வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (01/03/2017)

கடைசி தொடர்பு:10:19 (02/03/2017)

கரைவேட்டி வண்டிகளுக்கு தனி ரூல்! -அரசு உத்தரவா? அமைச்சர் உத்தரவா? #VikatanExclusive

வணிகவரித்துறையின் சுங்கச்சாவடிகளில் கட்சிக்காரர்களின் சரக்கு வாகனங்களைப் பிடிக்க வேண்டாம் என்று அமைச்சர் தரப்பிலிருந்து வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் விழிபிதுங்கி உள்ளனர்.

தமிழக அரசின் அமுதசுரபி என்று அழைக்கப்படும் வணிகவரித்துறைக்கு ஆண்டுதோறும் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படும். 2016-17ம் நிதி ஆண்டில் இந்ததுறைக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இலக்கை அடைவது சாத்தியமில்லை என்று வணிகவரித்துறையினர் தெரிவித்து விட்டனர். இதனால் வருவாய் இலக்கு குறைக்கப்படவுள்ளது. வருவாய் இலக்கு அடைவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு வணிகவரித்துறையில் நிலவும் அதிரடி வாய்மொழி உத்தரவுகளே காரணம் என்கின்றனர் வணிகவரித்துறையினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சிலருக்குச் சொந்தமான சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உயரதிகாரிகளிடமிருந்து இணை கமிஷனர், துணை கமிஷனர்களுக்கு வாய்மொழியாக உத்தரவுகள் வந்தன. இதனால், வணிகவரித்துறை சுங்கச்சாவடிகளில் உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் வரி ஏய்ப்பு செய்த குறிப்பிட்ட சிலரது சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், அத்தகைய வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் சோதனையில்லாமல் செல்கின்றன. இதற்காக தனி சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சிக்னலை டிரைவர் அல்லது கிளீனர் தரப்பிலிருந்து சுங்கச்சாவடியை நெருங்கும் போது கொடுக்கப்படும். அந்த வாகனங்களை நாங்கள் தடுத்து நிறுத்துவதில்லை அதையும் மீறி சில அதிகாரிகள் பிடித்து விட்டால் அமைச்சர் தரப்பில் இருந்து சிபாரிசுகள் வருகின்றன. இதன்காரணமாக செக் போஸ்ட்களில் பிடிபடும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.

இதுகுறித்து வணிகவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "வணிகவரித்துறையில் நடைபெறும் ஆய்வு கூட்டங்களில் அதிகாரிகள் முன்னிலையிலேயே குறிப்பிட்ட சிலரது வாகனங்களை எந்த அதிகாரிகளும் சோதனை செய்ய  வேண்டாம். அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயரதிகாரிகள் சொல்கின்றனர். நடவடிக்கை எடுக்காமல் எப்படி வருவாயை அதிகரிக்க முடியும் என்பதே எங்களின் கேள்வி. இதுகுறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்தால் மேலிட உத்தரவு என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்கின்றனர். இவ்வாறு அரசுக்கு வர வேண்டிய வருவாய் விரயமாகுவதோடு தனிநபர் பாக்கெட்டுக்குச் செல்கிறது. குறிப்பாக எங்கள் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரின் செயல்பாடுகள்தான் காரணம். இதுகுறித்து உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்றனர்.

வணிகவரித்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "சில தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள வணிகவரித்துறை செக் போஸ்ட்டில் சிமெண்ட், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை மடக்கிப் பிடித்தோம். அப்போது அந்த லாரியில் உள்ள பொருள்களுக்கு வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்க எங்கள் அதிகாரிகள் முயன்ற சமயத்தில் மேலிடத்திலிருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. உடனடியாக அந்த லாரி விடுவிக்கப்பட்டது. சமீபகாலமாக கட்டுமான பொருள்களை ஏற்றிச் செல்லும் கட்சிக்காரர்களின் வாகனங்கள் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை" என்றார். 

"வணிகவரித்துறையில் உள்ள உயரதிகாரிகளின் செல்போன் நம்பர்களுக்கு கடந்த மாதம் மட்டும் சிபாரிசு போன் அழைப்புகள் அதிகம் வந்துள்ளன. அதற்கு உதாரணம் அவர்களது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தாலே ஆதாரம் கிடைத்து விடும்" என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். மேலும் வணிகவரித்துறையில் மேலிடம் என்று அமைச்சர் தரப்பை சொல்கின்றனர். அமைச்சர் தரப்பிலிருந்து வரும் உத்தரவை மீற முடியாமல் வணிகவரித்துறை உயரதிகாரிகளும் கட்சிக்காரர்களின் சிலரது வாகனங்களை கண்டுக்கொள்வதில்லையாம்.

இதுகுறித்து வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் கருத்துக் கேட்க அவரது செல்போனில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர், பதிலளிக்கவில்லை. 

-எஸ்.மகேஷ் 


டிரெண்டிங் @ விகடன்