அன்று 'மது விலக்கு'... இன்று ஜெ. மரணம் மீதான நீதி விசாரணை... முதல் கையெழுத்தும், ஸ்டாலின் அறிவிப்பும்...

டந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மதுவிலக்கை அமல்படுத்துவதற்குத்தான் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். பிரசாரத்துக்குச் சென்ற இடங்களில் எல்லாம் மு.க.ஸ்டாலின் இதைச்சொல்லியே பிரசாரம் செய்தார்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து மதுவிலக்குக்கு போடப்படும். நிச்சயம் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என தி.மு.க. தலைவர்கள் பேசினர். ஆனால் சட்டமன்றத் தொகுதிகளில் 89 இடங்களில் வென்றாலும், ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து மதுவிலக்கு கோரிக்கை மெல்ல மெல்ல மறைந்துபோனது. இந்நிலையில், தி.மு.க. ஆட்சியமைத்தால் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதிவிசாரணைக்குத்தான் என்று திருச்சியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வினர் ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியதாகச் சொல்லி, தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க.வின் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடந்தது. திருச்சியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

காலை 9 மணிக்கு முன்னதாக உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்கு வந்த மு.க.ஸ்டாலின், சரியாக 9 மணிக்கு போராட்டத்தை துவக்கினார். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் போராட்டத்தில் பங்கெடுத்தனர். போராட்டத்தில் இறுதியாக மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர், "தமிழகத்தைக் காப்பாற்றுவது தி.மு.க.வின் கடமை. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமையத்தான் மக்கள் வாக்களித்தனர். தற்போதுள்ள ஆட்சி மக்களுக்குப் பிடிக்கவில்லை. இந்தப் போராட்டத்தில் தி.மு.க.வுக்கு சுயநலம் இல்லை. மற்ற கட்சியினரும் போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர். ஜெயலலிதா மறைந்த பிறகு தி.மு.க. நினைத்திருந்தால் ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியைத்தான் தி.மு.க. நடத்தும். இந்த ஆட்சியின் ரிமோட் கன்ட்ரோல் பெங்களூரு சிறையில் உள்ளது. ஒருபோதும் இந்த பினாமி ஆட்சியை ஏற்க மாட்டோம். தி.மு.க.வுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறோம்.

ஜெயலலிதா மரணத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. ஓ.பி.எஸ் சொன்னதைப்போல ஜெ மரணம் குறித்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும். இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரித்திருக்க வேண்டும். இல்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் முன்னரே அறிவித்திருக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி திராணி இருந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தட்டும். அப்படி நடத்தினால் பெங்களூரு சிறையில் உள்ளவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். இந்த ஆட்சி நீடித்து நிலைக்காது. விரைவில் மக்கள் உங்களைத் தூக்கி வீசுவார்கள். அப்படித் தூக்கி எறிந்ததும் தி.மு.க. ஆட்சி அமையும். அப்படி தி.மு.க. ஆட்சி அமைந்தால், எங்கள் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதிவிசாரணை நடத்துவதற்காகத்தான் இருக்கும்" என்றார்.

தேர்தலின்போது முதல் கையெழுத்து மதுவிலக்கு அறிவிப்புக்கு எனச் சொல்லி வந்தவர், இப்போது ஜெயலலிதா மரணம் மீதான விசாரணைக்கு எனச்சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!