வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (23/02/2017)

கடைசி தொடர்பு:14:47 (23/02/2017)

சசிகலாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்? பரபர பின்னணி #VikatanExclusive

சிறையிலிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை, முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. இதற்குச் சில காரணங்களைச் சொல்கிறார்கள், பழனிசாமியின் ஆதரவாளர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் நிகழ்ந்த களேபரங்களால் கலக்கத்தில் இருந்தனர் கட்சியினர். ஒருவழியாக, எடப்பாடி பழனிசாமி முதல்வராகிவிட்டார். அதே நேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் சிறைக்குச் சென்றுவிட்டார்.  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது, தமிழகத்தில் கண்ணீர்க் காவியத்தை அரங்கேற்றிய அ.தி.மு.க.வினர், சசிகலாவுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர்கூட சிந்தவில்லை. மேலும், பெங்களூரிலேயே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் அனைத்து அமைச்சர்களும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், மகளிரணியினரும் ஜெயலலிதாவுக்காக முகாமிட்டனர். ஆனால் சசிகலா சிறையிலிருக்கும் இந்தச் சமயத்தில், விரல்விட்டு எண்ணும் வகையில் அமைச்சர்களும், மகளிரணியினரும் சென்றுள்ளனர். இதுதான், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் உள்ள வித்தியாசம்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பன்னீர்செல்வத்தை ஆதரித்தவர்கள் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டனர். அதில், எம்.பி.க்கள் மீது மட்டும் சசிகலா நடவடிக்கை எடுக்கவில்லை. சசிகலாவை நாங்கள் நீக்கிவிட்டோம் என்று பதிலடிகொடுத்தது, பன்னீர்செல்வம் தரப்பு. தற்போது, மக்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் பன்னீர்செல்வம். மறுபக்கம், ஆட்சியில் அமர்ந்து அரசாங்கத்தை நடத்தத் தொடங்கிவிட்டார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரது தலைமையிலான அமைச்சரவையும் செயல்படத் தொடங்கிவிட்டது.

பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தாலும், அவரது கண் அசைவிலேயே தமிழகத்தில் ஆட்சி நடத்தப்படுகிறது. சசிகலாவிடமிருந்து வரும் ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடத்தப்படுவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. நாளை நடைபெற உள்ள ஜெயலலிதாவின் பிறந்தநாளை இப்படித்தான் கொண்டாட வேண்டும் என்று சிறையிலிருந்தே தொண்டர்களுக்குக் கடிதம்மூலம் அன்புக் கட்டளையிட்டுள்ளார் சசிகலா.  சிறையிலிருக்கும் சசிகலாவை, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்துப் பேசினார். அப்போது, சில அசைன்மெண்ட்களை  தினகரனிடம் சொல்லியிருக்கிறார். இந்தச் சந்திப்பை அடுத்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் சசிகலாவைச் சந்திக்க பெங்களூர் சென்றனர். சிறை வளாகத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்த அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு, நிச்சயம் சசிகலாவை சிறையில் சந்திப்பார் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், பதவி ஏற்றவுடன் ஆளுநர் அலுவலகத்திலிருந்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சமாதிக்குச் சென்றார். இதன்பிறகு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், இளைஞர், இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் போயஸ் கார்டனில் ஆலோசனை நடத்தினார் பழனிசாமி. மதுக்கடை மூடல், மானிய விலையில் மகளிருக்கு இருசக்கர வாகனம், மீனவர்களுக்கு வீடு உள்பட, 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகையை அறிவித்தார். இப்படி, பிஸியாக இருந்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலில் சசிகலாவைச் சந்திக்கும் திட்டம் இதுவரை இல்லை.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கூறுகையில், "டி.டி.வி. தினகரனிடம், சட்டசபையில் நடந்த முழுவிவரத்தைக் கேட்டறிந்துள்ளார் சசிகலா. அப்போது, 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போதைக்கு என்னை வந்து சந்திக்க வேண்டாம். அவ்வாறு சந்தித்தால், தேவையில்லாத விமர்சனங்கள் வரும்' என்று தெரிவித்த சசிகலா, 'தி.மு.க.வின் அடுத்த மூவ் குறித்து கண்காணியுங்கள். பன்னீர்செல்வத்தால் இனி நம்மை எதுவும் செய்ய முடியாது. அக்காவின் விருப்பத்தின்படி ஆட்சி நடக்க வேண்டும். இந்த ஆட்சி, மக்களுக்காக நடக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்' என்று சொல்லி உள்ளார். இந்தத் தகவலை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இதனால்தான் சசிகலாவை சந்திக்கவில்லை" என்றனர். 


- எஸ்.மகேஷ் 
 


டிரெண்டிங் @ விகடன்