வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (24/02/2017)

கடைசி தொடர்பு:14:48 (24/02/2017)

சசிகலாவுக்கு எதிராகத் திரண்ட 3 சக்திகள்!  -தியேட்டர் வில்லங்கமும் தீபக் கொந்தளிப்பும்

சசிகலா

அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். 'சசிகலா குடும்பத்தில் அதிகாரப்போட்டி தலைதூக்கியுள்ளது. அதன் ஒரு பகுதிதான் தினகரனுக்கு எதிராக தீபக் கொந்தளித்தது. இதன் பின்னணியில் மூன்று பெரிய சக்திகள் உள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த 60 நாட்களுக்குள் அ.தி.மு.கவில் அதிகாரப் போட்டி தலைதூக்கியது. சசிகலா தலைமைக்கு எதிராகப் பேட்டியளித்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம். அதன்பிறகு அ.தி.மு.க நிர்வாகிகளும் பன்னீர்செல்வம் பக்கம் வர ஆரம்பித்தனர். எம்.எல்.ஏ-க்களைக் கட்டுப்பாட்டில் வைக்கத் தெரிந்த சசிகலாவுக்கு, நிர்வாகிகளை சமாதானம் செய்ய இயலவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை உறுதி என முடிவான பிறகு, துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு தினகரனை முன்னிறுத்தினார் சசிகலா. இதை திவாகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் ஏற்கவில்லை. ' கட்சிப் பொறுப்பை தினகரன் கவனிக்கட்டும். வேறு யாரும் அதிகாரத்துக்குள் தலையிட வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார் சசிகலா. “ சசிகலா பேச்சை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. சென்னையின் பல இடங்களில் புதுப்புது அலுவலகங்களைத் தொடங்கிவிட்டனர். குடும்பச் சண்டையின் ஒரு பகுதியாகத்தான் தீபக் வெளியே வந்தார்” என விவரித்த தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், “ஆட்சி அதிகாரத்தில் திவாகரன் தொடர்புடைய ஆட்களைத் தொடர்ந்து ஓரம்கட்டி வருகிறார் தினகரன். அவர் தரப்பு ஆட்கள் கோட்டைக்குள் வலம் வருவதையும் அவர் ஊக்குவிக்கவில்லை. ‘ அவர்கள் தரப்பிலிருந்து எந்த வேலை வந்தாலும் செய்து தர வேண்டாம்’ எனக் கோட்டை வட்டாரத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டார். அவர்களுக்குள் மோதல் வெடிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் காவல்துறை உயர் அதிகாரி ஜெயச்சந்திரன். திவாகரனின் சம்பந்தியான இவரை உளவுப் பிரிவின் உயர் பதவிக்குள் கொண்டு வந்தார் சசிகலா. கார்டனோடு பன்னீர்செல்வம் முரண்பட்ட நேரத்தில், கன்னியாகுமரிக்குத் தூக்கியடிக்கப்பட்டார் ஜெயச்சந்திரன். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் அமர்ந்த பிறகு, ‘உளவுப் பிரிவில் ஜெயச்சந்திரன் நியமிக்கப்படுவார்’ என எதிர்பார்த்தார் திவாகரன். 

தீபக்ஆனால், தற்போது கரூர் தலைமையிட கூடுதல் எஸ்.பியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுவிட்டார். இவ்வளவு டம்மியான இடத்தில் அவரை அமர வைத்ததில் திவாகரன் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே திவாகரனின் கட்டுப்பாட்டில்தான் தீபக் இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில், தீபக் மகிழ்ச்சியடையும் வகையில் செட்டில்மென்ட் பற்றியும் பேசப்பட்டது. ஆனால், பேசப்பட்ட விஷயங்களைச் செய்து தராமல் திவாகரன் தரப்பினர் இழுத்தடித்துக்கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில், தீபக்கிற்கு மிரட்டல்களும் அதிகரித்தன. பெங்களூருக்கு தினகரனுடன் பயணித்தபோதும், இதைப் பற்றி விரிவாகப் பேசினார் தீபக். அப்போதும் அவருக்குரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. ‘ என் அத்தையின் சொத்துகளை நீங்கள்தான் வைத்திருக்கிறீர்கள். எனக்குள்ள உரிமையைப் பறிப்பது நியாயமா?’ என சண்டை போட்டுவிட்டுக் கிளம்பினார். ‘ அவரை வெளியில் விட்டால் ஏதாவது பேசிவிடுவார்’ என கார்டனில் உள்ளவர்கள் பதற்றத்தில் இருந்தனர். எதைப் பற்றியும் திவாகரன் கவலைப்படவில்லை. அவருடைய முயற்சிக்கு நடராசனும் துணை நின்றார். தற்போது தீபக்கை சரிக்கட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் தினகரன்” என்றார் விரிவாக. 

தினகரன்“ குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் கட்சியில் இல்லை என கார்டனில் உள்ளவர்கள் நிலைநாட்ட விரும்பினாலும், அவர்களைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் தவித்து வருகிறார் சசிகலா. நேற்று அண்ணா சாலையில் உள்ள புகழ்பெற்ற கிளப்பில் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் தொடர்பான வசூல் களைகட்டியது. சசிகலாவுக்கு நெருக்கமான உறவினருக்கு வேண்டப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் தீவிர வசூலில் ஈடுபட்டு வருகிறார். ‘திங்கள்கிழமை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும்’ என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளையும் இணைக்க வேண்டும் எனப் பட்டியலைக் கொடுத்திருந்தார் திவாகரன். அதை அப்படியே புறக்கணித்துவிட்டது தினகரன் தரப்பு. குடும்ப உறவுகளுக்குள் உச்சக்கட்ட சண்டை நிலவுவதை அறிந்த மூன்று பெரிய சக்திகள் தீபக்கை தங்கள் பக்கம் கொண்டு வந்துள்ளனர்.

மதுபான ஆலை அதிபர், தொழிலதிபர், கொங்கு மண்டல புள்ளி என மூன்று பேர் சசிகலா வகையறாக்களை ஒழித்துக் கட்டும் வேலையைக் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் மூலம் தீபக்கிற்கு பல வகைகளில் உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘ நீதிமன்றத்துக்குக் கொடுக்க வேண்டிய 100 கோடி அபராதத் தொகையை நான் கட்டுவேன்’ என தீபக் வசனம் பேசுவதன் பின்னணி இதுதான். மதுபான ஆலை அதிபர், சென்னையின் பிரதான இடத்தில் தியேட்டர் ஒன்றை நடத்தி வருகிறார். அந்தத் தியேட்டரை சசிகலா தரப்பில் உள்ளவர்கள் விலைக்குக் கேட்டுள்ளனர். அவர் மறுத்ததும், ‘ கார்ப்பரேஷன் மூலமாக பல குடைச்சல்களைத் தர முடியும். தியேட்டரைக் கொடுத்துவிட்டு ஓடிவிடுங்கள்’ என எச்சரித்துள்ளனர். கூடவே, அந்த மதுபான ஆலையில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக சரக்கு எதுவும் கொள்முதல் செய்யப்படவில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் தீபக்கைத் தங்கள் வசம் இழுத்துள்ளனர். தினகரனுக்கு எதிராக தீபக் கொந்தளிப்பதையும் வெகுவாக ரசித்து வருகின்றனர் திவாகரன் ஆதரவாளர்கள்” என்கிறார் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். 

‘கட்சிக்கு தினகரன்... கார்டனுக்கு வெங்கடேஷ்’ என சசிகலா வரைந்த கோட்டை, குடும்ப உறவுகளே அழிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். அவர்களால் பழிவாங்கப்பட்டவர்களும் அணி சேர்ந்திருப்பதை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளனர் பன்னீர்செல்வம் அணியினர். 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்