சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு! ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர்

தமிழக சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் பழனிசாமி அரசு வெற்றிபெற்றது. முன்னதாக, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, சபாநாயகரை முற்றுகையிட்ட தி.மு.க உறுப்பினர்கள், அவரது மேஜை மற்றும் மைக்கை உடைத்தனர். மேலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவைக்காவலர்கள், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை வெளியேற்றியபோது, அவர்களது சட்டைகள் கிழிந்தன.

இதையடுத்து, அவையில் நடந்த சம்பவம் குறித்து, ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து, அவையில் நடந்த சம்பவம் குறித்த விவரங்களைத் தன்னிடம் கொடுக்கும்படி சட்டசபைச் செயலாளர் ஜமாலுதீனுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். சட்டசபைச் செயலாளர் ஜமாலுதீன், கடந்த 20-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் குறித்த அறிக்கையை ஆளுநரிடம் வழங்கினார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் குறித்து விவர அறிக்கையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பியுள்ளார். மேலும், மத்திய அரசுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார். அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!