காளை குத்தி உயிரிழந்த காவலர் சங்கர் மனைவிக்கு அரசு வேலை! ஆணை வழங்கினார் முதல்வர்

விருதுநகர் மாவட்டம்,  கான்சாபுரம் கிராமத்தில் கடந்த ஜனவரி 23-ம் தேதி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளை குத்தி உயிரிழந்த காவலர் சங்கரின் மனைவிக்கு அரசு வேலைக்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் உட்கோட்டம், கான்சாபுரம் கிராமத்தில் கடந்த 23.1.2017 அன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தனி ஆயுதப்படை காவலர் வே.சங்கர், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின்போது அழகுமுருகன் என்பவரைக் காப்பாற்ற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக காளை மாடு ஒன்று கழுத்துப் பகுதியில் குத்தியதால் பலத்த காயமடைந்து, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக  மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மறைந்த காவலர் வே.சங்கர் என்பவருக்கு முத்துசடச்சி (24) என்ற மனைவியும், குருபாண்டி என்ற இரண்டு வயது மகனும், குருசாதனா என்ற ஒரு வயது மகளும், 52 வயதான தகப்பனார் வேல்மயில் என்பவரும் உள்ளனர். மறைந்த காவலர் சங்கர் 1.3.2009 அன்று பணியில் சேர்ந்துள்ளதால் அவரின் வாரிசான மனைவி முத்துசடச்சிக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத்  திட்டத்தின்கீழ் குடும்ப ஓய்வூதியம் பெற்று  வழங்க அரசு விதிகளில் இடமில்லாத காரணத்தினால், மறைந்த காவலர் சங்கர் அவர்களுடைய குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சிறப்பு நிகழ்வாக, அவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் முன்னுரிமை வழங்கி உடனடியாகப் பணி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இன்று (3.3.2017) தலைமைச் செயலகத்தில், வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அரசாணையினை வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!