வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (24/02/2017)

கடைசி தொடர்பு:21:49 (24/02/2017)

"இரட்டை இலையை மீட்போம்!" ஜெ.தீபா உறுதிமொழியின் பின்னணி

              தீபா

சிகலா ஆதரவு அ.தி.மு.கவிடமிருந்து இரட்டை இலையை மீட்போம் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி ஜெ.தீபா இன்று(வெள்ளி) சென்னையில் உள்ள அவரின் இல்லத்தில் தமது புதிய பேரவையின் அலுவலகத்தை காலையில் திறந்து வைத்தார்.பின்னர் மதுரவாயல் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.அதனைத் தொடர்ந்து தமது இல்லத்தில்,மதிய உணவு வழங்கி தமது ஆதரவாளர்களோடு  ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

மாலை 6 மணிக்கு சென்னை தி.நகர் சிவஞானம் சாலையில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,"எனது அரசியல் பிரவேசத்தைத் தற்போது அறிவிக்கிறேன். இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளான நன்னாளில் இந்த முடிவை அறிவிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.எங்களின் அரசியல் பிரவேசத்திற்கு ஏற்ற ஒரு இயக்கமாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கி இருக்கிறோம்.இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெற அ.தி.மு.க. தொண்டர்களும் தொடர்ந்து எங்களுடன் பயணித்து வெற்றியைத் தேடித் தருமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். பேரவையின் முக்கிய தீர்மானங்களை எங்களின் உறுதி மொழியாக ஏற்றுக்கொள்கிறோம்.

முதல் தீர்மானம்,ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நான் இருக்கவேண்டும் என்று தொண்டர்கள் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கையை நிறைவேற்ற பணிகளைத் தொடரவிருக்கிறேன்.இரண்டாவது,எனது தலைமையை ஏற்று அ.தி.மு.கவின் உண்மைத் தொண்டர்களுடன் தொடர்ந்து போராடி இரட்டை இலையை மீட்போம் என்ற உறுதி மொழியையும் ஏற்றுக்கொள்கிறேன்.

எனக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கும்,தமிழக மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று முதல் எனது அரசியல் பயணம் தொடங்கியுள்ளது.இனி வரும் காலங்களில் ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதற்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை சரியான பாதையிலும்,விவசாயிகளின் முன்னேற்ற பாதையிலும்,இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து தமிழகத்தை ஆசியாவிலேயே முதலாவது மாநிலமாகக் கொண்டுவர நாங்கள் பாடுபடுவோம்.

ஜெயலலிதாவின் கனவை நிஜமாக்கி அவரிடத்தில் இருந்து அவர் விட்டுச் சென்ற பணிகளை நான் தொடருவேன்.தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில்,ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறது. இதற்குப் பின்னால் இருந்த ஒரு துரோகக் கூட்டத்தையும்,அவர்களின் பிடியில் இருந்து தமிழக மக்களையும் விடுவிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் எனது பயணத்தை நான் தொடங்கி இருக்கிறேன்.என்னை நம்பி வந்த யாரையும் நான் கைவிட மாட்டேன்."என்று கூறினார்.

                  தீபா

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துப் பேசினார்.அப்போது,"இந்தப் பேரவை தொடர்ந்து மக்கள் பணிகளை  ஆற்ற வேண்டும் என்பதுதான் முதல் நோக்கம்.அம்மா அவர்களின் ஆட்சியை மீண்டும் அமைக்கவேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாக இருக்கும்.நாங்களும் ஓ.பி.எஸ்ஸும் எங்கேயும் வேறுபடவில்லை.அவருடன் நடந்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு.உண்மையான தொண்டர்கள் என் பின்னே இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.கண்டிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.என்னுடைய பயணத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுத்த பின்னர் ஓ.பி.எஸ். தரப்போடு இணைவது ஆலோசிக்கப்படலாம்.

போயஸ் கார்டன் இல்லம் குறித்து தீபக் கூறிய கருத்துக்கள் அவருடையவை.அவருக்குப் பின்னால் சசிகலா உறவினர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.பொறுத்து இருந்து பார்ப்போம் அவரின் முழுமையான கருத்துக்கள் கிடைக்கும் வரை, அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.நான் எங்களின் பேரவையில் பொருளாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன்.மற்ற பொறுப்புகள் குறித்து பின்னர் அறிவிக்கிறேன்.ஜெயலலிதா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.இதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்தக் குடும்பம்தான்.     

உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்.கூட்டணி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பதவியில் என்னை அமர வைப்பது குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்.மக்கள் பணியெல்லாம் நாமாக எடுத்துக்கொள்ள முடியாது.முதலில் அதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.இப்போது சசிகலா அதை தாமாகக்  கையில் எடுத்துக்கொண்டுள்ளார்.அவரிடம் கேளுங்கள்.மக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள். மக்களுக்காகப் பணிகள் செய்த ஜெயலலிதாவுக்குக் களங்கம் விளைவித்து அவர்கள் சுயநலத்திற்காக அவரின் குடும்பத்தினருக்கு தேவையானதை செய்து கொண்டிருந்தார்.நான் எனது வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்து உள்ளேன்.அதை அ.தி.மு.கவினரும் மக்களும் புரிந்துகொள்வார்கள்.  

சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து தீபக் கூறிய கருத்துக்களுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது.அது பற்றி இப்போதுநான் எதுவும் கூறிவிட முடியாது.இதற்கான பதில் என்னிடம் இப்போது இல்லை.இப்போதுதான் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.அவருடன் இருந்தவர் சிறையில் இருக்கிறார்.ஆகையால் கருத்து எதுவும் நான் தெரிவிக்க விரும்பவில்லை.அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு என்ன என்ன சிகிச்சைகள் அளித்து வந்தார்கள் என்று தொடர்ந்து கேட்டு வருகிறேன்.இதுவரையில் பதில் இல்லை." என்று ஜெ.தீபா கூறினார்.

பின்னர்,தனது இல்லத்தின் பால்கனி பகுதிக்கு வந்து, கூடியிருந்த ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொடியையும்,பெயரையும் அறிமுகப்படுத்தினார். 

- சி.தேவராஜன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்