வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (24/02/2017)

கடைசி தொடர்பு:14:59 (24/02/2017)

"அப்போலோ ரகசியத்தை உடைக்கிறார்!" ஜெ.பிறந்தநாளில் பன்னீர்செல்வத்தின் அடுத்த அவதாரம் #VikatanExclusive

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அப்போலோ ரகசியத்தை வெளிப்படுத்தப் போவதாக பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் கூடுதல் பொறுப்பாக பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அடுத்து ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு ஏற்றார். இதன்பிறகு டிசம்பரில் நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுவில் சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டசபைத் தலைவராகவும் சசிகலாவை தேர்வு செய்தனர். அதற்கு முன்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராக சசிகலா பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றுவிட்டார்.  இதற்கிடையில் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதா சமாதிக்கு தனி மனிதனாக சென்ற பன்னீர்செல்வம், சசிகலா மீது குற்றம் சுமத்தினார். இதையடுத்து சசிகலா அணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தச் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவை ஏற்கெனவே எதிர்த்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சந்தித்தனர். அடுத்து இவர்கள் இருவரும் மக்களை சந்திக்கத் தயாராகினர். இதைத்தடுக்கும் வேலையில் சசிகலா தரப்பு களமிறங்கியது. பன்னீர்செல்வத்துக்கும், தீபாவுக்கும் இடையே ஈகோ பிரச்னையை கிளப்பி விட்டனர். இதனால் தீபா, பின்வாங்கினார். சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், நேற்று கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில் அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஆனால் அ.தி.மு.க.வுக்கு திரும்பிச் செல்லும் முடிவில் பன்னீர்செல்வம் தரப்பு இல்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று பன்னீர்செல்வம், அதிரடியான அறிவிப்பை வெளியிடப்போவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

"சசிகலா அணியினர் சட்டசபை ஜனநாயகத்தை மீறி மெஜாரிட்டியை நிரூபித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது சசிகலா தரப்புக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களும், கட்சியின் தொண்டர்களும் சசிகலா தரப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களை நாங்கள் சந்திக்கச் செல்வதை தடுக்க பலவகையில் முயற்சித்து வருகின்றனர். அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது என்ன நடந்தது என்பது மருத்துவர்களுக்கும், சசிகலாவுக்கும் மட்டுமல்ல எங்களுக்கும் தெரியும். அதையெல்லாம் சொன்னால் கட்சி நிச்சயம் உடையும். சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்குக்கு அப்போலோ விவரம் தெரியும். ஆனால் அவர் அதை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார். அதைத் தடுக்கும் சக்தி யார் என்று மக்களுக்கே தெரியும். சசிகலா குடும்ப உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோருக்கு எதிராக தீபக் குரல் கொடுத்துள்ளார். அவர் மேலும் பேசத் தொடங்கினால் சசிகலா குடும்பத்தினரின் முகத்திரை கிழிந்து விடும்.

அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலா தரப்பு அவசர அவசரமாக மருத்துவர்களை பேட்டி கொடுக்க வைத்தனர். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் விளக்கினார்கள். இதற்காக லண்டன் டாக்டர் ரிச்சர்டு பிலே, சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இது எல்லாம் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் பேரிலேயே நடந்தது. ஆனால், ஜெயலலிதா விவகாரத்தில் இன்னும் அப்போலோவில் மர்மங்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுகுறித்த தகவல்கள் வெளியே வந்தால் நிச்சயம் சசிகலா தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பன்னீர்செல்வத்துக்கு தெரிந்த உண்மைகளை இன்று அவர் சொல்ல முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினர் அவரது இல்லத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்பிறகு அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது, சசிகலா தரப்பு குறித்த முழுவிவரம் வெளிச்சத்துக்கு வரும்" என்றனர் ஆதரவாளர்கள்.

இதுகுறித்து பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர் ஒருவர் கூறுகையில், "அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரது புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும், சசிகலா தரப்பும், ஜெயலலிதா நலமாக இருப்பதாக தெரிவித்தனர். அந்த சமயத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது.  வேட்பாளர்களின் தேர்வு சசிகலாவின் சாய்ஸாகத்தான் இருந்தது. ஜெயலலிதாவின் ஆசைகள், எண்ணங்களை சசிகலா நிறைவேற்றவில்லை. அதையும் வெளிப்படுத்த உள்ளோம். அடுத்து கட்சியில் உள்ள தொண்டர்கள், மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் அ.தி.மு.க.வில் இருந்து எங்களை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை. ஏனெனில் அவரது நியமனமே செல்லாது. அப்படியிருக்கும்போது அவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கும் அதே கதிதான். இதனால் சட்டரீதியாக அ.தி.மு.க.வை கைப்பற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளோம். சசிகலா, சிறையிலிருக்கும் இந்த நேரத்தில் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.வி.தினகரனும், வெங்கடேஷும் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை நாங்கள் மட்டுமல்ல கட்சியினரும் விரும்பவில்லை. இதன்விளைவு ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் எதிரொலித்துள்ளது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியும் சூழ்நிலை காரணமாக அந்தப்பக்கத்தில் இருக்கிறார். அவருக்கும் எல்லா உண்மைகளும் தெரியும். பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட நிலைமை அவருக்கு ஏற்பட அதிக நாள்கள் இல்லை. அப்போது அவரும் உண்மைகளை சொல்வார்" என்றார். 

- எஸ்.மகேஷ்  


டிரெண்டிங் @ விகடன்