கையை முறுக்கி, கன்னத்தில் அறைந்தாரா எம்.எல்.ஏ..? - காங்கேயம் கோயில் விழாவில் பரபரப்பு...! | Did MLA slap the person who was tapping the incident

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (01/03/2017)

கடைசி தொடர்பு:18:54 (01/03/2017)

கையை முறுக்கி, கன்னத்தில் அறைந்தாரா எம்.எல்.ஏ..? - காங்கேயம் கோயில் விழாவில் பரபரப்பு...!

காங்கேயத்தில் போராட்டம்

காங்கேயம் அருகே உள்ள ஆலாம்பாடி கிராமத்தில் பழனியாண்டவர் திருக்கோயில் மண்டலப் பூஜை விழா நேற்று  நடைபெற்றிருக்கிறது. காங்கேயம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்ட இவ்விழாவில், காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனியரசும் நேற்று இரவு கலந்துகொண்டிருக்கிறார். அப்போது, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களில் சிலர், தனியரசு எம்.எல்.ஏவை சந்தித்து, ஆலாம்பாடி கிராமத்தில் பல ஆண்டுகளாகப் பழுதடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு எம்.எல்.ஏ  "இப்போது நிதி இல்லை, பிறகு பார்க்கலாம்” என்று பதில் அளித்திருக்கிறார். எத்தனை வருடங்களுக்கு இதையே சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்.? எம்.எல்.ஏ நிதியிலிருந்து எடுத்து சாலையை சரிசெய்யுங்கள் என்று சொல்ல, எம்.எல்.ஏ ஆட்களுக்கும் - பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

அப்போது கூட்டத்திலிருந்த செல்வகார்த்திகேயன் என்ற 22 வயது வாலிபர், தன்னுடைய செல்போனில் அங்கு நடந்துகொண்டிருந்த சம்பவங்களை வீடியோ பதிவு செய்ய முயல, அதைக்கண்டு கோபமடைந்த எம்.எல்.ஏ தனியரசு, வீடியோ எடுத்த வாலிபர் செல்வகார்த்திகேயனின் செல்போனைத் தட்டிவிட்டு, அவரின் கையை முறுக்கி, கன்னத்தில் அறைந்ததாகவும், எம்.எல்.ஏவின் ஆட்கள் 3 - பேர் செல்வ கார்த்திகேயனை அங்கிருந்த மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதாகவும் பரபரப்பு ஏற்பட்டது.. இதனையடுத்து அங்கு திரண்ட மக்கள் பலர், நடந்த சம்பவத்திற்கு எம்.எல்.ஏ தனியரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுகூறி சில மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி புகார் மனு பெற்றிருக்கிறார்கள். 

கார்த்திகேயன்தாக்கப்பட்ட வாலிபர் செல்வ கார்த்திகேயன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நான் தாக்கப்பட்டதும், காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, உடனடியாக திருப்பூர் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். தலையில் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புகாருக்கு போலீஸ் தரப்பிலிருந்து முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறினார் செல்வகார்த்திகேயன். 
சம்பவம் குறித்து, எம்.எல்.ஏ தனியரசிடம் விசாரித்தோம், திருக்கோயில் சார்பாக விழாவில் கலந்துகொள்ள என்னை அழைத்திருந்தார்கள். நான் வருவதை அறிந்த சிலர், வேண்டுமென்றே திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

தொகுதி மக்கள் எங்கு என்னை சந்தித்துக் கோரிக்கை வைத்தாலும், நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மக்கள் தங்களின் பகுதிகளில் சிறு பிரச்னை என்றாலும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்து, அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதில் 234 எம்.எல்.ஏக்களில் நான்தான் முதன்மையானவன். எடப்பாடி.பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து அ.தி.மு.கவின் ஆட்சி கவிழ்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டதால், என்மேல் வெறுப்பில் இருக்கும் ஓ.பி.எஸ் - தீபா ஆதரவாளர்களின் தூண்டுதலால்தான், நேற்று இரவு மது அருந்திய நிலையில் ஒரு சிலர் என்னிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். நான் தாக்கியதாகக் கூறப்படும் அந்த இளைஞனை நான் தொடக்கூட இல்லை. ஏன்! தடித்த வார்த்தைகளில்கூட திட்டவில்லை. வேண்டுமென்றே என்னை அசிக்கப்படுத்த நினைக்கும் ஆட்களிடம் நாம் ஏன் பலியாக வேண்டும்.

அங்கிருந்த பொதுமக்களும், மதுபோதையில் வந்து தகராறு செய்த நபர்களைத் திட்டி, அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். நானும் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு நேரமாகிவிட்டதால் அங்கு சென்றுவிட்டேன். சசிகலா தலைமையை பிடிக்காமல் விலகி நிற்கும், ஓ.பி.எஸ் - தீபா ஆதரவாளர்கள்தான், பொதுமக்கள் என்ற போர்வையில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். என்னதான் திட்டமிட்டு என்னை அசிங்கபடுத்த நினைத்தாலும், தனியரசின் புகழ் தொகுதிக்குள் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறி முடித்தார்.

- தி.ஜெயப்பிரகாஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்