”நமக்கு ஒரு குழந்தையாவது இருந்திருக்கலாம்!” - அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஶ்ரீநிவாஸ் மனைவியின் உருக்கமான பதிவு #KansasShooting

ஶ்ரீநிவாஸ் மனைவி

மெரிக்காவில்  கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்  ஸ்ரீநிவாஸ் குச்சிபொட்லாவின்  உடல் கடந்த செவ்வாய்க்கிழமை, அவரது சொந்த ஊரான  தெலுங்கானாவுக்குக் கொண்டுவரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி  சூனாயானா துமாலா (Sunayana Dumala)  செவ்வாய்க்கிழமையன்று, தனது கணவரைப் பற்றி ஃபேஸ்புக்கில் உருக்கமான பதிவை பதிந்திருந்தார். அவற்றின் தமிழாக்கம்...  

“முகநூலில், நான் முதன்முதலில் எழுதும் பதிவு இது; மிகவும் கனத்த இதயத்துடன்  இந்த வார்த்தைகளை  எழுதுகிறேன். 2017 பிப்ரவரி 22-ம் தேதி - புதன்கிழமையன்று இரவில், என் நண்பன், என் நம்பிக்கை, என் உயிர்தோழன், என் கணவரை இழந்தேன். அவர் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டி, எனக்கு உறுதுணையானவர். எனக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள அனைவருக்குமே!
அவர் முகத்தில்  எப்போதுமே புன்னகை ஒட்டிக்கொண்டிருக்கும். அனைவரையும் மதிப்பவர்; குறிப்பாக பெரியவர்களை! நாங்கள் 2006-ம் ஆண்டு, எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் முதன்முறையாக சந்தித்தோம். பிறகு ‘ஆர்குட்’ வலைதளத்தின் நட்பாகி சாட்டிங் மூலம் பேசத் துவங்கினோம். பார்த்தவுடனே, இருவருக்கும் பிடித்திருந்தது; அவர் மிகவும் வசீகரமாக இருந்தார்.
இரண்டு சகோதரிகளுடன் பிறந்த நான், என் வீட்டுக்கு கடைக்குட்டி; சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள். நான் அமெரிக்காவுக்குச் சென்று படிக்கவேண்டும் என்று நினைத்த கனவை  நனவாக்கியது, ஸ்ரீநிவாஸ்தான்! ஒரு சுதந்திரமான, உறுதியான பெண்ணாக  இன்று நான் இருப்பதற்கு முழுகாரணம் அவர்! திருமணத்துக்குப் பிறகு நானும் அவரும் அமெரிக்காவில் உள்ள கன்சாஸில் குடியேறினோம். கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்துதான், நான் பணிக்குச் செல்லத் துவங்கினேன். நான்கு ஆண்டுகள் வேலைக்குச் செல்லாமல், மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டும் என எண்ணியபோது, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து, நான்  வேலைக்குச் செல்ல முழுகாரணமாக இருந்தது அவர்தான்!ஸ்ரீநிவாஸ் மனைவி

அவர்  விமான போக்குவரத்துத் துறையில் புதுமை செய்யவேண்டும் என எப்போதும் ஆர்வமாக  இருந்தார்.  அவருக்கு  ’ராக்வெல் கொல்லின்ஸ்’ (Rockwell Collins)  என்ற நிறுவனத்தில்தான் முதலில் வேலை கிடைத்தது.  பல நாட்கள், அவர்  இரவு சாப்பாட்டுக்கு மட்டுமே வீட்டுக்கு வருவார்; பிறகு, அதிகாலையில்  கிளம்பிவிடுவார். அதன்பிறகு, மறுநாள் அதிகாலை 2 அல்லது 3 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.  நாங்கள் முன்பு இருந்த, லொவா நகரத்திலுள்ள  ‘சிடர்  ரபிட்ஸ்’  என்ற அழகிய சிறிய பகுதி அவருக்கு  மிகவும் பிடிக்கும். ஆனால்,  நாங்கள் பெரிய நகரத்துக்கு இடமாற நினைத்தோம். ஏனென்றால், எனக்கு  வேலை கிடைத்து, என் கனவை தொடர வேண்டும் என நாங்கள் விரும்பினோம். இதற்குச்  சிறந்த  இடமாக ’கன்சாஸ்’ இருக்கும் என்று நினைத்தோம்.  நிறைய கனவுகளுடன்  இங்கு வந்தோம். எங்களுடைய கனவு இல்லத்தை கட்டினோம்; அதில் ஒரு கதவுக்கு, அவரே  சாயம் பூசினார். அவருக்கு வீட்டில்  வேலை  செய்வது  மிகவும் பிடிக்கும். இந்த வீடு அவர் கட்டியது; எங்கள் குழந்தைகளுடன் ஒரு குடும்பமாக நாங்கள் வாழ, அவர் எடுத்துவைத்த முதல் அடி. ஆனால்,  எங்கள்  கனவில் ஒரு பேரிடி வந்து விழும் என எதிர்பார்க்கவில்லை. 

அன்றிரவு காவல்துறையினர் எங்கள் வீட்டுக்கு வந்து, என் கணவரை யாரோ ஒருவர் சுட்டுக்கொன்றார் என தெரிவித்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை. 'கண்டிப்பாக தெரியுமா', 'உண்மையைத்தான் சொல்கிறீர்களா?', 'நீங்கள் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று தெளிவாக தெரிந்துதான் பேசுகிறீர்களா?', 'நான் அடையாளம் காண்பதற்கு ஏதேனும் படங்களைக் காட்டுங்கள்', 'அவர்  6’ 2” உயரத்தில் இருந்தாரா?', என  காவல்துறையினரைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தேன். அவர்கள் எல்லாவற்றுக்கும் ‘ஆமாம்’ என்றே பதிலளித்துக்கொண்டு இருந்தார்கள். கன்சாஸில் வேறு யாரையும் தெரியாது என்பதால்,  டல்லாஸில்  உள்ள அவரின்  சகோதரரை அலைபேசியில் அழைத்தேன்.  காவல்துறையினர் கூறியதை அவர் சகோதரரிடம் நான்  கூறியபோது, நான்  ‘ஜோக்’ செய்வதாக அவர் நினைத்தார்.  என் நண்பர்கள் என்னுடன் இருந்தார்கள்; அவர்கள் என்னை  விட்டு ஒரு நொடிகூட செல்லவில்லை. எப்போதும் அன்பாக இருக்கும்  அவருக்கு கடைசியாக பிரியாவிடை சொல்ல, அவரின்  நண்பர்கள்  கலிஃபோர்னியா, நியூ ஜெர்ஸி, டென்வர், லொவா, மின்னேசோடா ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தார்கள். 

இந்த மார்ச்  9-ம் தேதியுடன், அவருக்கு 33 வயதாகி இருக்கும். அன்று நாங்கள்  நியூஜெர்ஸியில், அவரின் உறவினருக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்துக்குச்  செல்லவிருந்தோம். அதற்காக, கடந்த வாரயிறுதியில்  ஷாப்பிங் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போது எல்லாமே தலைகீழானது. அவரின் சவபெட்டியுடன் நான் இந்தியா  திரும்பிக்கொண்டு இருந்தேன். ஒரே மாலையில்,  நான் ‘மனைவி’ என்ற அங்கீகாரத்திலிருந்து  ‘விதவை’யானதை என்னால் இன்னும் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. 

அவருக்கு  குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.  எங்கள் குடும்பத்தை விரிவுப்படுத்த வேண்டும் என  சில வாரங்களுக்கு முன் தான், மருத்துவரை  சந்தித்தோம். 'நாம் ‘இன்-விட்ரோ’ முறைப்படி குழந்தைப்பெற்றுக்கொள்ள வேண்டுமானால், பணத்தை சேமிக்க வேண்டும்' - இதுதான் அவர் என்னிடம்  கடைசியாக பகிர்ந்துக்கொண்ட வார்த்தைகள்! உண்மையிலேயே, நமக்கு ஒரு குழந்தை இருந்திருக்க வேண்டும் உன்னைப் போல் அவன் இருந்திருக்க வேண்டும். அவனைப் பார்த்துக்கொண்டு, உன்னைப் போலவே வளர்த்திருப்பேன். ஸ்ரீனு, என் காதலே, நீ இல்லாத அந்த வெற்றிடத்தை எப்படி  நிரப்பப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயம் உன் பெருமையை தாழ்த்தும்படி நடந்து கொள்ள மாட்டேன். என்னுடைய முக்கியமான  மின்னஞ்சல்கள் அனைத்தையும் நீதான்  திருத்தம் செய்வாய். ஆனால், இன்று முதல் முறையாக, அதனை  நானே செய்கிறேன். வேடிக்கையாக இருக்கிறது. 

நான் உன்னை  காதலிக்கிறேன்... நீ  எப்பொழுதும் எனக்கு சொந்தமானவன்! கடைசியாக ஒரு கேள்வி - அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள்  அனைவரிடமும் இருக்கும் கேள்வி இது. நாங்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்களா? நாங்கள் கனவு கண்டுக்கொண்டிருக்கும் அதே  நாடா இது? எங்கள் குடும்பத்தை, குழந்தைகளை வளர்ப்பதற்கு இது இன்னும்  பாதுகாப்பான இடமாகத்தான் இருக்கிறதா?”, என்று கேட்டு அந்த பதிவை முடித்திருந்தார். 

மேலும், அவர் பிரதமர் நரேந்திர மோடி,  வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ், ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். அவர் மீண்டும் அமெரிக்கா செல்வார் எனவும் அந்த பதிவில்  எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மனம் ஆறட்டும் சூனாயானா துமாலா...

- எம். ஆர். ஷோபனா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!