தமிழகத்தை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க! நெடுவாசலில் அன்புமணி ஆவேசம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, நெடுவாசலில் இன்று  தொடர்ந்து 16-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இன்றைய போராட்டத்துக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பா.ம.க சார்பில் நெடுவாசல் கடைவீதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் நெடுவாசல் போராட்டக்களத்துக்குச் சென்று, தனது ஆதரவைத் தெரிவித்தார். 

அப்போது அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "விவசாயிகளை நான் கடவுளாகப் பார்க்கிறேன். தமிழகத்தில் 2,000 எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவந்தால் இங்கு மக்கள் வாழ முடியாது. பிச்சை எடுக்கக்கூட வெளிநாட்டுக்குத்தான் போக வேண்டும். டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த முடியாது.

ஜல்லிக்கட்டுக்காக, பிரதமர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதுபோல, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றம் முன்பு போராடத் தயாராக உள்ளேன். இதுபோன்ற திட்டங்கள் மிகவும் அபாயகரமானவை. இவை வெடித்தால் 100 கி.மீ தூரத்துக்கு அதன் பாதிப்புகள் இருக்கும். தமிழகத்தில் 20 நீர்வழிப் பாசனத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்குத் தேவைப்படுவது 40,000 ரூபாய் கோடிதான். ஆனால், இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டங்களுக்காக மட்டுமே 62,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நீர்ப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்தியிருந்தால் 80 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடைந்திருக்கும். காங்கிரஸ், பா.ஜ.க தமிழகத்தை அழிக்க நினைக்கின்றன. இதுபோன்ற திட்டங்களை எதிர்க்க, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்

படம்: சாய்தர்மராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!