வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (23/02/2017)

கடைசி தொடர்பு:15:04 (23/02/2017)

'சசிகலா மீதான கோபம் சரிந்துவிடக் கூடாது!'  -எம்.எல்.ஏக்களை எச்சரித்த ஸ்டாலின் 

ஸ்டாலின்

மிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். ' எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை மக்கள் மத்தியில் நிறுவும் வேலையில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் மிக வலுவாக அவர்களை எதிர்கொள்ள முடியும்' என எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது தி.மு.க தலைமை. 

சட்டசபையில் கடந்த 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அரசுக்கு எதிராக தி.மு.க கூட்டணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் வாக்களித்தன. அதேநேரம், ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி கோரி, அமளியில் ஈடுபட்டனர் தி.மு.க உறுப்பினர்கள். இதில், சபாநாயகர் கையைப் பிடித்து இழுத்தும் அவரது இருக்கையில் அமர்ந்தும் தி.மு.கவினர் தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சட்டையும் கிழிக்கப்பட்டது. இதைப் பற்றி ஆளுநர் வித்யாசாகர் ராவின் கவனத்திற்கும் கொண்டு சென்றார் ஸ்டாலின். சபை நிகழ்ச்சிகளைக் கண்டித்து, நேற்று மாநிலம் முழுவதும் தி.மு.கவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். " சசிகலா முன்னிறுத்தியுள்ள அரசின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஆணித்தரமாக வெளிக்காட்டும் வகையில், போராட்டங்களை முன்னெடுக்கிறோம். சட்டப்பேரவையில் நடந்த பல விஷயங்களில் எங்கள் செயல் தலைவருக்கு உடன்பாடில்லை. எம்.எல்.ஏக்களை நேரடியாக அழைத்தும் கண்டித்தார். ' சபை நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களில் சிலர் முறைதவறி நடந்து கொண்டீர்கள். நான் முகம் சுழிக்கும் அளவுக்கு நீங்கள் நடந்து கொள்ள வேண்டாம். மக்கள் நம்பிக்கையைப் பெறாத இந்த அரசை மக்களே அப்புறப்படுத்துவார்கள். நம்முடைய செயல்பாடுகளால் மக்களின் அதிருப்திக்கு ஆளாகிவிட வேண்டாம்' எனக் கண்டித்தார். அதிலும், கு.க.செல்வம், புரசை ரங்கநாதன் உள்ளிட்டவர்களுக்குத் தனி எச்சரிக்கையும் விடுத்தார் ஸ்டாலின்" என விவரித்தார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.  

" சபாநாயகர் தனபால் உள்நோக்கத்தோடு நடந்து கொள்கிறார் என்ற அடிப்படையில், அவர் மீது நம்பிக்கையில்லாத சூழல் உருவாகி இருக்கிறது. எனவேதான், இப்படியொரு தீர்மானத்தை தி.மு.க கொண்டு வருகிறது. சட்டசபையில் 35 பேருக்கும் குறையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால், இந்தத் தீர்மானத்திற்கு அனுமதி உள்ளதாக சபாநாயகர் அறிவிக்க வேண்டும். இதன் மீதான விவாதத்தை நடத்துவதற்கும் சபாநாயகர் நாள் குறிக்க வேண்டும். தன் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு சபாநாயகர் உத்தரவு வழங்குவாரா என்பதும் கேள்விக்குறிதான். எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய அன்று, தி.மு.கவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இப்படியொரு வாய்ப்பு இனி வருவதற்கான வாய்ப்பு குறைவுதான். சபாநாயகர் மீது தீர்மானம் கொண்டு வந்தால், அதை முறியடிக்கும் அளவுக்கு ஆளும்கட்சியின் உறுப்பினர் பலம் உள்ளது. எனவே இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆளும்கட்சியின் உறுப்பினர்களும் வேறு அணி பக்கம் செல்லப் போவதில்லை. 'வரப் போகும் நான்கரை ஆண்டுகளையும் முழுதாக முடித்துவிட வேண்டும்' என்ற மனநிலையில்தான் உள்ளனர். அரசு கவிழ்ந்துவிட அவர்கள் விரும்பவில்லை. 2006-ம் ஆண்டு மைனாரிட்டி அரசை வைத்துக் கொண்டு தி.மு.க ஆட்சி நடத்தியதைப் போன்று, மீதமுள்ள ஆண்டுகளையும் நிறைவு செய்யும் மனநிலையில்தான், எம்.எல்.ஏக்கள் உள்ளனர்" என விவரித்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர், 

" சட்டசபையில் நாங்கள் தி.மு.க பக்கம் இருக்கிறோம். இது பா.ஜ.கவுக்கும் தெரியும். தேர்தல் வந்தாலும் காங்கிரஸ் பக்கம் அணி சேர்வதையே தி.மு.கவும் விரும்பும். எடப்பாடி பழனிசாமி அரசைக் கையில் வைத்துக் கொள்வதையே பா.ஜ.க தலைமையும் விரும்பும். ஆளுநரிடம் மனு கொடுத்தாலும், தி.மு.கவுக்கு சார்பான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்பில்லை. இதை உணர்ந்துதான், மக்களிடம் சசிகலா வகையறாக்களைப் பற்றிப் பேசி வருகிறார் ஸ்டாலின். தமிழக அரசைப் பற்றி மக்களிடம் எதிர்ப்பு உணர்வு அதிகரித்திருக்கிறது. இதைக் குறையாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார். இந்த நேரத்தில் தி.மு.க எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்ற அச்சமும் அவருக்கு இருக்கிறது. தமிழக பட்ஜெட்டுக்குப் பிறகு நிதி மசோதா தாக்கல் செய்யும்போது, குரல் வாக்கெடுப்பு நடக்கும். இதிலும் சர்ச்சை ஏற்படுத்தும் முடிவில் தி.மு.க இருக்கிறது. அடுத்து வரக் கூடிய காலகட்டங்களை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடுதான் அ.தி.மு.க கையாளும்" என்றார் விரிவாக. 

-ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்