80 சதவிகித கோக்,பெப்சி பானங்களின் விற்பனை குறைந்திருக்கிறதாம்..! உண்மையா? | Is there a fall in sale of Pepsi and Coca Cola in Tamil Nadu?

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (26/02/2017)

கடைசி தொடர்பு:15:10 (26/02/2017)

80 சதவிகித கோக்,பெப்சி பானங்களின் விற்பனை குறைந்திருக்கிறதாம்..! உண்மையா?

ஜல்லிக்கட்டு

மிழகத்தில் பெப்சி ,கோக் குளிர்பானங்களுக்கு எதிராக போராட்டக் குரல்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒலித்துக் கொண்டிருந்தன. அதில் உடல்நலக்குறைவு , சுற்றுப்புறச் சூழல் மாசு, நீர் ஆதாரம் பாதிப்பு உள்ளிட்ட  பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடந்து வந்துள்ளன.   

 கடந்த ஜனவரி 17-ம் தேதி சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி தொடங்கிய போராட்டம், உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களையும்  ஒன்றிணைய வைத்தது. அப்போது  ஜல்லிக்கட்டுக்கு  தடை வர காரணமாக இருந்த அமெரிக்க  இயக்கமான பீட்டாவையும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்  கடுமையாக விமர்சித்தனர். தமிழக பாரம்பரியத்தைச் சிதைக்க ,எந்த நாட்டைச்  சேர்ந்த இயக்கம் முயன்றதோ அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் கோக் ,பெப்சி  குளிர்பானங்களுக்கு  தடை விதிக்க வேண்டும் என்று குரல்கள் ஒலித்தது.பெப்சி,கோக் குளிர்பானங்களுக்கு எதிரான இளைஞர்களின் இந்த முழக்கம்  சமூக வலைதளங்களில் தீயாக பரவியது .இதனைத்தொடர்ந்து  இதுகுறித்த விழிப்புணர்வு தகவல்கள், வீடியோக்கள்,  மீம்ஸ் போன்றவையும் தொடர்ந்து பதிவாகின .

இந்த நிலையில், இளைஞர்களின் பெப்சி,கோக் குளிர்பானங்களுக்கு எதிரான  முழக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகத்தில் வரும் மார்ச் 1 -ம் தேதியில் இருந்து அனைத்து கடைகளிலும் பெப்சி ,கோக் உள்ளிட்ட வெளிநாட்டு தயாரிப்பு குளிர்பானங்களின்  விற்பனை  நிறுத்தப்படுகிறது என்று வணிகர் சங்கங்கள்  அறிவிப்பு  வெளியிட்டன. 

குளிர்பானங்கள்

இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து  குளிர்பானங்கள்  விற்பனை குறையத் தொடங்கி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரம ராஜாவிடம் பேசியபோது, "பெப்சி ,கோக் குளிர்பானங்கள் வரும் மார்ச்  ஒன்றாம் தேதி முதல் முழுமையாக நிறுத்தப்படுகிறது .குளிர்பானம் மற்றும் இதர கடைகளை சேர்த்து  21 லட்சம் கடைகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 80  சதவீத பெப்சி,கோக்  குளிர்பானங்களின்  விற்பனை குறைந்துவிட்டது.இதனால் தமிழகத்தில் உள்ள வணிகர்களுக்கு மாதத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய்  நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதி இந்த இழப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.நச்சுத்தன்மை கலந்த குளிர்பானங்களைக் குடிப்பதால் மக்களுக்கு  பல்வேறு  உடல்நலக்கோளாறுகள்  ஏற்படுகிறது என்ற நல்ல நோக்கத்தில் இந்த  நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளோம். 

விக்ரமராஜாமார்ச் ஒன்றாம் தேதியில் இருந்து குளிபானங்கள் குறித்த விளம்பரங்கள் அகற்றப்படும்.அது குறித்து அனைத்து கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளிமார்க் ,பவண்டோ உள்ளிட்ட  உள்நாட்டு குளிர்பானங்களும்  இயற்கையில் கிடைக்கும் பதநீர், இளநீர் போன்ற வற்றையும் விற்க  நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

 தண்ணீருக்கு பதிலாக குளிர்பானங்களை குடிக்க வைக்கும் நடைமுறையை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பழக்கப்படுத்தி வருகின்றார்கள். உணவு விடுதிகளில் சாப்பிடும்போது தண்ணீருக்குப் பதிலாக இது போன்ற குளிர்பானங்களைக் குடிக்கும் நிலையை  நாம் பார்க்க முடியும் .

இந்த நச்சுத்தன்மை கலந்த குளிர்பானங்களுக்கு தடைகோரி  நீதிமன்றம் சென்றபோது , குளிர்பான நிறுவனங்களின் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் 'உங்களுடைய  மாநிலத்தின் தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப குளிர்பானங்கள் கிடைக்கும் என்ற தகவலைப் பதிவு செய்தது. இதனை ஏற்ற நீதிபதிகள் அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்துவிட்டார்கள் .மேலும் எங்களுடைய அமைப்பு சார்பில் நச்சுத்தன்மை கொண்ட  குளிர்பானங்களைத் தடுப்பதற்காக  பலமுறை போராடிவிட்டோம் . நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு தற்போது  தீர்வு கிடைக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி. கேடு விளைவிக்கும் இந்த குளிர்பானங்களை முற்றிலும்  ஒழிப்பது என்பது  மக்கள் கையில் தான் உள்ளது"  என்றார் .

'80 சதவிகித  பெப்சி, கோக் குளிர்பான விற்பனை குறைந்துள்ளதாக'  விக்கிரமராஜா கூறும் தகவலை ஆமோதிக்கிறார்.தமிழ்நாடு பி.எம்.கணேஷ்ராம்நுகர்ப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர்  பி.எம்.கணேஷ்ராம். ''இந்த அறிவிப்பு வந்த நாளில் இருந்து விநியோகஸ்தர்களின் முதலீடு மிகவும் முடங்கிவிட்டது . தமிழகத்தில் பெப்சி,கோக் குளிர்பான தொழிலை மட்டும் நம்பி சுமார்  800 விநியோகஸ்தர்கள் உள்ளனர். இதில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேரும் உள்ளனர்.

பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் தங்களது சொத்துக்களை வங்கிகளில் அடமானம் வைத்துத்தான் தொழிலை செய்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது 'மார்ச் 1-ம் தேதியில்  இருந்து  குளிர்பானங்கள் விற்கவில்லை.' என்றால் அவர்களுடைய வாழ்கை கேள்விக்குறியாகி விடும். இந்த நடவடிக்கையால் நேரடியாக அவர்களுடைய குடும்பங்கள் பாதிக்கப்படும்  என்பதால் இதனை எங்களால் ஆதரிக்க முடியாது. மக்களாகவே 'இந்த குளிர்பானங்கள் எங்களுக்கு வேண்டாம்.' என்று கைவிட்டாலோ அல்லது  அரசாங்கம்  இதற்குத் தடை கொண்டு வந்தாலோ அதனை ஏற்றுக் கொள்ளலாம். குளிர்பானங்களை விற்கக்கூடாது என்று வணிகர் சங்கங்களே முடிவெடுத்திருப்பதை ஏற்க முடியாது.'' என்றார்.

பின் குறிப்பு: கோலா பானங்கள் விற்பனை இந்தளவுக்குக் குறைந்துள்ளதா என்பதை பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்கள் ஊர்ஜிதப்படுத்தும் வரை, இதன் நம்பகத்தன்மை ஆராய்ச்சிக்குள்ளானதே. இது தொடர்பாக கோலா நிறுவனங்கள் விகடனுக்கு விளக்கமளிக்க முன்வந்தால், அதை தக்க பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்!

 

கே. புவனேஸ்வரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்