வெளியிடப்பட்ட நேரம்: 04:27 (01/03/2017)

கடைசி தொடர்பு:04:26 (01/03/2017)

ஃபேஸ்புக் கணக்கு தொடங்கு... ஆளைப் புடி! - இது தி.மு.க-வின் புது டிரெண்ட்

 

ஃபேஸ்புக் பயன்படுத்தும் ஸ்டாலின்

'தெருமுனைக் கூட்டம்... பொதுக்கூட்டம்... மாநாடு' என்று பேசிவந்த அரசியல் கட்சியினர், இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என்று பேச ஆரம்பித்துவிட்டனர். காசு கொடுத்து ஆட்களைப் பிடிப்பதற்கே அரசியல் கட்சிகள் திண்டாடிவரும் நிலையில், சமூக வலைதளங்களின் மூலம் சத்தமே இல்லாமல் லட்சம் இளைஞர்கள் மெரினாவில் ஒன்றிணைந்ததைப் பார்த்தப் பிறகு... அரசியல் கட்சிகளும் இப்போது சமூக வலைதளங்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி உள்ளன. 

அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்தபோது அவருக்கு அதீத ஆதரவு சமூக வலைதளங்கள் மூலம்தான் கிடைத்தது. சசிகலாவுக்கு எதிரான கருத்துகளும் அதே சமூக வலைதளங்கள் மூலம்தான் பட்டித்தொட்டி எங்கும் பரவியது. சமூக வலைதளங்களுக்கு என்று தனி அணிகளை இப்போது அனைத்துக் கட்சியினரும் அமைத்துள்ளனர். இதற்காக தி.மு.க., கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே தனியாக ஒரு குழுவை அமைத்துச் செயல்படுத்திவந்தது. எந்தக் கருத்தும் இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும் போய்ச் சேர வேண்டும் என்றால், இனி சமூக வலைதளங்களின் மூலமே அது சாத்தியமாகும் என்பதை நன்றாக உணர்ந்திருக்கும் தி.மு.க-வினர், இதுகுறித்து இன்று (28-02-17) சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதித்தனர்.

மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேசிய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ''தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மாவட்டரீதியாக நீங்கள் அமைப்பினை வலுவாக வைத்துக்கொள்ளுங்கள். புதிய இளைஞர்களைக் கட்சிக்குள் கொண்டுவாருங்கள். அனைவரும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துங்கள். நம்மைப்பற்றி அதில் பகிரப்படும் கருத்துகளுக்கு பதில் அளியுங்கள். மாவட்டந்தோறும் இதற்கு என தனியாக ஒரு குழுவையும் நியமனம் செய்து, அதில் நம் கட்சியின் தகவல்களைப் பரப்புரை செய்யுங்கள்'' என்று ஆலோசனை வழங்கினார்.
 
தி.மு.க-வின் சில மூத்த மாவட்டச் செயலாளர்களுக்கு டச் போன்களையே சரியாக யூஸ் பண்ணத் தெரியாத நிலையில், செயல் தலைவரின் இந்த அதிரடி யோசனை அவர்களை யோசிக்க வைத்துள்ளது. கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்த மாவட்டச் செயலாளர்கள், ஊருக்கு போன் போட்டு... ''காலேஜ் பசங்களை ரெடி பண்ணுங்கப்பா... உள்ளாட்சித் தேர்தலுக்குள் தளபதி உத்தரவை அமல்படுத்தி ஆகணும்'' என்று உத்தரவு போட்டனர். தி.மு.க-வில் கருணாநிதி தொடங்கிவைத்த ஃபேஸ்புக் புரட்சி, இப்போது மாவட்டச் செயலாளர்களில் இருந்து கீழ்நோக்கிச் செல்லத்தொடங்கி இருக்கிறது.

- அ.சையது அபுதாஹிர் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்