வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (02/03/2017)

கடைசி தொடர்பு:11:12 (02/03/2017)

“வேலை வெட்டி இல்லாதவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!” - கடுகடுக்கும் திருநாவுக்கரசர்

 ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

''திருநாவுக்கரசரை யார் என்றே எனக்குத் தெரியாது...'' என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தடாலடி பேட்டி தட்ட.... பதிலுக்கு ''வேலை வெட்டி இல்லாதவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்'' என்று காட்டமாகப் பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழகக் காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசர்

கோஷ்டிகளுக்குப் பெயர்போன காங்கிரஸ் ஜனநாயகத்தில், முற்றிவரும் இந்த மோதல்போக்கின் பின்னணியை அறிந்துகொள்வதற்காக இரு தலைவர்களிடமும் பேசினோம்.... 

''திருநாவுக்கரசர் மீது ஏன் இப்படி ஒரு கொலைவெறி?'' என்ற கேள்வியை முதலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் கேட்டோம்....

''திருநாவுக்கரசரைப் பற்றி பேசவே எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால், அவர் காங்கிரஸ்காரராக இல்லையே என்பதுதான் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்திபவனில் அவர் கொண்டாடியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு மட்டுமல்ல... காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அதில் உடன்பாடில்லை. அதற்காக எம்.ஜி.ஆர் மீது எங்களுக்கு மரியாதை இல்லை என்று அர்த்தமாகாது. ஒவ்வொரு கட்சிக்கும் வரைமுறை என்று ஒன்று உண்டு அல்லவா?

நான் கேட்கிறேன்... எம்.ஜி.ஆர் பிறந்தநாளை காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாடுகிறீர்களே.... அதேபோல், இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க அலுவலகத்தில் கொண்டாடுவார்களா? அதற்காக அ.தி.மு.க-வினருக்கு இந்திரா காந்தி மீது மரியாதை கிடையாது என்பது இல்லை. கட்சி வேறுபாடு என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அதைத்தான் நான் கேட்கிறேன்.''

''மறைந்த முதல்வர் ஜெ. அப்போலோ சிகிச்சையில் இருந்தபோது ராகுல் காந்தியை நேரில் அழைத்துவந்து பார்க்கவைத்த திருநாவுக்கரசரின் அரசியல் வியூகம் அப்போது எல்லோராலும் பாராட்டப்பட்டதே...?''

''உடல் நலமின்றி சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா பூரண குணம் அடையவேண்டும் என்று நானும்கூடத்தான் அப்போலோ சென்றுவந்தேன். ஆனால், ராகுல் காந்தி உள்பட யாருமே அங்கே ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன். அடுத்ததாக, ஒரு தலைவர் உடல் நலமின்றி இருக்கிறார் என்றால், அவர் உடல்நலம் தேறவேண்டும் என்று எல்லோரும் வந்து பார்ப்பது என்பது இயல்பான பண்பு. தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோதும்கூடத்தான் ராகுல் காந்தி வந்து உடல் நலம் விசாரித்தார்... அதனால், இதற்கெல்லாம் எந்தவிதமான அரசியல் முக்கியத்துவமும் இருப்பதாக நான் கருதவில்லை.''

''அகில இந்திய காங்கிரஸ் நியமித்த ஒரு தலைவரை இப்படி தடாலடியாக விமர்சிக்கும்போது அது காங்கிரஸ் கட்சியை அவமதிப்பது ஆகாதா?''

''இல்லையில்லை... நான் எந்த இடத்திலும் கட்சியைக் குறிப்பிட்டுப் பேசவில்லையே.... திருநாவுக்கரசரின் நடவடிக்கைகள் எனக்கும் என்னைப் போன்ற காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஏற்புடையதாக இல்லை என்ற அர்த்தத்தில்தானே பேசிவருகிறேன். என்னைப் பொருத்தவரை மேலிடம் என்ன நினைக்கிறதோ அந்தக் கருத்தைத்தான் நான் பேசிவருகின்றேன்.''

''அந்த மேலிடம்தானே திருநாவுக்கரசரை தமிழக் காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளது...?''

''கட்சிக்கு நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பில்தான் அவரை தலைவராக நியமித்திருக்கிறார்கள். ஆனால், கட்சியின் வளர்ச்சிக்கு அவரது செயல்பாடுகள் வலு சேர்க்கிறதா என்று பார்த்தால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. அதனால்தான் என்னைப்போன்றவர்கள் அவரை விமர்சிக்க வேண்டியதாக இருக்கிறது.''

''திருநாவுக்கரசர் மீதான உங்களது கடுமையான விமர்சனத்துக்குப் பின்னால் வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறதா?''

''அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... அ.தி.மு.க ஆதரவு தவிர்த்து, அவர் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். எந்த வெளியூர்களுக்கும் செல்வதும் கிடையாது... தொண்டர்கள், மக்களை சந்திப்பதும் கிடையாது... இதெல்லாம் வருத்தத்திற்கு உரிய விஷயங்கள்.''

''உங்களது விமர்சனங்களுக்குப் பின்னணியில் தி.மு.க இருப்பதாக பேசப்படுகிறதே...?''

''இல்லையில்லை.... நான் இப்படி சொல்லிவருவது என்னுடைய கருத்து மட்டுமல்ல... தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின்கருத்தும்கூட.'' என்று பேட்டியை முடித்துக்கொண்டார்.

திருநாவுக்கரசர்

அடுத்ததாக, தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரைத் தொடர்புகொண்டு பேசினோம்....

''நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு இப்போதுதான் திருச்சி விமானநிலையத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்...'' என்றவரிடம், ''திருநாவுக்கரசரை யாரென்றே தெரியாது என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளாரே...?'' என்று கேட்டோம். 

''மகிழ்ச்சி... இவ்வளவு நாளும் என்னைத் திட்டி அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். இப்போது யாரென்றே தெரியாது என்று சொல்லிவிட்டதால், திருநாவுக்கரசர் என்ற தெரியாத ஆளை இனிமேல் திட்டமாட்டார் இல்ல? அதனால இனிமேலாவது அவர் வேலையைப் பார்ப்பார் என்று நினைக்கிறேன்... 

சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று டெல்லி மேலிடத் தலைவர்கள் எனக்கு என்ன வேலை கொடுத்திருக்கிறார்களோ அந்த வேலையை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதுக்கு மேலே அவர் சொல்லியிருக்கிற விஷயங்களுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. பதில் சொல்ல விருப்பமும் இல்லை...''

''காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை நீங்கள் சந்தித்துப் பேசுவதில்லை என்று உங்கள் மீது குற்றம் சாட்டுகிறாரே?''

''நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதிகளில் கட்சித் தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு  இப்போதுதான் திருச்சி விமான நிலையம் வந்துள்ளேன். நாளை திருமயத்தில் சத்தியமூர்த்தி நினைவு மண்டபம் திறப்புவிழாவில் கலந்துகொள்கிறேன். இரவு அறந்தாங்கியில் பொதுக்கூட்டம் இருக்கிறது. இதெல்லாம் கட்சி நிகழ்ச்சிகள் இல்லையென்றால் அதற்கு வேறு என்ன பெயர்?''

''எம்.ஜி.ஆர் பிறந்தநாளை நீங்கள் சத்திய மூர்த்திபவனில் கொண்டாடியது குறித்து ஈ.வி.கே.எஸ். கேள்வி எழுப்பியிருக்கிறாரே....''

''ஆமாம்... கொண்டாடினோம். ஒருகாலத்தில் எம்.ஜி.ஆரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்தானே... அந்தவகையில் கொண்டாடினோம். ஏன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தந்தை ஈ.வி.கே சம்பத் காங்கிரஸ் கட்சியில் சிறிது காலம் இருந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி அவரது நினைவுநாள், பிறந்த நாளில் இதே சத்திய மூர்த்தி பவனில் அவரது படத்துக்கு மாலை போட்டவர்தானே ஈ.வி.கே.எஸ்?

மக்கள் மத்தியில் தெய்வமாக வாழ்ந்து மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக நாங்கள் செய்துவருவதை விமர்சனம் செய்வதென்பது அவரது உரிமை. ஆனால், இது சரியா தப்பா என்று முடிவு செய்யவேண்டியது மக்களும் காங்கிரஸ் தொண்டர்களும்தான். இதுகுறித்து எங்கள் கட்சி மேலிடத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியும்கூட என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. 

ஜெயலலிதா அஞ்சலி நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த ராகுல் காந்தி இதே எம்.ஜி.ஆர் சமாதிக்கும் வந்திருந்து மரியாதை செலுத்தினார். செருப்பை வெளியிலேயே கழட்டிப் போட்டுவிட்டு எம்.ஜி.ஆர் சமாதியை சுற்றிவந்து தொட்டு வணங்கினார். இதனை தவறு என்று யாராவது சொல்லமுடியுமா? ஈ.வி.கே.எஸ்-ஸுக்கு இப்போது வேறு வேலை எதுவும் இல்லை... அதனால், தினமும் எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார்.... அதனால், இதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.'' என்றவாறே விமானம் ஏறினார் திருநாவுக்கரசர்!

 - த.கதிரவன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க