றன.

நல்ல குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மீனவர்களின் குழந்தைகளுக்காக சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பப்பள்ளி ஒன்று துவங்கப்பட்டு தற்போது அது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அரிச்சல்முனை பகுதி வரை சமீபத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறை இப்பகுதி மக்களின் தேவைக்காக நாட்டின் எல்லைப் பகுதியான தனுஷ்கோடியில் புதிய கிளை அஞ்சலகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ்கோடி

தமிழகத் தலைமை அஞ்சல் துறை  தலைவர் சார்லெஸ் யோகோ ஆய்வின் பேரில் ராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தின் 247-வது கிளை அஞ்சலகம் தனுஷ்கோடியில் இன்று திறக்கப்பட்டது. புயலுக்கு முன் இங்கு இயங்கிய அஞ்சலகத்தில் அஞ்சல்காரராக பணியாற்றிய குருசாமி புதிய அஞ்சலகத்தை திறந்து வைத்தார். கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் செல்லத்துரை, அஞ்சல்துறை அலுவலர்கள் விஜயகோமதி, துளசிதாஸ், நாகராஜன், ரோட்டரி சங்க நிர்வாகி சுடலை, கிருஷ்ணன், முன்னாள் அஞ்சலக அதிகாரி முத்துராமலிங்கம் மற்றும் கிராம மக்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

53 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ்கோடியில் திறக்கப்பட்ட இந்த கிளை அஞ்சலகத்தின் மூலம் தனுஷ்கோடி, கம்பிப்பாடு, பழைய துறைமுகம், முகுந்தராயர் சந்திரம், கோதண்டராமர் கோயில் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடையலாம். தபால் சேவை, மணியார்டர் சேவை, சேமிப்பு வங்கி சேவை, காப்பீடு சேவை போன்றவற்றை இப்பகுதி மக்கள் பெறலாம். நாடு முழுவதும் அஞ்சலகங்களுக்கான தேவைகள் குறைந்து வரும் நிலையில் ஏராளமான அஞ்சலகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 53 ஆண்டுகளுக்குப் பின் நாட்டின் கடைக்கோடி பகுதியான தனுஷ்கோடியில் கிளை அஞ்சலகத்தை திறந்ததன் மூலம் மீண்டும் மக்கள் சேவையில் அஞ்சல் துறை தன்னை முன்னிறுத்தியுள்ளது.

- இரா.மோகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close