வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (27/02/2017)

கடைசி தொடர்பு:10:31 (28/02/2017)

சென்னை சூப்பர் கார்களின் ‘மிட்நைட்’ அட்டகாசங்கள் - வீடியோ ஆதாரம் இதோ!

ரேஸ் கார்கள்

சூப்பர் கார்கள் என்றால் பாதுகாப்பு வசதிகளிலும் ‘சூப்பர்’தான். மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் சென்றாலும், பிரேக் பிடித்தால் உடனடியாக நிற்கும் அளவுக்கு கட்டுப்பாடு கொண்டவை இந்தக் கார்கள். ஆனால், ஒரு சூப்பர் கார் திடீரென்று பேரிரைச்சலுடன், வேகமாக கடந்து செல்லும்போது சாமானியர்களுக்குப் பதற்றம் ஏற்படவே செய்கிறது. என்னதான் சூப்பர் கார் உரிமையாளர்கள் அதற்குக் காரணம் கூறினாலும், சூப்பர் கார்கள் ரேஸ் டிராக்கிலேயே வேகமாக ஓட்டப்பட வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.   

சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், வார இறுதியில் சூப்பர் கார்கள் 'ஜாலி ரைடு' செல்வது புதிய விஷயம் இல்லை. ஆனால், திடீரென்று காவல்துறை இந்தக் கார்களை மடக்கிப் பிடித்து நடவடிக்கை எடுப்பது புதிய விஷயம்தான். 

ஏன், இந்த திடீர் நடவடிக்கை என காவல்துறையினரிடம் விசாரித்தோம்?

சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர் அரவிந்தனிடம் கேட்டபோது, ‘கிழக்குக் கடற்கரை சாலையில் கார்கள் வேகமாக ஓட்டப்படுவதாக, கடந்த வாரம் எங்களுக்கு ஒரு புகார் வந்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அதிகாலை இரண்டு மணியில் இருந்து எஸ்.ஐ முகேஷ் குமார், எஸ்.ஐ பூபதி மற்றும் போலீஸ்  டீமுடன் சாலையைக் கண்காணித்து வந்தனர்.

ஈ.சி.ஆர் சாலையில் ஒழுங்கற்ற நிலையில், வளைந்து நெளிந்து சிலர் கார்களை ஓட்டிச் சென்றிருக்கிறார்கள். உத்தண்டி சுங்கச்சாவடியில் அவர்களை மடக்கிப் பிடித்தோம். ஆனால், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சட்டம்-ஒழுங்கு காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டோம். ஒரு எஸ்.ஐ-யும், இன்ஸ்பெக்டரும் இதுதொடர்பாக புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது’ என்றார். 

சூப்பர் கார்

நீலாங்கரை உதவி ஆணையர் (சட்டம்- ஒழுங்கு) பாண்டியன் இதுபற்றி கூறும்போது, ‘இவர்கள் பொதுவாக வார இறுதி நாட்களில் குழுவாகச் சேர்ந்து வேகமாக ஓட்டுகிறார்கள். மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேல் வேகம். இரைச்சல் வேறு மிக அதிகமாக உள்ளது. இவர்கள் குழுவாக ஓட்டுவதற்கு முன் அனுமதி பெறவில்லை. உத்தண்டி சுங்கச் சாவடியில் காலை 9 மணிக்கு, டிராஃபிக் போலீசார் இவர்களை சட்டம்-ஒழுங்கு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்கள் காருக்கான ஆவணங்களையும் காட்டவில்லை. கார்களை நிறுத்திய பிறகு, ஆரஞ்சு வண்ண லம்போகினி அவென்ட்டடார் (TN 10 AU 0555 ) ஒன்று மட்டும், கிளம்பிச் சென்றது. அதையும் மீட்டு விட்டோம். மொத்தம் 10 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரை ஓட்டி வந்தவர்கள் அத்தனை பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 28.2.2017 அன்று கார்களை இன்ஸ்பெக்டரிடம் காட்டி, கார்களில் டெக்னிக்கல் விதிமீறல்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதன்பிறகே கார்களை விடுவிப்பது பற்றி முடிவெடுக்க முடியும்’ என்றார். 

இதுதொடர்பாக, சென்னையின் சூப்பர் கார் உரிமையாளர்கள் தரப்பில் பேசியபோது, ‘நான்கு மணி நேரத்துக்கும் மேல் எங்கள் கார்களைப் பிடித்து வைத்திருந்தனர். அதற்கான காரணமும் அவர்களிடம் இல்லை. நாங்கள் சட்டத்தை மீறி எதுவும் செய்யவில்லை. லம்போகினி டிரைவர் ராகவ் கிருஷ்ணா, காவல்துறையை மீறிக் கிளம்பியது அவருடைய பிரச்னை. அவர் எங்களைச் சேர்ந்தவர் இல்லை. அவரைத் தவிர மற்ற அனைவரும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். எங்களைப் பிடித்து வைத்ததற்கான காரணம்கூட காவல்துறையிடம் இல்லாதபோது, நாங்கள் காருக்கான ஆவணங்கள் அனைத்தும் காட்டினோம். ராகவ், தப்பிச் சென்ற கோபத்தை எங்கள் மீது காவல்துறையினர் காட்டினார்கள்’ என்றார். 

 

போலீஸ்காரருக்கு காயம் ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் லம்போகினி அவென்ட்டடார் காரை ஓட்டியது ராகவ் கிருஷ்ணா. சமூக வலைதளங்களில் இவரது லம்போகினி கார் மிகப் பிரபலம். இவருடைய தந்தை திவாகரனிடம் பேசினோம். ‘என் மகனுக்கு ஆஸ்துமா பிரச்னை உண்டு. காலை 6 மணியில் இருந்து ராகவ் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். நான்கு மணிநேரமாக காரணமில்லாமல் நிறுத்தப்பட்டதால்தான் அவர் கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால், காவல்துறையினர் அவரையும், காரையும் மீண்டும் அங்கு கொண்டு வரச் சொன்னார்கள். எனவே, சட்டத்தின்படி, காரை ஒப்படைத்து விட்டு வந்துவிட்டோம்’ என்று கூறினார்.

அவரிடம் நமக்கு வாட்ஸ்-அப்பில் அதே லம்போகினி கார் மிகவும் வேகமாக ஓட்டப்படும் வீடியோக்கள் வந்த தகவலைச் சொன்னபோது, ‘என் மகன் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. நல்ல பையன். ஒழுங்காகத்தான் கார் ஓட்டுவான்’ என்றார். 

சென்னையின் நள்ளிரவு நேரங்கள்தான் சூப்பர்கார்களுக்கு ஏற்ற நேரம். அடையாறு பாலம், மத்திய கைலாஷ் - டைடல் பார்க், பெசன்ட் நகர், இ.சி.ஆர் போன்ற சீரான சாலைகளில் இந்தக் கார்களை வேகமாக இயக்க முடியும். நீங்கள் சாலையைக் கடக்கும்போது, இந்தக் கார்கள் வந்தால், அதன் வேகத்தைக் கணக்கிடவே முடியாது. ஏன் என்கிறீர்களா? மேலே உள்ள வீடியோவைப் பாருங்கள். நமக்கு வாட்ஸ்-அப்பில் வந்த வீடியோக்களின் தொகுப்பு இது. சென்னையின் சூப்பர்கார் அட்டகாசங்களில் இது சாம்பிள்தான்!

-ர. ராஜா ராமமூர்த்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்