வாழ்க்கையில் ஜெயலலிதா செய்த 7 பிழைகள்... | 7 mistakes of Jayalalithaa

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (24/02/2017)

கடைசி தொடர்பு:14:49 (24/02/2017)

வாழ்க்கையில் ஜெயலலிதா செய்த 7 பிழைகள்...

ஜெயலலிதா

மிழக அரசியல் அரங்கில் அசைக்கமுடியாத இரும்புப் பெண்மணியாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரின் வாழ்க்கை ஓட்டத்தில் நடந்த பிழைகள் அவருக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தன.

1) தாய் சந்தியா உயிரிழந்த நிலையில், வாழ்க்கையே இருண்டு விட்டதாக ஜெயலலிதா நினைத்தார். ஆதரவற்ற நிலையில் இருந்தார். தம் எதிர்காலம் குறித்து யாரிடம் ஆலோசனைக் கேட்பது என்றெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. அவர் உறவினர்களையும் அவர் நம்பவில்லை. மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்றிருந்தால், திருமண வாழ்க்கையில் அவர் அடி எடுத்து வைத்திருக்கக்கூடும். அம்மா நடிகையாக இன்று வரை இருந்திருக்கக்கூடும். இது ஒரு முதன்மையான பிழை என்றபோதிலும், இப்படியெல்லாம் நடந்திருந்தால் ஒரு பெண் அரசியல்வாதியை தமிழகம் இழந்திருக்கும்.

2) ஆங்கிலப் புலமை மிக்கவர், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் அறிந்தவர் என்ற பெயரைப்பெற்றவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் அடுத்தவர்களைக் கேட்டு எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டார். தன் முடிவுகளில் அடுத்தவர்களின் தலையீடை எப்போதும் விரும்ப மாட்டார். தன்னருகே உதவியாளர்களை வைத்துக்கொண்டார். தன்னை ஆக்கிரமிப்பவர்களை, தன் மனதில் குழப்பம் செய்விப்பவர்களை எப்போதும் அவர் பக்கத்தில் வைத்துக்கொண்டதில்லை. ஆனால், ஜெயலலிதா சசிகலாவை தோழியாக போயஸ்கார்டனுக்குள் அனுமதித்ததுதான் இன்றளவுக்கும் பெரும் பிழையாகக் கருதப்படுகிறது.

3) ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனாக சுதாகரனை தேர்ந்தெடுத்தார். சுதாகரன் திருமணம்தான் அவரது அரசியல்வாழ்க்கையில் சரிவுக்கு முதல்படியாக அமைந்தது. முதல்முறை முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதல்வர் தன் வளர்ப்பு மகனுக்கு எப்படி, இப்படி ஒரு ஆடம்பரத் திருமணத்தை செய்து வைத்தார் என்று கடைகோடி தமிழர்களும் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் நடைபெற்ற ஆடம்பரத் திருமணங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் சுதாகரன் திருமணம்தான் சொத்துக்குவிப்பு வழக்குக்கு முதற்காரணியாக இருந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த பிழைகளில் மூன்றாம் இடம் இதற்குத்தான்.

ஜெயலலிதா

4) ஜெயலலிதாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு மூட்டு வலி, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகள் இருந்து வந்தன. ஆனால், அவற்றுக்காக அவர், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. உரிய நிபுணர்களிடமும் அவர் ஆலோசனை பெறவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். துணிச்சலான பல முடிவுகளை எடுத்தவர் உடல்நிலை குறித்து உரிய ஆலோசனைகளைப் பெறத் தவறி விட்டார். உடல் நலக்கோளாறு காரணமாக ஆட்சியிலும், கட்சியிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர் விலகியே இருந்தார். இதுவும் அவர் செய்த பிழைகளில் ஒன்று.

5) ஜெயலலிதா அரசியல் ரீதியாக முடிவுகள் எடுப்பதற்கு பத்திரிகையாளர்கள், மூத்த தலைவர்களைக் கொண்ட ஆலோசகர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டதில்லை. எம்.ஜி.ஆரின் அருகில் இருந்த சோலை உள்ளிட்டோர் சில காலம் ஜெயலலிதாவின் ஆலோசகர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், யாரும் நீடித்து இருந்ததில்லை. ஆரம்பக் கட்டத்தில் ஆங்கில மீடியாக்களிடம் தொடர்பில் இருந்த ஜெயலலிதா அதையும் நிரந்தரமான தொடர்பாக வைத்துக் கொண்டதில்லை. ஆலோசனை ஏதும் இல்லாமல் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் சர்ச்சைகளுக்கு உள்ளாயின. இதுவும் அவர் செய்த பிழை.

ஜெயலலிதா

6) ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அது போலீஸ் ஆட்சியாகத்தான் இருக்கும். போலீஸார் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வார். ஜனநாயகப் பூர்வமாக நடைபெறும் போராட்டங்களைக் கூட போலீஸாரை வைத்து ஒடுக்குவார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள். 1991 ஆட்சி காலத்தில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுக்கு போலீஸார் ஆதரவு இருந்தது. 2001-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க நடத்திய பேரணியில் போலீஸார் துணையுடன் ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். 2011-ம் ஆண்டு ஆட்சியில் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய மாற்றுத்திறனாளிகளை போலீஸார் ஒடுக்கினர். இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா, போலீஸாரை நம்பியது பெரிய பிழை.

7) ஜெயலலிதா எப்போதுமே ஊடகங்களில் இருந்து விலகியே இருந்தார். 1991-ம் ஆண்டு ஆட்சிக் காலக் கட்டத்தில் ஆட்சியின் தவறுகளை ஊடகங்கள் கடுமையாகக் குற்றஞ்சாட்டின. இதனால், ஜெயலலிதாவுக்கு ஊடகங்கள் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டது. 2001- ஆட்சி காலத்திலும் ஊடகங்களைப் பொருட்படுத்தவில்லை. 2011 ஆட்சி காலத்தின்போது இனி ஊடகங்களை வாரம் ஒருமுறை சந்திக்கிறேன் என்றார். ஆனால், சொன்னபடி அவர் நடந்து கொள்ளவில்லை. ஆட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்த ஊடகங்கள் மீது வழக்கம்போல வழக்குகள் தொடுத்தார். இதனால், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையும் அவர் சந்தித்தார்.

- கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்