கோக், பெப்சி வேண்டும்; சீமைக்கருவேல மரங்கள் வேண்டாமா? சீறும் ராமகிருஷ்ணன் | Pepei-Coke row: G.Ramakrishnan raises question

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (02/03/2017)

கடைசி தொடர்பு:16:42 (02/03/2017)

கோக், பெப்சி வேண்டும்; சீமைக்கருவேல மரங்கள் வேண்டாமா? சீறும் ராமகிருஷ்ணன்

 


சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சும் கோக், பெப்சி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜி.ராமகிருஷ்ணன், "தமிழ்நாடு வறட்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. விவசாயிகளின் மரணமோ நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. ஆனால், மாநில அரசோ கடமைக்கு மட்டும் நிவாரணம் வழங்குகிறது. நாட்டில் மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் அல்லல்படுகின்றனர். இந்நிலையை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். போர்க்கால அடிப்படையில் உடனடியாக இதற்குத் தீர்வு வழங்க வேண்டும். மேலும் டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கவேண்டும். யானைப் பசிக்கு சோளப்பொறி வழங்கிய கதையாக இல்லாமல் எல்லா விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்கவேண்டும்.

கடந்த டிசம்பருக்குப் பிறகு ரேசன் கடைகளில் பருப்பு, உளுந்து போன்ற அடிப்படை பொருள்கள் முறையாக வழங்கப்படவில்லை. அதனால் நடுத்தர குடும்பத்தினரும், ஏழைமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு இதனை சீர்செய்யவேண்டும். தற்போது தலித் பெண்களின் மீது  தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கவேண்டும். மதுரையில் முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர் சம்மேளனம் உறுப்பினர் பாலமுருகன் கொலையில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. எனவே அதனை உடனடியாக அழிக்கவேண்டும் என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. ஆனால், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சும் கோக் பெப்சி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஏன் நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. கோக் பெப்சி மட்டும் ஆகும், சீமைக்கருவேல மரங்கள் மட்டும் ஆகாதா?

பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே, ஜெயலலிதாவின் வழியில் தமிழகத்தில் ஆட்சி நடத்துவோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க வினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் ஜெயலலிதா கடவுளாக இருக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அவர் ஒரு குற்றவாளி. எனவே, ஜெயலலிதா வழியில் தமிழகத்தை வழி நடத்துவோம் என்று கூறுவது, ஊழல் வழியில் தமிழகத்தை நடத்துவோம் என்று கூறுவதற்கு அர்த்தமாகும். ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்களை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக அரசு கைப்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

- சே.சின்னதுரை

படம்: வி.சதீஷ்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க