வெளியிடப்பட்ட நேரம்: 07:36 (24/02/2017)

கடைசி தொடர்பு:10:49 (24/02/2017)

பாதுகாப்புத் தருவார்களா?-பதற்றத்தில் பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை பிரச்னை இல்லாமல் கொண்டாடிவிட வேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கிறார் பன்னீர்செல்வம். 

ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என்று அ.தி.மு.க - வினர் முடிவுசெய்துள்ளனர். இன்று காலை அ.தி.மு.க அலுவலத்தில், அவைத்தலைவர் செங்கோட்டையன், ஜெயலலிதா படத்துக்கு மலர் துாவி மரியாதைசெலுத்துகிறார். ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தின சிறப்பு மலரையும் அப்போது அவர் வெளியிடுகிறார். அ.தி.மு.க-வில் தனி அணியாகச் செயல்படும் பன்னீர்செல்வம் தரப்பினர், ஜெயலலிதா பிறந்த தினத்தில் இருந்து எங்கள் புரட்சி ஆரம்பிக்கும் என்று கூறிவருகின்றனர். அந்த அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், 'ஜெயலலிதா பிறந்த தினம் அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பன்னீர்செல்வம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார்' என்று கூறி, புதிதாக ஒரு புதிரைப் போட்டுள்ளார். 

 பன்னீரின் செயல்பாடுகள், சசிகலா தரப்புக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக, மக்களிடம் அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக உளவுத்துறை உறுதிப்படுத்தியதால், அந்த செல்வாக்கைச் சிதைக்க ஆளும்கட்சியினர் தி்ட்டமிட்டுள்ளதாக பன்னீர்செல்வம் தரப்பினர் கூறுகின்றனர். ஜெயலலிதா பிறந்த தினத்தில், அவர் நின்று வெற்றிவாகை சூடிய ஆர்.கே.நகர் தொகுதியில் பொதுக்கூட்டமும், நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார் பன்னீர்செல்வம். ஆனால், இந்தக் கூட்டத்தில் சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் குழப்பம் ஏற்படுத்த இருப்பதாக பன்னீர்செல்வத்துக்குத் தகவல் வந்துள்ளது.  முதல் கூட்டத்திலேயே  குழப்பம் ஏற்பட்டு அது பிரச்னையாக வெடித்தால், அதன்பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று பன்னீர்செல்வம் அணியினர் கருதுகின்றனர் .

பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற்றுவரும் நேரத்தில், 'சசிகலா அணியினர் குழப்பம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள். எங்கள் பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பினைப் பலப்படுத்தித் தர வேண்டும்' என்று காவல்துறையிடம் கூறியுள்ளார்கள். ஆனால், அதற்கு காவல்துறையில் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். அதேபோல ஜெயலலிதா சமாதியில் நாளை அஞ்சலி செலுத்துவதற்கு பன்னீர்செல்வம் வருகை தர உள்ளார். ஆனால், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நேரம் இதுவரை ஒதுக்கவில்லை. அ.தி.மு.க தரப்பிலிருந்து வந்து சென்றபின்தான் பன்னீருக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால், இன்று நள்ளிரவு வரை பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்காமல் காவல்துறை இழுத்தடித்துவருகிறது என்று புலம்புகிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள். பவர் இல்லாவிட்டால், பாதுகாப்புக்கே சிக்கலாகிவிடுகிறதே என்று யோசிக்கிறார் பன்னீர் செல்வம்.

அ.சையது அபுதாஹிர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க