வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (24/02/2017)

கடைசி தொடர்பு:17:50 (24/02/2017)

தினகரனை வீழ்த்த தீபக்! நடராசனை வீழ்த்த ஜெயக்குமார்!

தீபக்

ப்போதும் சீனுக்கு வராத ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளில் அவர் இந்த வெடியைப் பற்ற வைத்திருக்கிறார்.

 "டி.டி.வி. தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஏற்க முடியாது. ஓ.பி.எஸ் மீண்டும் தாய்க் கழகத்துக்கே திரும்ப வேண்டும்." என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

''தீபாவை ஏற்க முடியாது, கட்சி உடையக் கூடாது, போயஸ்கார்டனுக்கு நானும்  தீபாவும்தான் உரிமை கொண்டாட முடியும்.'' என்றும் அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார் தீபக்.

மாலைப்பொழுதில் தீபக்  இப்படி  பேட்டி அளிப்பதற்கு முன்னால், அன்றைய தினம் காலைப் பொழுதில் என்ன நடந்தது? தீபக் பேட்டி அளித்த பின் அதற்கு எதிர்வினையாக அ.தி.மு.க-வில் நடந்தது என்ன? 

அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பெயர்  அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியிருந்தாலும், பிப்ரவரி 23-ம் தேதிதான்  கட்சி அலுவலகத்துக்கு  வந்து பதவியேற்றுக் கொண்டார்  தினகரன்.  

தினகரனின் பதவியேற்பு நிகழ்ச்சி மிகவும் அமைதியாக நடந்துமுடிந்தது. ஆனாலும், அ.தி.மு.க-வின் அசைக்கமுடியாத சக்தி, இனி தினகரன்தான் என்பதை, அந்தப் பதவியேற்பு  நிகழ்ச்சி நிரூபித்தது. அவர் வரும் வழிப்பாதையில்,  சிறப்பான  வரவேற்பு கொடுக்கப்பட்டு, வழி நெடுக மலர்கள் தூவப்பட்டன. 

தினகரன் பதவியேற்பு வருகைக்காக கட்சித் தலைமை அலுவலகத்தில் காத்திருந்து வரவேற்றவர்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர். 

ஜெயலலிதா முதல்வராக இல்லாத காலத்திலும் 'கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு அம்மா' என்ற கோஷத்தை மட்டுமே கேட்டுப் பழகிய அவ்வை சண்முகம் சாலை முதல்முறையாக 'அண்ணன் தினகரன் வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்க!' என்ற கோஷத்தை இன்றுதான் கேட்டது.

அ.தி.மு.க. தலைமைக் கழக வாசலிலேயே அந்தக் கோஷத்தைக்  கேட்டபோதும், 'அப்படி கோஷங்கள் போடவேண்டாம்.' என்று  சொல்ல ஆள் இல்லாததால், கோஷம், கூடிக் கொண்டே போனது. 

"எடப்பாடியார்  முதல்வராக இருந்தாலும், கட்சியில் அண்ணன் தினகரனின் பதவிதான் பெரிது. இன்னும் ஒரு வாரத்தில் அண்ணன்தான்  பொதுச் செயலாளர். அடுத்தது  முதலமைச்சரும் ஆகிறார்." என்று தினகரன் ஆதரவாளர்களும் தங்கள் பங்குக்கு அங்கே  சொல்லிக் கொண்டிருந்தனர்.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக  பொறுப்பேற்ற கையோடு, செய்தியாளர்களைச் சந்தித்தார் தினகரன்.  "எப்போதும் மக்கள் எங்கள் பக்கம்தான். பாராளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க-வே  மகத்தான வெற்றி பெற்று சாதனை படைக்கும். எந்தக் கொம்பனாலும் அ.தி.மு.க-வை  அசைக்க முடியாது." என்றார்.  

'குடும்ப ஆட்சி நடக்கிறது என்ற  குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?' என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கொஞ்சமும் தாமதிக்காமல் பதிலளித்த தினகரன், "அண்ணா தி.மு.க என்பது  ஒன்றரைக் கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். சசிகலா குடும்பத்தினர் ஆட்சி, அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று தி.மு.க-வினர் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். எந்தத் தனி நபரும், குடும்பமும் இங்கு அதிகாரம் செலுத்த முடியாது. அப்படி அதிகாரம் செலுத்தவும் விடமாட்டோம்." என்றும் சொன்னார்.

டி.டி.வி. தினகரனிடமிருந்து இப்படி ஒரு பதிலை நடராஜன் தரப்பு சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். "குடும்ப ஆட்சிதான் நடத்தினோம், இனியும் நடத்துவோம்." என்று தஞ்சாவூரில் ம.நடராசன் பேசிய  பேச்சுக்கு அவர் குடும்பத்தில் இருந்தே வந்த எதிர்ப்புக் குரலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது என்று  அ.தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பு எழுந்தது.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபோதோ, சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வாகி இருந்தபோதோ 'குடும்ப ஆட்சி' குறித்த கேள்விக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் மற்ற கேள்விகளை மட்டுமே எதிர்கொண்டார் சசிகலா.

டி.டி.வி. தினகரன், அடுத்து சொன்னதுதான் இன்னும் ஹைலைட்டான விஷயம். "கட்சிக்கு எனது பணி தேவை என்பதை அறிந்து மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.  இக்கட்டான  இந்த நேரத்தில் என்னை  அவர்கள்தான்  கட்சிக்குத் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்கள்." என்றதுதான் அது.

டி.டி.வி. தினகரன் காலையில் அளித்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கத்தான் தீபக்-கின் குரலாக மாலையில் வெளிப்பட்டார் ம.நடராசன் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

தீபக் பேட்டி வெளியான சில நிமிடங்களில் டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளரான தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கையில், ஓ.பி.எஸ் வகித்த நிதித்துறை அமைச்சர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி தினகரன் சொல்வதைத்தான் இப்போது கேட்டாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதில், ம.நடராசனின் எதிர் நடவடிக்கைகள் எந்த அளவு எடுபடும் என்பது போகப்போகத்தான் தெரியும்.!

-ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்