கோட்டூர்புரத்தில் விசாரிப்பது  தீவிரவாதிகளைத்தானா ?

                  போலீஸ் நிலையம்

.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் வளர்ச்சிக்கு பண உதவி செய்ததாக சென்னையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரத்தின் பின்னணியை விசாரித்தால், ‘அட’ என்று வியக்க வைக்கிறது.சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் அவ்வப்போது கொடுக்கும் வாக்குமூலங்கள்தான் முக்கியமான பல உள் விவகாரங்களை வெளியில் கொண்டு வரும். அந்த வகையில், தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி ராஜஸ்தான் சிறையில் இருக்கும் ஜமீல் அகமது கொடுத்த வாக்குமூலமும் அமைந்துவிட்டது. ஜமீல் அகமதுவின் வாக்குமூலமும், அவருடைய லேப்-டாப், வங்கிப் பரிவர்த்தனை தகவல்களும்தான் ஒட்டுமொத்த கூட்டுப்படைப் போலீசாரை உஷார் செய்தது. 

 ஜமீல் அகமதுவின் லேப்-டாப் தகவலில், ‘இயக்கப் பணிக்கு ஆள் சேர்க்க, பணம் திரட்ட  பலரும் பொருளாதார ரீதியில் உதவினர். தமிழ்நாட்டில் அப்படி உதவியதில்  சென்னையைச் சேர்ந்த முகமது இக்பால் முக்கியமானவர். அடுத்த முறை நான் அங்கு (ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்) வரும்போது அவரையும் அழைத்து வருகிறேன்.’ என்று அதில்  குறிப்பிட்டிருந்தாராம்.  இதையடுத்து முகமது இக்பாலைப் பிடிப்பதற்கு சென்னையில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ராஜஸ்தான் போலீசார் உதவி கேட்டனர் .  மயிலாப்பூர், பஜார் தெருவைச் சேர்ந்த முகமது இக்பால், தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி மத்திய புழல்சிறையில் இருப்பதால்  போலீசார் புழல் சிறைக்குச் சென்று முகமது இக்பாலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸ் எஸ்.பி. விகாஷ்குமார்  டீம் கடந்த 13-ம் தேதி முகமது இக்பாலை ராஜஸ்தான் கொண்டு சென்றது. அங்கே நடைபெற்ற விசாரணையில், முகமது இக்பாலுடன் தொடர்பில் இருந்த சில முக்கியப் புள்ளிகள் சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் உள்ளதாக தெரியவந்தது. இந்தத் தகவலால், ராஜஸ்தான் போலீசார் மீண்டும் கடந்த 21-ம் தேதி, முகமது இக்பாலை சென்னை அழைத்து வந்தனர். கோட்டூர்புரம் காவல் நிலையத்தின் இணைப்பு கட்டடத்தில் முகமது இக்பாலை வைத்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
 

விசாரணைப் பிரிவில் உள்ள ஒரு தரப்புப் போலீசார், “ முகமது இக்பால், சென்னை அண்ணாசாலை ரிச்சி தெருவில், எலக்ட்ரானிக் பொருட்கள் கடை வைத்திருக்கிறார். பெயருக்கு இந்தத் தொழில் செய்வதாகக் காட்டிவிட்டு முக்கியத் தொழிலாக தங்கக் கடத்தல்தான் செய்கிறார். உலகளவில் முகமது இக்பாலின் தங்கக் கடத்தலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத ஆட்கள் உதவி செய்கின்றனர். பதிலுக்கு முகமது இக்பால் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்துள்ளார். உயிரையே தியாகம் செய்யக்கூடிய ஆட்களை  ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தேடி பிடிக்கும் பணியையும் அவர் ஏற்றுள்ளார். ராஜஸ்தான் சிறையில் இருக்கும் ஜமீல் அகமது மூலம் தன்னுடைய கடத்தல் ‘நெட்-வொர்க்’கையும் விரிவுபடுத்தியுள்ளார்.” என்கிறார்கள். இன்னொரு பக்கமோ, “ராஜஸ்தானில் இருக்கும் ஜமீல் அகமது, சென்னையில் சிக்கியிருக்கும் முகமது இக்பால் மேலும் விசாரணையில் இருக்கும் முகமது இக்பாலின் ஐந்து நண்பர்கள் என யாரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இணைப்பில் இல்லை. இவர்களின் வேலை தங்கக் கடத்தல் மட்டும்தான்! உண்மையான ஆட்களைப் பிடிக்காமல், தமிழக உளவுப்பிரிவு போலீசார்  மொத்தமாகக் கோட்டை விட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.’’ என்றனர்.

                                தீவிரவாதம் விசாரணை

எப்போதுமே ஒருவர் போனால் இன்னொருவர் என்று பொறுப்புக்கு வரத் தயாராய் இருக்கும் உளவுப்பிரிவு தலைவர் (ஐ.ஜி.) பதவி இந்த முறை தலைதெறிக்க ஓடவிடும் பதவியாக மாறிப் போய் இருக்கிறது.  அரசின் ஆட்சி அதிகாரத்தின் ஸ்திரத்தன்மையற்ற நிலையின் காரணமாகவே ஐ.ஜி. பதவியை ஏற்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, “பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் வழியாக சென்னைக்குள் 6 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர்.” என்று கடந்த 22-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உளவுப்போலீஸ் கோட்டை விட்டதில் சு.சுவாமி சொல்லும் அந்த ஆறு பேர் இருக்கிறார்களா? என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

- ந.பா.சேதுராமன்

படம் : ஜெரோம்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!