வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (02/03/2017)

கடைசி தொடர்பு:17:56 (02/03/2017)

ஆஸ்பத்திரி டு கும்மிடிப்பூண்டி- குழந்தையை கடத்திய பெண்ணின் பகீர் வாக்குமூலம் 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குழந்தையைக் கடத்திய சுபாஹணி என்ற பெண், போலீஸாரிடம் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். போலீஸ் விசாரணையில் அவர், ஆஸ்பத்திரியிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை சென்ற தகவல் தெரியவந்துள்ளது. 

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த பரக்கத் அலி-உசேனா பானு  தம்பதியின் மகன் முகமது ஆசிப். 3 வயதான ஆசிப்பை அழைத்துக் கொண்டு கடந்த 1-ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உசேனா  வந்தார். அப்போது மருத்துவமனையின் முதல்தளத்தில் உள்ள மருத்துவரைப் பார்க்க உசேனா மட்டும் உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஆசிப்பைக் காணவில்லை. இதுதொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் உசேனா புகார் செய்தார். தொடர்ந்து போலீஸார் மருத்துவமனை வளாகம் மற்றும் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நடுத்தர வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஆசிப்பை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்தப் பெண் ஆட்டோவில் ஏறிச் செல்லும்  பதிவும் இருந்தன. அந்த கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் ஆசிப் மற்றும் அந்தப் பெண்ணை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். போலீஸ் நிலையத்தில் ஆசிப்பை பார்த்த உசேனா பானு, அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். ஆசிப்பும் உசேனாவைப் பார்த்ததும் கதறி அழுதார். இந்த சம்பவம் அனைவரின் நெஞ்சையும் உருக வைத்தது. 

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ஜெயக்குமார் கூறுகையில், "மருத்துவமனை வளாகத்திலிருந்து ஆசிப் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் பல தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. அதன்அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சமயத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு கொடுங்கையூரிலிருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் 'நீங்கள் தேடும் குழந்தையுடன் ஒரு பெண் இந்தப் பகுதியில் செல்கிறார்' என்றார். உடனடியாக அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். அப்போது கொடுங்கையூர் பகுதியில் ஆசிப் மற்றும் அந்த பெண் நின்று கொண்டு இருந்தனர். உடனடியாக அவர்களைப் பிடித்து விசாரித்தோம். பிறகு ஆசிப்பை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டோம். இந்தத் தகவலை உடனடியாக ஆசிப்பின் பெற்றோருக்கும் தெரிவித்தோம். அவர்களிடம் ஆசிப்பை ஒப்படைத்து விட்டோம். 28 மணி நேரத்தில் ஆசிப்பை கண்டுபிடித்துள்ளனர் தனிப்படை போலீஸார்" என்றார். 

 "ஆசிப்பை கடத்திய பெண்ணின் பெயர் சுபாஹணி. அந்த பெண்ணின் கணவர் முகமது சுல்தான். அவர் 2012ல் இறந்து விட்டார். இவர்களுக்கு 5-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை உள்ளது. இவர்களது சொந்த ஊர் முதுகுளத்தூர். அங்கு அந்தப் பெண் குழந்தை இருக்கிறார். சென்னை எண்ணூரில் சுபாஹணி தங்கி இருந்து வீட்டு வேலைகளை செய்து வருகிறார். அவர் சிகிச்சைக்காக அடிக்கடி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வருவார். அதுபோல நேற்றும் சுபாஹணி வந்துள்ளார். அப்போது மருத்துவமனை முதல் தளத்தில் தனியாக ஆசிப் அழுது கொண்டு இருந்துள்ளார். அவரிடம் பேசிய சுபாஹணி, அப்பா, அம்மா குறித்த விவரத்தை கேட்டுள்ளார். ஆசிப்பிற்கு எந்த விவரமும் சொல்லத் தெரியவில்லை. என்னுடன் வருகிறராயா என்று சுபாஹணி கேட்டபோது சம்மதம் என்று தலையை அசைத்துள்ளார் ஆசிப். உடனே மருத்துவமனைக்கு வெளியே சென்ற சுபாஹணி ஆட்டோ பிடித்து மூலக்கொத்தளம் பஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு ஆசிப்புக்கு டிபன் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து கும்மிடிப்பூண்டிக்கு மின்சார ரயிலில் சென்றுள்ளார். இரவில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலேயே இருவரும் தங்கி உள்ளனர். இன்று காலை எண்ணூருக்கு ஆசிப்பை அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர் விஜயன், நியூஸ் பேப்பரில் ஆசிப் புகைப்படத்தைப் பார்த்துள்ளார். இதனால் ஆசிப் குறித்த விவரத்தை சுபாஹணியிடம் விசாரித்துள்ளார் விஜயன். அப்போது நடந்த முழு விவரத்தை தெரிவித்த சுபாஹணி, ஆசிப்பை தானே வளர்ப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சுபாஹணியிடம் ஆசிப் கடத்தப்பட்டதாக போலீஸ் தேடும் விவரத்தை தெரிவித்த விஜயன், இருவரையும் கொடுங்கையூருக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் கொடுங்கையூருக்கு வந்த நிலையில் டீக்கடைகாரர் ஒருவர் போன் மூலம் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் ஆசிப்பை மீட்டுள்ளனர். ஆசிப்பை கடத்தியதற்காக சுபாஹணியை போலீஸார் கைது செய்துள்ளனர்" என்கின்றனர் போலீஸ் வட்டாரங்கள். 

 ஆசிப் மாயமானது இப்படித்தான் 

உசேனா பானுவுக்கு தைராய்டு பிரச்னை இருந்துள்ளது. அதுதொடர்பான பரிசோதனை ரிப்போர்ட்டை வாங்குவதற்காகவே உசேனா, ஆசிப் மற்றும் இவர்களுடன் மொத்தம் 8 பேர் வந்துள்ளனர். இதில் 4 பேர் குழந்தைகள். உசேனாவும், ஆசிப்பும் மருத்துவமனை முதல் தளத்துக்குச் சென்றபோதுதான் கவனக்குறைவு காரணமாக ஆசிப் மாயமாகி விட்டார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆசிப்பை மருத்துவமனையிலிருந்து கடத்திய பெண் சுபாஹணி, மன அழுத்தம், ஆஸ்துமா ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக மருத்துவமனைக்கு வந்தபோதுதான் ஆசிப்பை சுபாஹணி அழைத்துச் சென்றுவிட்டார். அவர், மனம் திருந்தி ஆசிப்பை பெற்றோரிடம் ஒப்படைக்க வந்த நிலையில் போலீஸாரிடம் சிக்கி உள்ளார். 

- எஸ்.மகேஷ் 

 


டிரெண்டிங் @ விகடன்