வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (03/03/2017)

கடைசி தொடர்பு:14:07 (03/03/2017)

‘ஏன் இவ்வளவு அச்சம் எடப்பாடி பழனிசாமி?’ - சீறும் சீமான்

சீமான்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை, நெடுவாசலில் 16-வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர் பொதுமக்கள். 'மக்களுக்கான அரசாக இது இல்லை. ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கக் கோரி, இரவு பகலாகப் போராடினால்தான் தீர்வு கிடைக்கிறது. 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுவீர்களா?' என்பதற்கு முதலமைச்சரிடம் எந்தப் பதிலும் இல்லை. அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களும் என்னதான் வேலை? நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே போனார்கள்?' எனக் கொந்தளிக்கிறார் சீமான். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல், கோட்டைக் காடு, கருக்காகுறிச்சி உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு, கடந்த மாதம் 15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. 'இப்படியொரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தின் தன்மையே மாறிப் போகும். வளங்களை இழந்து மக்கள் வெளியேற வேண்டியது வரும்' எனக் கூறி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் நெடுவாசல் மக்கள். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன. "நெடுவாசலுக்கு வரப் போகும் அபாயம் குறித்து, 2013-ம் ஆண்டில் நானும் நம்மாழ்வார் அய்யாவும் பேசியிருக்கிறோம். ஷேல் கேஸ் என்ற வடிவத்தில் மீத்தேன் வாயுவை எடுக்கிறார்கள். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயுவை எடுக்கிறார்கள். இதற்காக, 700 இடங்களில் குழாய் பதித்திருப்பதாக அரசே சொல்கிறது.

எங்களுடைய ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 இடங்களில் எரிவாயு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து இன்றைக்கு ஓர் எச்சரிக்கை உணர்வு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 1960-ம் ஆண்டில் பசுமையாக இருந்த சோமாலியா இன்றைக்குப் பஞ்சம் பசியில் சாவதற்கும் 'கடல் கொள்ளையர்கள்' என அவர்களை உலகம் குற்றம் சுமத்துவதற்கும் காரணம், உலக நாடுகள் அணுக் கழிவைக் கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் கொட்டியதுதான். மொத்தமாக அனைத்து வளங்களையும் இழந்து இன்றைக்குப் பிச்சைக்கார நாடாக சோமாலியா மாறிவிட்டது. அதைப் போன்ற நிலை நமக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் போராடுகிறோம்" எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், 

எடப்பாடி பழனிசாமி"ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்படுவதை வளர்ச்சி என அரசு சுட்டிக் காட்டுகிறது. இதை எப்படி வளர்ச்சியாகப் பார்க்க முடியும்? மண்ணின் வளங்கள் மக்களுக்கானது. உள்நாட்டு, வெளிநாட்டுப் பெரு முதலாளிகளுக்காக இந்த மண்ணின் வளங்கள் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. மண்ணை வாழ வைத்தால்தான் மக்களை வாழ வைக்க முடியும். மண்ணை அழித்துவிட்டு, வளர்ச்சி என்று எதை நிறுவ முயற்சி செய்கிறார்கள்? என்னிடம் ஒருவர் கேட்டார். 'மீத்தேன் எரிவாயு இல்லாவிட்டால், எதை வைத்து சமைப்பது?'. 'இதை எடுத்துவிட்டால் எதைச் சமைப்பது?' என எதிர்க் கேள்வி கேட்டேன். இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது இந்த அரசாங்கம். நிலத்தடி நீரை அப்புறப்படுத்திவிட்டுத்தான், காற்றை எடுக்க முடியும். அதன்பிறகு நிலத்திற்குள் என்ன இருக்கும்? வேதிக் கரைசலை ஆழ்குழாய் மூலம் உள்ளே அனுப்புவதன் மூலம், நிலமெல்லாம் நஞ்சாக மாறிவிடாதா? கோட்டைக் காடு பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி ஆழத்தில் குழாயைச் செருக இருக்கிறார்கள்.

நெடுவாசலில் ஆறாயிரம் அடி உயரத்திற்குக் குழாய் பதிக்க இருக்கிறார்கள். இப்படிச் செய்யும்போது கடல் நீர் உள்ளே வரும். இந்த நீரையும் வெளியே எடுத்து அப்புறப்படுத்திவிடுவார்கள். அந்த உப்புநீரை வைத்துக் கொண்டு எப்படி வேளாண்மை செய்வது? நிலமெல்லாம் பாழ்பட்டுப் போய்விடும். நிலத்திற்குள் ஏற்படும் இடைவெளியால், உள்அடுக்கு சரிந்து நிலநடுக்கம் ஏற்படும். இப்போதே அந்தப் பகுதி ஓடையில் செல்லும்போது தீப்பிடிக்கிறது. நிலத்தையும் வளத்தையும் இழந்துவிட்டு எங்கே போய் வாழ்வது? பாலைவனத்தில் இயற்கை எரிவாயு எடுக்கிறார்கள் என்றால், அது பாலைவனம். இது பொன் விளையும் சோலை பூமி. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 25 விழுக்காடு மீத்தேன் இருக்கிறது. அங்கு ஏன் ஓர் இடத்தில்கூட மீத்தேன் வாயு எடுக்கவில்லை? 'கங்கை பாசனப் படுகையின் நிலப்பரப்பில் மீத்தேனும் ஹைட்ரோ கார்பனும் இருக்கிறது' என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவர்கள் ஏன் அங்கு செல்லவில்லை?" எனக் கேள்வி எழுப்பியவர், 

"தமிழ்நாட்டை மட்டும், குறிப்பாக காவிரி படுகையை மட்டும் குறிவைக்கக் காரணம் என்ன? இதனால்தான், இவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை எனக் குற்றம் சுமத்துகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டு, முறையான நீர்ப் பங்கீட்டுக்கு வழிவகை செய்திருந்தால், நாம் வேளாண்மையில் இறங்கியிருப்போம். அவர்களது நோக்கம் நிறைவேறாமல் போயிருக்கும். எங்கள் வாழ்விடங்களை இழந்து வெளியேறிய பிறகு, நிலத்தில் இருந்து நிலக்கரி தோண்டுவதும் அவர்களின் அடுத்தகட்ட திட்டம். அதனால்தான், உலக நாடுகளைப் பார்த்தும், இந்த நாடு நமக்கு என்ன செய்திருக்கிறது என்று உற்று கவனித்தும் போராடுகிறோம். நமது மீனவர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடைமை ஆக்கிவிட்டது. அதைப் பெற்றுத் தர இவர்களால் முடிந்ததா? மொத்த மீனவனின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டார்கள். இன்று வரையில் இந்தியக் கடலுக்குள் சென்று பாதுகாப்பாக மீன் பிடிக்க முடிகிறதா? ஆனால், அந்த நாட்டுக்கு போர்க் கப்பலைப் பரிசாகக் கொடுக்கிறது மத்திய அரசு. அவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் கொடுக்கிறார்கள். உங்களை நம்பி எப்படி பின்னால் வருவது?

நெடுவாசல்

கடலில் கொட்டிய எண்ணையையே இவர்களால் அள்ள முடியவில்லை. வாளி வைத்து அள்ளுவதைப் பார்த்து உலக நாடுகள் சிரிக்கின்றன. இவ்வளவு பெரிய நாடு; அறிவியல் தொழில்நுட்பம்; வாரம் ஒரு செயற்கைக் கோள் பறக்கிறது; அணு வலிமை என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், வாளியில் எண்ணெய் அள்ளுகிறார்கள். அனைத்து விவசாயிகளும் சாகும் வரையில் இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கத்தான் போகிறார்கள். இந்தத் திட்டம் குறித்துப் பேசிய பா.ஜ.க எம்.பி. இல.கணேசன், 'நாடு நல்லா இருக்க வேண்டுமென்றால் தியாகம் செய்ய வேண்டும்' என்கிறார். 'பாதுகாப்பான திட்டம்' என்றால், ஏன் தியாகம் செய்ய வேண்டும்? ஆபத்து இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அணு உலை, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்றவை உள்ளே வருவதற்குக் காரணமே, நான்கு கட்சிகள்தான். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க என இவர்களைத் தாண்டி இந்தத் திட்டம் உள்ளே வந்துவிட்டதா? மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே, எவ்வளவு பெரிய சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது பாருங்கள். 

மக்களின் போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழக அரசு உடனடியாக  ஒரு முடிவை எடுக்கிறதா? 15 நாட்களைக் கடந்தும் அரசு தன்னுடைய முடிவைச் சொல்லவில்லை. விவசாயிகளை நேரில் பார்த்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ' மக்களை பாதிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம்' என்கிறார். அவர்கள் பார்க்காவிட்டால், அதையும் சொல்லியிருக்க மாட்டார். ஜல்லிக்கட்டுக்காக இரவு பகலாகப் போராடினால்தான் தீர்வு வருகிறது. 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுவீர்களா?' என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் தெருவுக்கு வந்து போராட வேண்டும். அப்படியானால், அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே போய்விட்டார்கள்? முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? இது யாருக்கான அரசாங்கமாக இருக்கிறது. கோகோ கோலாவுக்கு எதிராகப் போராடுகிறோம். அரசு தடை விதிக்கிறதா என்று பாருங்கள். அருகில் உள்ள கேரள அரசு தடை விதிக்கிறது. மதுரை உயர்நீதிமன்றம், 'தாமிரபரணி தண்ணீரை எடுத்து விற்கலாம்' என்கிறது. இங்கு நாக்கு வறண்டு போய்க் கிடக்கிறது. கொடும் வறட்சியை தமிழகம் சந்திக்கப் போகிறது. மாநிலம் முழுவதும் எந்த இடத்திலும் விவசாயம் இல்லை. ஆனால், பன்னாட்டு கம்பெனிகள் நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்ள நீதிமன்றமே உத்தரவிடுகிறது. இவற்றை எதிர்க்க வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? 

நெடுவாசலில் போராடும் மக்கள்

ஆட்சியாளர்கள் கமிஷன் வாங்கிக்கொண்டு செயல்பட்டதால் வந்த வினை இது. இதுதான் வளர்ச்சி என்றால், அப்படியொரு வளர்ச்சி எதற்கு என்றுதான் கேட்கிறோம். 'வேலைவாய்ப்பு வழங்குவோம்' என்கிறார்கள். எங்கள் பிணத்தைப் புதைக்கும் வேலையைத்தான் தரப் போகிறீர்கள். ஆந்திரக் காட்டுக்குள் மரம் வெட்டச் சென்ற எங்களை சுட்டுக் கொன்றதற்கு எந்தப் பதிலும் இல்லை. லட்சக்கணக்கான மரங்களை அழித்தவரின் ஆசிரமத்தில் சிலையைத் திறக்கச் செல்கிறீர்கள். தமிழர் நிலத்தை மட்டும் குறிவைத்து இவர்கள் குதறுகிறார்கள். 'மக்கள் ஏன் போராடுகிறார்கள்?' என மத்திய உளவுத்துறை பிரமருக்குத் தெரிவிக்கவில்லையா? மக்களுடன் பேசுவதற்கும் அவர்களை சந்திப்பதற்கும் முதல்வருக்கு ஏன் இவ்வளவு அச்சம்? 'நீங்கள் அச்சப்பட வேண்டாம். திட்டத்தை அனுமதிக்கப் போவதில்லை' என்று சொல்வதற்கு ஏன் தயங்குகிறீர்கள் எடப்பாடி பழனிசாமி? ஊடகத்தின் வாயிலாகக்கூட முதல்வர் பேச மறுக்கிறார்.

பிரதமரை தமிழக முதல்வர் சந்தித்தபோது, 'நீட் தேர்வுக்கு என்ன சொன்னார்? ஹைட்ரோ கார்பனுக்கு என்ன சொன்னார்?' என்பது பற்றியாவது எடப்பாடி பழனிசாமி மக்களிடம் விளக்கினாரா? இந்த அரசாங்கம் எதையும் தடுக்கப் போவதில்லை. மக்களின் குறிப்பறிந்து சேவை செய்வதுதான் உண்மையான அரசாங்கமாக இருக்க முடியும். இந்த அரசு ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டிருக்கிறது. யார் சொன்னால் இவர்கள் கேட்பார்கள் என்றால், அவர்களிடமாவது நாம் பேசலாம்" என ஆவேசத்தோடு பேசி முடித்தார் சீமான். 

- ஆ.விஜயானந்த் 


டிரெண்டிங் @ விகடன்