பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நிறுத்தம் ! | Vaikom Vijayalakshmi calls off her marriage

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (26/02/2017)

கடைசி தொடர்பு:12:17 (26/02/2017)

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நிறுத்தம் !

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம் நின்று போனதாக அறிவித்துள்ளார். மாப்பிள்ளை வீட்டார் விதித்த சில கட்டுப்பாடுகள்  திருமணம் நின்று போக காரணமாக அமைந்து விட்டது. 

வைக்கம் விஜயலட்சுமி

பிரபல  பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும் கேரளத்தைச் சேர்ந்த, சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 13-ம் தேதி நிச்சயம் நடைபெற்றது. வரும் மார்ச் 29-ம் தேதி  இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. 'கண்கள் இல்லாத தனக்கு, தனது வருங்கால கணவரே கண்களாக கிடைத்துள்ளார்' என்று ஒரு முறை விஜயலட்சுமி நெகிழ்ச்சியாக கூறியிருந்தார். 

இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த வைக்கம் விஜயலட்சுமி, தனது திருமணம் நின்று போன அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''திருமணத்திற்கு பிறகு தனது இசை வாழ்க்கையை தொடர வேண்டாம் என சந்தோஷ் கூறுகிறார். பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராக பணி செய்யுமாறும் சொல்கிறார். முதலில் எனக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்பதாக சொன்ன அவர், இப்போது எனது லட்சியத்துக்கே தடை போடுகிறார். திருமண நிச்சயத்தின் போது, எனது வீட்டில் என்னுடன் வாழ்வதாக சொன்னார். ஆனால், இப்போது அவருடைய உறவினர்கள் வீட்டில் வாழ வேண்டும் என கூறுகிறார். அதனால், இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. திருச்சூரில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். இந்தத் திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது. இது முற்றிலும் நான் எடுத்த முடிவு. என்னை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்..

விஜயலட்சுமியின் தந்தை முரளீதரன், “சந்தோஷ், அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார் . அது ஏற்புடையதாக இல்லை” எனக் கூறியுள்ளார்.  பிறவியிலேயே பார்வையற்ற வைக்கம் விஜயலட்சுமிக்கு ஆயுர்வேத சிகிச்சை வழியாக ஓரளவு பார்வை  வந்தது. முற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கு பொருள்களை, நிழல் உருவங்களை பார்க்க முடிந்த நிலையில்தான், திருமண நிறுத்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக சந்தோஷ், ''விஜயலட்சுமியை மனைவியாக பெற தவம் செய்திருக்க வேண்டும  எனது 6 வயதில் தந்தையை இழந்தேன். எனது தாயையும் இழந்தேன். தனிமையின் வலி எனக்குத் தெரியும். கடவுள் அருள், வலி, இசை இந்த மூன்றும்தான் எங்களை இணைத்திருக்க வேண்டும். விஜயலட்சுமியை மனைவியாக பெற பாக்கியம் செய்திருக்க வேண்டும்' என கூறியது குறிப்பிடத்தக்கது. 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைக்கம் என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறவியிலேயே பார்வையற்றவர். முரளீதரன் - விமலா தம்பதியரின் ஒரே மகள். விஜயலட்சுமிக்கு பார்வையை பறித்த கடவுள் 'குயில் ' போன்ற குரலைக் கொடுத்திருக்கிறார்.  எம்.எஸ்.வி, இளையராஜாவின் பாடல்கள்தான் விஜயலட்சுமியின் குரல் வளத்துக்கு மேலும் தீனி போட்டு வளர்த்தன.

விஜயலட்சுமியின் மானசீக குரு ஏசுதாஸ். ஆறாவது வயதிலேயே  விஜயலட்சுமி தனது குருநாதர் ஏசுதாசைச் சந்தித்தார். சிறு வயதிலேயே தேர்ந்த பாடகர்கள் பாடுவதற்கும் கடினமான தோடி, பைரவி போன்ற அதிசய ராகங்களில் விஜயலட்சுமிக்கு இருந்த ஞானத்தைக் கண்டு ஏசுதாஸ் வியப்படைந்தார்.  திரைப்படத்துறைக்குள் நுழைவதற்கு முன், சென்னையில் மட்டும் 400 சபாக்களில் விஜயலட்சுமி பாடியுள்ளார். வரும் மார்ச் 5ம் தேதி வீணை காயத்ரியுடன் 51 பாடல்களை 3 மணி நேரத்தில் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.

இத்தனை திறமையும், கலையார்வமும் மிக்க விஜயலட்சுமிக்கு தக்க துணை கிடைத்ததாய் மகிழ்ந்திருந்த நிலையில், அவரது  இந்த அறிவிப்பு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும், அவருக்கு ஆறுதலாய், பக்க பலமாய் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்