கச்சத்தீவு திருவிழாவிலும் ஊழல்?!  -பதறும் பாரம்பரிய மீனவர்கள்  | Fishermen are worried as Corruption issue increases in Katchatheevu festival

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (01/03/2017)

கடைசி தொடர்பு:13:05 (01/03/2017)

கச்சத்தீவு திருவிழாவிலும் ஊழல்?!  -பதறும் பாரம்பரிய மீனவர்கள் 

கச்சத்தீவு

ச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா வருகிற 11-ம் தேதி நடக்கவிருக்கிறது. ' நாட்டுப் படகில் சென்று அந்தோணியாரை வழிபடுவதுதான் பாரம்பரிய மீனவர்களின் வழக்கம். பாதிரியார்களின் வசூல் பாதிக்கப்படுகிறது என்பதற்காக எங்களைப் புறக்கணிக்கின்றனர்' என வேதனைப்படுகின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள். 

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்த கச்சத்தீவு 1974-ம் ஆண்டு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. இதற்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்பதை வாழ்வின் கடமையாகவே கடைப்பிடித்து வருகின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள். இந்நிலையில், நாட்டுப் படகில் சென்று அந்தோணியாரை வழிபடுவதற்குத் தடைவிதித்துள்ளது இலங்கை அரசு. “ கச்சத்தீவு ஒப்பந்தத்தை காலாவதியாக்குவதற்கு உண்டான அனைத்து வேலைகளிலும் இலங்கை அரசு ஈடுபடுகிறது. அதற்கு இந்திய பாதிரியார்களும் ஒத்துழைக்கின்றனர். நூறு வருடங்களுக்கும் மேலாக நாட்டுப் படகில் சென்றுதான் அந்தோணியாரை வழிபட்டு வருகிறோம். தற்போது நாட்டுப் படகில் சென்று வழிபடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்கள் தடைவிதித்துள்ளனர்” எனக் கொந்தளிக்கிறார் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி. தொடர்ந்து நம்மிடம் பேசினார். 

“ இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் தலைதூக்கி இருந்ததால், 83-ம் ஆண்டில் கச்சத்தீவு செல்வதற்குத் தடை விதித்தது இலங்கை. அதன்பிறகு, 2007-ம் ஆண்டு தடையை மீறி பாதிரியார் அமல்ராஜ் தலைமையில் அந்தோணியாரை வழிபடச் சென்றோம். 2009-ம் ஆண்டு புலிகளுடனான போருக்குப் பிறகு, 2010-ம் ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு அனுமதி கொடுத்தது இலங்கை அரசு. நாங்களும் எங்களுடைய வல்லத்தில்(நாட்டுப்படகு) குடும்ப சகிதமாக அந்தோணியாரை வழிபட்டு வந்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக வல்லத்தில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. காரணம். திருவிழாவுக்கு அனுமதி கொடுக்கும் பாதிரியார்களின் வசூல் பாதிக்கப்படுவதுதான்” என்றவர், “ அந்தோணியார் கோயில் திருவிழாவை வியாபாரத்தலமாகப் பார்க்கும் போக்கு அதிகரித்துவிட்டது. திருவிழாவுக்குச் செல்பவர்களிடம் 1,300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையில் வசூல் செய்கின்றனர். உள்ளூர் மீனவர்களிடம் 1,300 ரூபாய் வசூலிக்கின்றனர். இதில், 300 ரூபாயை பராமரிப்புச் செலவாக பாதிரியார் எடுத்துக்கொள்கிறார். மீதமுள்ள தொகையை விசைப் படகுக்கும் உணவுக்கும் செலவிடுகின்றனர்.

கச்சத்தீவு, அந்தோணியார் கோவில் திருவிழா

அதுவே, எங்களுடைய நாட்டுப் படகில் இரண்டாயிரம் ரூபாய்க்கு டீசல் அடித்தால், பத்துப் பேர் வரையில் கச்சத்தீவு சென்றுவிடுவோம். பாதிரியார் கட்டுப்பாட்டில் சென்றால், இருபதாயிரம் ரூபாய் வரையில் எங்களுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. தவிர, அந்தோணியார் திருவிழாவுக்கு செல்பவர்களில் 20 சதவீதம் பேர்தான் உள்ளூர் மீனவர்கள். மீதமுள்ள 80 சதவீதம் பேர் வெளியில் இருந்து திருவிழாவுக்கு வருகிறவர்கள். இவர்களிடம் ஐந்தாயிரம் ரூபாய் வரையில் வசூல் செய்கின்றனர். அந்த வகையில் 15 லட்ச ரூபாய் வரையில் பாதிரியார்களுக்குக் கிடைக்கிறது. எங்களை அனுமதிப்பதால், அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. இதனை எதிர்த்து சின்னத்தம்பிநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். கடந்த 24-ம் தேதி வழங்கப்பட்ட உத்தரவில், ‘மீனவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்’ என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘எங்களுடைய கோரிக்கை என்ன?’ என்று கேட்பதற்குக் கூட மாவட்ட ஆட்சியர் நடராஜனுக்கு விருப்பமில்லை. இதனைக் கண்டித்து நாளை காலை ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடத் தீர்மானித்திருக்கிறோம்” என்றார் கொந்தளிப்போடு. 

“ பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் செல்ல அனுமதி மறுப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ‘எங்கள் படகுகள் பாதுகாப்பற்றவை’ என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்கள் ஒற்றை வார்த்தையில் முடித்துவிடுகின்றனர். நாங்கள் ஆறு நாட்கள் வரையில் கடலிலேயே இருந்து மீன் பிடித்து வருகிறோம். இயந்திரத்தின் மூலம் படகைச் செலுத்துகிறோம். இதன் பாதுகாப்புத்தன்மை குறித்து எந்தக் கேள்விகளும் எழவில்லை. பாரம்பரிய மீனவர்களைத் தடுப்பதன் மூலம் கச்சத்தீவு ஒப்பந்தத்தை காலாவதியாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது இலங்கை. அதற்குத் தமிழக அரசும் துணைபோவதாகவே சந்தேகப்பட வேண்டியுள்ளது. 

கச்சத்தீவு ஒப்பந்தத்தின் ஷரத் 3,4,5-ன்படி, ‘இருநாட்டு மீனவர்களுக்கும் மீன் பிடித்துக்கொள்ளும் உரிமை; வலைகளை உலர்த்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளும் உரிமை; எந்தவித ஆவணமும் இன்றி அந்தோணியார் திருவிழாவுக்கு நாட்டுப் படகில் வரும் உரிமை’ போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி நாங்கள் செயல்படவில்லையென்றால், இதையே காரணம் காட்டி, ஒப்பந்தத்தைக் காலாவதியாக்கும் வேலைகளை வேகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து ஐ.நா மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றாலும், எங்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த அபாயத்தை உணர்ந்துதான் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தோம். இன்னும் பத்து நாட்களில் கச்சத்தீவு திருவிழா நடக்க இருக்கிறது. பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளைக் காக்க, மாநில அரசு நடவடிக்கையில் இறங்க வேண்டும்” என்கின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள். 

-ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்