'ஜெயலலிதா முகத்தில் துளையிட்டது போலவா?' நெடுவாசலில் கொந்தளித்த மன்சூர் அலிகான்

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக, சிறிய அளவிலான இடத்தில் மட்டுமே துளையிடுவோம் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். எப்படி, ஜெயலலிதாவின் முகத்தில் துளையிட்டது போலவா என்று நெடுவாசல் போராட்டக்களத்தில் நடிகர் மன்சூர்அலிகான் ஆவேமாகப் பேசினார்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக 14-வது நாளாக இன்றும் நெடுவாசலில் போராட்டம் நடந்து வருகிறது. இன்றைய போராட்டத்தில் 5,000 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், எட்டு இடங்களில் வாகன சோதனைகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை கெடுபிடிகளுக்கு இடையேயும் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Neudvasal

குறிப்பாக, இன்றைய போராட்டத்தில் கூடங்குளம் அணு உலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், டிராபிக் ராமசாமி, நடிகர் மன்சூர்அலிகான், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட பலர் நெடுவாசலுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

அற்புதம்மாள் கூறுகையில், "எனது மகனின் விடுதலைக்காக 25 ஆண்டுகளாக போராடி வருகிறேன். எனது மகனின் விடுதலைக்காக தமிழக மக்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர். அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நான் போராட்டக் களத்துக்கு வந்துள்ளேன். மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் பிரமிக்க வைக்கிறது" என்றார்.

சுப.உதயகுமாரன் கூறுகையில், "மத்திய அரசு தொடர்ந்து தமிழக வளங்களை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் 40,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், அவற்றில் 9,600 ரூபாய் கோடிதான் அரசாங்கத்துக்கு கிடைக்கும். மீதி தனியார் நிறுவனங்களுக்குதான் கிடைக்கும். தனியார் நிறுவனத்துக்கு லாபம் தரும் ஒரு திட்டத்துக்காக, இயற்கையை அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டுமா. அதற்குப் பதிலாக உண்மையில் மக்களுக்கு பயன் தரும் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும்" என்றார்.

டிராபிக் ராமசாமி கூறுகையில், "ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் என்பது ஏமாற்று வேலை. மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை இங்கு செயல்படுத்த முடியாது. குழாய்களை பதிக்க விட மாட்டோம். அதை மீறி அந்த பணிகளில் ஈடுபட்டால் விரட்டி அடிப்போம்" என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், "இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசப்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்த திட்டத்துக்காக, சிறிய அளவிலான இடத்தில் மட்டுமே துளையிடுவோம் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். எப்படி ஜெயலலிதாவின் முகத்தில் துளையிட்டது போலவா. இப்போது அனைவரும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வருகின்றனர். நான் அப்போதே அதில் மர்மம் இருப்பதாக கூறினேன். இந்நிலையில், தற்போது ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாரவிரதம் இருப்பதெல்லாம் நாடகம்" என்றார்.
 

- சிய.ஆனந்தகுமார்

படம்: எஸ்.சாய்தர்மராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!