வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (02/03/2017)

கடைசி தொடர்பு:14:40 (02/03/2017)

மண்ணைக் காக்கத் துடிக்கும் நாங்கள் தேசத் துரோகிகளா ?-கேள்வி எழுப்பும் பசங்க பாண்டிராஜ்

பாண்டிராஜ்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதில் இருந்து, நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடும் மக்களுக்கு ஆதரவாக, சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் நெடுவாசலை நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். சென்னையில் உள்ள ஐடி உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணிபுரியும் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் , “இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 3 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என இந்தப் போராட்டத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சொந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தில் கலந்துகொண்டு போராடிய இயக்குநர் பாண்டிராஜ், இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். இயக்குநர் பாண்டிராஜிடம் பேசினோம்,

“புதுக்கோட்டை எனது சொந்த ஊர், நான் இயக்குநர் என்பதைவிட, விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன். இந்த அடிப்படையில், இந்தத் திட்டத்துக்காகப் போராடும் மக்களுடன் நானும் களத்தில் நிற்கிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 சதவிகிதம் வானம் பார்த்த பூமிதான். இங்கு ஆற்றுப் பாசனம் இல்லை. நிலத்தடி நீரும் மிக மோசமாகப் போய்விட்டது. அதனால், சமீபகாலமாக விவசாயம் நலிவுற்றுக்கிடக்கிறது. விவசாயம் பரம்பரைத் தொழில் என்பதாலும் சாப்பிட உணவுப் பொருளை உற்பத்திசெய்ய முடிகிறது என்பதாலும்தான், லாபம் கிடைக்கவில்லை என்றாலும், விவசாயத்தை விடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில், “மத்திய அரசு கொண்டுவரும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால், இந்தப் பகுதியில் உள்ள 200 கிலோ மீட்டர் கடுமையாக பாதிக்கப்படும்” எனக் கூறப்படுவதால், மக்களுக்கு பெரும் பயம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் என்ன முயற்சிகள் எடுத்துள்ளன. இந்தத் திட்டம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டாமா?.

பிரதமர் மோடி, “வெளிநாட்டு முதலாளிகளிடம், இந்தியாவில் எங்குவேண்டுமாலும், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், என அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் திட்டம் மோடியின் லட்சியத்தில் ஒன்று எனச் சொல்கிறார்கள். இந்தத் திட்டம், மூலமாக மக்களுக்கு என்ன கிடைக்கும் என்று தெளிவுபடுத்தாமல், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் துடிப்பது எவ்வளவு மோசமான மனநிலை.?
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்கள், “தேசத் துரோகிகள்” என பி.ஜே.பியைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். மண்ணுக்காக குரல்கொடுக்கும் நாங்கள் தேசத் துரோகிகளாகவே இருந்துவிட்டுப் போகிறோம். இந்தத் திட்டத்தின்மூலம் பணம் கிடைக்கும் என்றால், அது வேற வழியில் கிடைக்காதா?

இந்த மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால் ஒன்றுமே இல்லை. இங்கு, விவசாயத்தைத் தவிர வேறு பிழைப்பே இல்லை,  இவர்களுக்கு வாழ்வாதாரம் பண்ணியிருக்க வேண்டும். இயல்பாகவே கந்தக பூமியான புதுக்கோட்டையில், இந்த நாட்களில் வெளியில் உட்காரவே முடியாது, அவ்வளவு வெட்கை இருக்கும். ஆனாலும் திலகர் திடலிலும், நெடுவாசலிலும் மக்கள் போராடுகிறார்கள் என்றால், மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். ஏற்கெனவே போடப்பட்ட உரத்தாலும், விதைகளாலும் மண் மலடாகிப் போய்விட்டதால், 25 மூட்டை விளையும்  நிலங்களில் 5 மூட்டைகள்தான் கிடைக்கிறது. ஆனால் அதுவும் இப்போது இல்லை. அப்படியானால், மாவட்டத்தில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் எங்கே போவார்கள் என்கிற கேள்விக்கு விடை சொல்வது யார் ?

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடியபோது, அதுவெறும் மாட்டுப் பிரச்னையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அது உணர்வு சார்ந்த கலாசாரம், பாரம்பர்யம் சார்ந்த விசயம் என்பதாக இவர்கள் பார்க்கவில்லை. விவசாயத்தைக் காப்பாற்ற கடைசி வாய்ப்பு. இதை விட்டுவிட மாட்டோம் என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்,

படங்கள்: ம.அரவிந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க