'பெட்ரோல் விலை உயர்வு:மக்களின் கண்ணீர் மத்திய அரசை வீழ்த்திவிடும்'

சென்னை: பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெறாவிட்டால், மக்கள் விடும் கண்ணீர் ஆட்சியை வீழ்த்திவிடும் என்று முதல்மைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 என உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,"விலைவாசி உயர்ந்து வருவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதற்கும், நாட்டில் தற்போது நிலவும் மந்தமான பொருளாதார நிலைக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் காரணம் ஆகும்.

இந்த நிலையில் விலைவாசி ஏற்றத்திற்கு மேலும் வித்திடும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்று வரலாறு காணாத அளவில் விலையை உயர்த்தி மக்களை வஞ்சித்து இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயலாக அமைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதை காரணம் காட்டி, அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்தி வரும் தி.மு.க. அங்கம் வகிக்கும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும்.

பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50 என்ற அளவுக்கு உயர்த்தியது ஏழை, எளிய,நடுத்தர மக்கள் மீது தாங்கொணா சுமையை சுமத்தி மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மூன்றாண்டுகள் நிறைவு செய்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூன்றாண்டுகள் நிறைவு அடைந்ததற்கு மக்களுக்கு அளிக்கும் பரிசாக இத்தகைய ஒரு விலை உயர்வினை அறிவித்துள்ளது.இது கடும் கண்டனத்திற்குரியது ஆகும்.

பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்தும் போது எல்லாம்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்,இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற எடுபடாத வாதங்களை மத்திய அரசு எடுத்து வைத்து விலை ஏற்றத்தை நியாயப்படுத்துவதை எவராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பெறப்படுவதில்லை.உள்நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும் சர்வதேச சந்தை விலையை அடிப்படையாக கொள்வது நியாயமற்ற செயல்.இதே போன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல்,அதன் காரணமாக பெட்ரோல் விலையை ஏற்றுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயல் காரணமாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை,எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பற்றாக்குறை ஏற்படும். ஏற்கனவே வங்கிக்கடன்கள் மூலம் வாகனங்களை வாங்கியோர் கூடுதல் சுமைக்கு ஆளாக்கப்படுவர். பெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் வாகன உரிமையாளர்கள் வாடகையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உருவாகும். இதன்மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியும், பொருளாதார நிலையும் மேலும் வீழ்ச்சி அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மேலும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் அதிக அளவில் லாபம் ஈட்டி, மத்திய அரசு உள்பட அதன் பங்குதாரர்களுக்கு அதிக அளவு ஈவுத்தொகையினை அளித்து வருகின்றது. எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை குறைப்பதன் மூலமும், பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகளை குறைப்பதன் மூலமும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் பெட்ரோல் விலை உயர்வை நிச்சயம் தவிர்க்கலாம். பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காமல் ஆண்டுக்கு பல முறை பெட்ரோலின் விலையினை உயர்த்துவது என்பது மக்களை அல்லல்படுத்தும் செயலாகும்.

எனவே ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், மக்கள் விடும் கண்ணீர் மத்தியில் ஆளும் மக்கள் விரோத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விரைவில் வீழ்ச்சி அடைய செய்யும் ஆயுதமாக மாறிவிடும் என்பதையும் இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்"என்று  கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!