லவுட் ஸ்பீக்கர் வேண்டாம்! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

School students

தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65-வது பிறந்தநாள் இன்று. ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதையொட்டி, ஸ்டாலின் தி.மு.க நிர்வாகிகளுக்கு அன்புக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில், 'நாளை முதல் (மார்ச் 2) பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களின் அடுத்தக்கட்ட கல்லூரி வாழ்க்கையைத் தொடங்குவதற்கு மிக முக்கியமான இந்தத் தேர்வில் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

இந்த நேரத்தில் மாநிலம் முழுவதும் என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து கழகத்தினர், மக்கள் நலம் பயக்கும் உதவிகளைச் செய்து வருவது மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகிறது. அப்படி பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்தும் கழக நிர்வாகிகள் நாளை தொடங்கும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் லவுட் ஸ்பீக்கர் போன்றவற்றைப் பயன்படுத்தி மாணவச் செல்வங்கள் படிப்பதற்குத் தொந்தரவு செய்ய வேண்டாம். தங்களின் எதிர்காலத்துக்கான மிக முக்கியமான தேர்வை மாணவர்கள் எழுதுகின்ற இந்த நேரத்தில் ஆடம்பரம், ஆரவாரம் இன்றி மிகவும் அமைதியான முறையில் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மாணவர்கள் வெற்றிகரமாகத் தேர்வு எழுத வழிவிடுமாறு கழக நிர்வாகிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!