வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (24/02/2017)

கடைசி தொடர்பு:17:04 (24/02/2017)

வெறிச்சோடிய ஜெயலலிதா சமாதி... ஜெயலலிதா பிறந்தநாளில் அ.தி.மு.க.வினர் எங்கே?

ஜெயலலிதா

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட அமளிதுமளியானது அந்தக் கட்சியை மட்டுமல்லாமல், தமிழகத்தையே பெரும்பாடுபடுத்திவிட்டது. பின், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, ''இந்த வருடம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகுவிமர்சிகையாக நடத்த வேண்டும்'' என்று அறிவித்திருந்தார். அதன்பின் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்ததுடன், பெங்களூரு சிறையிலும் அடைக்கப்பட்டார். இருப்பினும், 'அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவின் பிறந்தநாளை விமர்சியாகக் கொண்டாட வேண்டும்' என அந்தக் கட்சிக்குள் பேச்சு நடந்தது. ஆனால், ஜெயலலிதா பிறந்த நாளான இன்று (24-02-17) மெரினாவில் இருந்த அவருடைய சமாதிக்கு அ.தி.மு.க-வின் உயர் பொறுப்புகளில் இருந்த யாருமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சமாதி

''எனது அரசியல் பயணத்தை எனது அத்தையின் பிறந்த நாளன்று அறிவிப்பேன்'' என்று தீபா முன்னரே கூறியிருந்தார். அதன்படியே அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்திருந்தார். அதனால் இன்று காலை சரியாக 9 மணியளவில் ஜெயலலிதாவின் சமாதிக்குத் தன்னுடைய தொண்டர்கள் படையுடன் சென்றார் தீபா. பின்னர், அவருடைய சமாதியில் மலர் தூவி, மரியாதை செலுத்தியபின், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''எனது அரசியல் பயணம் பற்றிய அறிவிப்பை இன்று மாலை சொல்வேன். அம்மாவின் வழியிலேயே நடப்பேன். அதற்காக ஆசிர்வாதம் வாங்குவதற்காக இங்கு வந்தேன்'' என்றார். பின்னர், அங்கிருந்த எம்.ஜி.ஆர் சமாதிக்குச் சென்று வணங்கிவிட்டு வீட்டுக்கு விரைந்தார். அதன்பின்னர், மெரினாவுக்கு எந்த அரசியல் தலைவர்களும் வரவில்லை. பொதுமக்களும், காவல் துறையினரும் மட்டுமே அங்கு இருந்தனர். 

ஜெயலலிதா சமாதியில் தீபா

சரியாகக் காலை 10.40-க்கு அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளரான வைத்திலிங்கம் எம்.பி., மட்டும் தனியாகச் சமாதிக்கு வந்தார். சமாதியின் முன் வணங்கிவிட்டு... வந்த வேகத்திலேயே புறப்பட்டுச் சென்றார். சில நிமிடங்கள் கழித்து அமைச்சர் தங்கமணியும், அவரைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் சமாதிக்கு வந்தனர். பொதுமக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார் கோகுல இந்திரா. சமாதியைவிட்டு விழாவுக்குச் செல்லும் வழித்தடத்தின் இருபுறத்திலும் தீபாவின் தொண்டர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, ''கொள்ளைக்காரக் கூட்டம் எல்லாம் நாட்டை ஆளுது. சீக்கிரமே அதை அடிச்சி விரட்டணும்... இனி, தீபா அம்மாதான் நாட்டைக் காப்பாத்தவும், கொள்ளைக்காரக் கும்பலை அடிச்சி விரட்டவும் சரியான ஆள்'' என்று கோகுல இந்திரா காதில் விழும்படி, தீபாவின் தொண்டர்கள் சத்தமாகக் கோஷம் எழுப்பினர். இதனால் கோகுல இந்திரா கோபம் அடைந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் கடந்துசென்றார். அவர்களுக்குப் பதிலடி தரும் விதமாக கோகுல இந்திராவுடன் வருகை தந்த ஒரே ஒரு தொண்டர் மட்டும் 'சின்னம்மா வாழ்க' என்று கோஷம் எழுப்பினார்.

கோகுல இந்திரா

அதன்பின் திருச்சி மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராசன் வந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம், ''கடந்த ஆண்டு அம்மா பிறந்த நாளின்போது நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். ஆனால், இப்போது அம்மா உயிருடன் இல்லை. எங்களை வழிகாட்டி நடத்திய அம்மா இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அம்மா சொல்படி நடப்போம். அம்மாவுக்காக எங்களையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழத் தயாராக இருக்கிறோம். தோழியாக, சகோதரியாக, அன்னையாக எங்கள் அம்மாவோடு 34 ஆண்டுகாலம் ஒன்றாக இருந்து தியாக வாழ்க்கை, தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் சின்னம்மா. கட்சியை உடையாமல் பார்க்கவும், இரட்டை இலை சின்னத்தைக் காப்பாற்றவும் சின்னம்மா போராடுகிறார். கட்சியைக் காக்க ஒற்றுமையாக இருப்போம்" என்றார். 

வைத்தியலிங்கம்

அ.தி.மு.க தரப்பின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து யாரும் ஜெயலலிதாவின் சமாதிக்கு வரவில்லை என்றாலும், எப்போதும்போல பொதுமக்கள், கூட்டம்கூட்டமாக வந்து சமாதியை வணங்கிவிட்டுச் சென்றனர். அப்போது பேசிய பொதுமக்கள், "அம்மா மட்டுமே எங்கள் உயிர்மூச்சு. 'அம்மாவின் உண்மையான தொண்டர்கள் நாங்கள் மட்டும்தான்' என்று மூச்சுக்குமூச்சு சொல்லிக்கொண்டிருக்கும் சசிகலா குடும்பத்தினர்கள் ஒருவர்கூட இங்கு வரவில்லை. இனி, அவர்களுக்கு அம்மாவா முக்கியம்? மன்னார்குடி கூட்டம் என்றாலே கொள்ளையடிக்கும் கூட்டம் என்று எல்லாருக்கும் தெரியும். பதவிக்காகவும், பணத்துக்காகவும்தான் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற குறியில் அவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அம்மா சமாதிக்கு வர எப்படி நேரம் இருக்கும்? அம்மாவின் உண்மையான விசுவாசியான பன்னீர்செல்வம்கூட ஜெயலலிதா சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தவில்லை என்பதுதான் எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தான். தேர்தல் நேரத்தில் மட்டும்வந்து அம்மா பெயரைச் சொல்லி யாராவது ஓட்டு கேட்கட்டும், அன்று, இருக்கிறது அவர்களுக்குக் கச்சேரி'' என்று எச்சரிக்கை விடுத்தனர்.  

தங்கமணி

பொதுமக்கள் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறதுதானே? ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பதவிக்காகக் கூனிக்குறுகி வணக்கம் போட்டவர்கள், தற்போது அவர் இல்லையென்றபிறகு... அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்களைத் (பணமும், பதவியும் இருப்பவர்களை) தூக்கிவைத்துக் கொண்டாடுவதுதானே நிஜம்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், ஜெ.அன்பரசன் | படங்கள்: பா.காளிமுத்து 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்