வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (03/03/2017)

கடைசி தொடர்பு:11:04 (04/03/2017)

‘தீபாவிடம் இருந்து தள்ளியே இருப்போம்!’ - பன்னீர்செல்வம் அணியில் ‘திடீர்’ குரல் #VikatanExclusive

பன்னீர்செல்வம்

‘அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நீடிக்க முடியுமா?’ என்ற கேள்விக்கான விடை, இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். ஆணையத்தின் உத்தரவை அடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ‘தலைமை என்று வந்துவிட்டால், அது நம்மிடம்தான் இருக்க வேண்டும். தீபாவிடம் இருந்து தள்ளியே இருப்போம்’ என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்த, பொதுமக்களின் சந்தேகங்களை நீர்த்துப் போகச் செய்யாமல் தினம்தினம் அதிரடிகளைக் கிளப்பி வருகிறது பன்னீர்செல்வம் அணி. குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த கையோடு, ஜெயலலிதாவுக்கு வந்த நோயின் தன்மை குறித்து வெளிப்படையாகப் பேசினார் மைத்ரேயன் எம்.பி. நேற்று முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மருத்துவமனையின் சி.சி.டி.வி கேமராக்கள் குறித்தும் சிகிச்சை முறைகள் குறித்தும் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். “மக்கள் மனதில் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் சசிகலாவை குற்றவாளியாக மக்கள் பார்க்கிறார்கள். இந்தப் பார்வையை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போலோவில் நடந்த விவகாரங்களுக்கு நாம் விசாரணைக் கமிஷன் கோருவதையும் மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் ஆணையத்தில் இருந்து சசிகலா நியமனம் குறித்து அதிரடியான பதில் வெளிவரும் என நம்புகிறோம். உண்மையான அ.தி.மு.க நாம்தான் என்பதை மக்கள் மன்றத்தில் எளிதாகவே நிரூபிப்போம்” என விளக்கிய பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் ஒருவர்,

“ஜெயலலிதா சமாதியில் இருந்து தீபாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார் பன்னீர்செல்வம். ‘ நானும் பன்னீர்செல்வமும் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம்’ எனப் பேட்டியளித்தார் தீபா. ஆனால், அடுத்து வந்த நாட்களில் எங்களிடம் இருந்து அவர் விலகியே இருந்தார். நாங்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது பேரவை ஒன்றைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். ‘அவரை நம் பக்கம் கொண்டு வர வேண்டும்’ என ஓ.பி.எஸ் வலியுறுத்துகிறார். இதில் சீனியர் நிர்வாகிகளுக்கு உடன்பாடில்லை. இதைப் பற்றி பன்னீர்செல்வத்திடம் அவர்கள் பேசும்போது, ‘ தீபாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவசரம் காட்ட வேண்டாம். இனி எந்தக் காலத்திலும் சசிகலா உறவுகளோடு நாம் சேரப் போவதில்லை.

பன்னீர்செல்வம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தீபா போட்டியிட்டால், அவரை நாம் ஆதரிப்போம். அதில் எந்தத் தவறும் இல்லை. அதற்குள் தேர்தல் ஆணையத்தில் இருந்து கட்சித் தேர்தலை நடத்துமாறு உத்தரவு வந்தால், இரட்டை இலை நம் கைக்கு வந்துவிடும். அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துவிட்டால், தீபாவை நாம் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் அணியின் பக்கம் தீபா வந்தாலும், தலைமைப் பொறுப்பு பன்னீர்செல்வத்திடம்தான் இருக்க வேண்டும். அவர் தலைமைப் பொறுப்பை விரும்பியதால்தான் அவரைத் தள்ளி வைத்திருக்கிறோம். அரசியலை எப்படிக் கையாள்வது என்றும் அவருக்கு தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்து தீர்மானிப்போம்’ எனத் தெரிவித்துள்ளனர். சீனியர்களின் முடிவின்படியே பன்னீர்செல்வமும் செயல்படுகிறார்” என்றார் விரிவாக. 

இந்த விவகாரத்தில், தீபாவின் பார்வை மாறுபட்டதாக இருக்கிறது. “புதிய வாக்காளர்கள் தன்னுடைய தலைமையை ஏற்றுக் கொள்வார்கள் என அவர் உறுதியாக நம்புகிறார். பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதற்குக் காரணமே, ‘தன்னை ஏமாற்றிவிடுவார்களோ’ என அவர் பயந்ததுதான். தற்போது உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்’ என்று பேரவை நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார். ‘அதற்கு மேல் உறுப்பினர்களைச் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் சீட் வழங்குவேன்’ என்றும் உறுதி அளித்திருக்கிறார். ‘கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுக்கு விழுந்த 41 சதவீதமும் ஜெயலலிதா தலைமைக்கு விழுந்த ஓட்டுக்கள்’ என நம்புகிறார். மாநில உரிமைக்காகப் போராடியது, மக்கள் நலத் திட்டங்களை உருவாக்கியது போன்றவைதாம் அ.தி.மு.கவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணம்.

‘இவை அப்படியே தன்னுடைய தலைமைக்கு வந்து சேரும்’ என நம்புகிறார். அதையொட்டித்தான் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. ‘இனி அ.தி.மு.கவின் ராணித் தேனீயாக தன்னை தொண்டர்கள் பார்ப்பார்கள்’ என நம்புகிறார். அதன்பிறகு, ‘தன்னுடைய தலைமையை நாடி பன்னீர்செல்வம் வருவார்’ என ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார். அதனாலேயே அவசரம் காட்டாமல் செயல்படுகிறார்” என ஆச்சரியப்படுத்துகிறார் தீபா பேரவை நிர்வாகி ஒருவர். 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்