தீபாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்! ஆட்டிப்படைக்கும் குடும்ப அரசியல் 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்த வண்ணம் உள்ளன. பேரவை தொடங்கியவுடன் குடும்ப அரசியலில் அவர் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யை கடந்த 24ம் தேதி தொடங்கினார். மாநிலத் தலைவராக சரண்யாவும், மாநிலச் செயலாளராக ராஜாவும், பொருளாளராக தீபாவும் நியமிக்கப்பட்டனர். ராஜா நியமனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்தப்பதவியையும் தீபா கவனித்து வருகிறார்.  இந்த சூழ்நிலையில் பிப்ரவரி 25ம் தேதி புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் என்று பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் தீபாவின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தப் பட்டியல் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு குடும்ப அரசியலே காரணம் என்கின்றனர் பேரவையில் உள்விவரம் தெரிந்தவர்கள்.

தீபாவுக்கு ஆதரித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில்,"ஜெயலலிதாவின் உருவச் சாயலில் தீபா இருப்பதாலும் சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்களும் தீபாவின் தலைமையில் செயல்பட முடிவு செய்தோம். இதனால் தமிழகம் முழுவதும் தீபா பேரவையை ஏற்படுத்தினர். பேரவைக்கு நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தீபா தொடங்கிய 'எம்.ஜிஆர். அம்மா தீபா பேரவை'யில் பதவிகள் கொடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.  ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு சில நிகழ்ச்சியில் தீபா பங்கேற்ற போது மக்கள் கூட்டம் அலைமோதின.  சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்கள் தீபாவுக்குப் பின்னால் அணிவகுத்தனர். தற்போது தமிழக அரசியல் சூழ்நிலை மாறி விட்டது. சசிகலாவுக்கு இன்னொரு எதிரியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருவாகி விட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தையும் அ.தி.மு.க.வினர் ஆதரித்து வருகின்றனர். இவ்வாறு அ.தி.மு.க.வினர் தீபா, பன்னீர்செல்வம் என இரண்டு பேரை ஆதரிப்பதால் தீபாவுக்கு கட்சியினரிடையே உள்ள ஆதரவு குறைந்து வருகிறது.

ஜெயலலிதா மறைந்த போது தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன்பு கூடிய கட்சியினர் கூட்டம் தற்போது அங்கு இல்லை. தீபாவிடமிருந்து வரும் நிர்வாகிகள் பட்டியல் மற்றும் அறிவிப்புக்கு அடுத்து அணி மாறும் நிலையில் கட்சியினர் உள்ளனர். ஏற்கெனவே தீபா பேரவையைத் தொடங்கிப் பணத்தைச் செலவழித்தவர்களும் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யில் நிச்சயம் தங்களுக்குப் பதவிகள் வழங்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் தீபாவின் குடும்பத்திலும் அரசியல் நிலவுகிறது. அதாவது, தீபாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு பட்டியலைத் தயாரித்து அவர்களுக்குத்தான் பதவிகள் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளனர். ஆனால் அவர்களில் சிலருக்குப் பதவிகள் கொடுக்க தீபா விரும்பவில்லை. இந்தக் குளறுபடியால் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்து, ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் இணைந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கும் தீபாவின் ஆதரவாளர்களில் சிலர் விரும்பவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து மக்களை சந்திக்க தீபா செல்லவில்லை. மேலும், தீபாவும் தன்னுடைய அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள காலதாமதப்படுத்தி வருகிறார். அவரின் காலதாமதத்தை பன்னீர்செல்வம் தரப்பு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. தீபாவிடமிருந்து எந்தவிதத் தகவலும் தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஆதங்கத்தில் உள்ளனர். எங்களுக்குப் பின்னால் வந்த கட்சியினரிடம் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். மேலும், தீபாவிடம் அரசியல் தொடர்பாக தயக்கமின்றிப் பேச சந்தர்ப்பம் இல்லை. அவரிடம் எதையும் சொல்ல முடியாமல் அவருடன் இருப்பவர்கள் தடுக்கின்றனர். தீபாவின் ஆதரவாளர்களின் மனநிலையைப் புரிந்து தீபா செயல்பட்டால் மட்டுமே பேரவையை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். தீபா தொடங்கிய பேரவையின் பெயருக்கு சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்கள் வருகின்றன. தங்களுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அவர் இதை விட நல்ல பெயரை அறிவித்திருக்கலாம். பேரவையிலிருந்து கட்சிப் பெயரை அறிவிக்கும் போதாவது நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்" என்றனர்.

எப்போதும் கலகலப்புடன் இருந்த தீபா வீட்டு வளாகம் தற்போது தொண்டர்களின்றி வெறிச்சோடி கிடக்கிறது. பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வருபவர்கள் மட்டுமே அங்கு கூடியிருக்கின்றனர். இதனிடையே, வீட்டு வளாகம் முன்பு கருத்துக்களை பதிவு செய்யும் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கருத்துக்கள் தொடர்பான மனுக்கள் போடப்பட்டு வருகின்றன. அவைகள் தீபாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல கருத்துக்கள் செயல்படுத்தப்படும் என்று தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எஸ்.மகேஷ்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!