வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (01/03/2017)

கடைசி தொடர்பு:12:12 (01/03/2017)

எங்கே நிர்வாகிகள் பட்டியல்? - அதிருப்தியில் தீபா ஆதரவாளர்கள்

'எம்.ஜி.ஆர். அம்மா தீபா' பேரவையின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதால், தீபா ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரின் அண்ணன் மகள் தீபாவுக்கு அ.தி.மு.க.வில் ஒரு தரப்பினர் ஆதரவளித்தனர். அவர்கள், தீபாவை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதாவின் பிறந்த தினமாக பிப்ரவரி 24ல் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா' பேரவையைத் தொடங்கியதோடு, கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார் தீபா. அதோடு, ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். இதனால், தீபாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதியதாகத் தொடங்கப்பட்ட பேரவைக்குத் தலைவராக சரண்யா, செயலாளராக ராஜா, பொருளாளராக தீபா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மாநில நிர்வாகிகளுக்கு அடுத்து மற்ற நிர்வாகிகளின் பட்டியல் கடந்த 27-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை ஆவலுடன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், மார்ச் 1-ம் தேதியான இன்றும் அந்தப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், தீபாவின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தீபா தரப்பினர் கூறுகையில், "மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜா மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. இதனால், புதிய நிர்வாகிகள் நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எங்களது ஆதரவாளர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை. தினமும் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் வருகின்றனர். மக்கள் சேவை குறித்தும், இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துகின்றனர். விரைவில் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும்" என்றனர்.

ஆதரவாளர்கள் கூறுகையில், "அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசலில், தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் உள்ளனர். இதற்கிடையில் பன்னீர்செல்வம் அணியினர் மக்களைச் சந்தித்துவருகின்றனர். அவர்கள் செல்லும் இடம் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. தீபாவும், பன்னீர்செல்வமும் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. தீபா பேரவை என்று தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக செலவும்செய்துள்ளோம். தற்போது, 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்று தொடங்கிய தீபா, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். தமிழகம் முழுவதும் தீபா, சுற்றுப்பயணம் மேற்கொண்டால் மட்டுமே மக்கள், கட்சியினரின் ஆதரவைப்  பெற முடியும். பன்னீர்செல்வம் அணியினருடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பான அறிவிப்பைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். பேரவை தொடங்கிய பிறகும் அமைதியாக இருப்பதால், அவரை நம்பி வந்துள்ளவர்கள் சோர்வடைந்துள்ளனர். எனவே, நிர்வாகிகளை உடனடியாக நியமித்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும். மேலும் பேரவையைக் கட்சியாக மாற்ற வேண்டும்" என்றனர்.

-எஸ்.மகேஷ்  

 


டிரெண்டிங் @ விகடன்