வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (02/03/2017)

கடைசி தொடர்பு:08:46 (02/03/2017)

சீரழிந்த ரேஷன் விநியோகம்: கண்டுகொள்ளாத தமிழக அரசு!

                 ரேஷன்

 

ழை எளிய மக்களின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் ரேஷன் கடைகள் இப்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் மூடப்பட்ட கதவுகளோடே காட்சியளிக்கின்றன.  அப்படியே ரேஷன் கடைகள் திறந்து இருந்தாலும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இன்றி காலியாகவே உள்ளன என்று பொதுமக்கள் கடுமையாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் கூறுகையில், “பா.ஜனதா அரசு மத்தியில் பொறுப்பேற்றவுடன் பொதுவிநியோகம் தொடர்பாக குழு அமைத்து, அதனுடைய பரிந்துரைகளையும் பெற்றுவிட்டது. உணவு தானியங்களை கொள்முதல் செய்யவும், நகர்வு செய்யவும் விநியோகம் செய்யவும் தற்போதுள்ள இந்திய உணவு கழகத்தினை நான்கு கூறுகளாக பிரித்து கம்பெனிகளாக மாற்றவும், 52 நகரங்களைத் தேர்வு செய்து அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களுக்கு மாறாக, வங்கியில் பணம் நேரடியாக செலுத்துவதற்கான சிபாரிசுகளை அளித்துள்ளது.

வங்கியில் நேரடியாக பணம் செலுத்துவதினால் மத்திய அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் மீதமாகும் என 'கிரிசில்' எனும் தரச்சான்று நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில்தான் தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம் என்று அறிக்கை வெளியிட்டுவருகிறது. தமிழக அரசின் பொது விநியோகத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது ரூ.5500 கோடி மட்டுமே.

இத்தொகை கடந்த ஆண்டைவிட ரூ.200 கோடி மட்டுமே கூடுதலாகும். ஆனால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் மத்திய அரசு, தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் கடுமையாக நெருக்கடி தந்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசு பொதுவிநியோகத் திட்டத்தை சீர்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் தங்குதடையின்றி செயல்பட எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அ.தி.மு.க. கட்சிக்குள் நடக்கும் குழப்படிகள், அரசு நிர்வாகத்திலும் எதிரொலித்து மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டுள்ளன. இந்தப் பின்னணியில்தான் மத்திய அரசு வெகுவேகமாகச் செயல்பட்டு வருகிறது." என்றார் விளக்கமாக.

மேலும் அவர்,"இந்திய அளவில், 81.93 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல்லும், 46 லட்சம் ஹெக்டேரில் பருப்பு வகைகளும் 45 லட்சம் ஹெக்டேரில் கரும்பும், 75 லட்சம் ஹெக்டேரில் சிறுதானிய வகைகளும், 47.89 லட்சம் ஹெக்டேரில்  பருத்தியும், என ஒட்டுமொத்தமாக 4.32 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் நடக்கிறது. ஆனால், அத்தியாவசிய  கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள், தாவர எண்ணெய் என அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. இதன் பின்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.அதே நேரத்தில் உணவு தானியங்களைப் பதுக்கி கடத்திக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கும்பல்களுக்கு ஆட்சியாளர்கள் துணையும் போகிறார்கள்" என்றார் கொந்தளிப்பாக.  

                      ரேஷன்

தமிழகத்தில் உள்ள 'அனைவருக்குமான பொது விநியோகம்' திட்டம் மத்திய அரசால் தகர்க்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நடைமுறையின்படி, வறுமைக் கோட்டுக்கு மேல், வறுமை கோட்டுக்குக் கீழ் என குறிப்பிட்ட காலவரையறைக்குப்பின் பட்டியலிட்டு வழங்க வேண்டும் என உள்ளது. அதன்படி, தற்போதுள்ள குடும்ப அட்டைகளை முன்னுரிமை உள்ளவர், முன்னுரிமை இல்லாதவர் என இரு கூறாக குடும்ப அட்டைதாரர்களின் ஒப்புதலின்றி பிரித்துள்ளனர். இதன்காரணமாக பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி கிடைக்க வாய்ப்பே இல்லை.

இந்த நிலையை மாற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

- சி.தேவராஜன்