வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (03/03/2017)

கடைசி தொடர்பு:18:36 (03/03/2017)

ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பிரபலங்கள் எல்லை மீறுகிறார்களா?

இன்று ஒரு பிரச்னை எழுகிறது என்றால் அந்த பிரச்னை என்ன என்பதை விட அந்த பிரச்னைக்கு கமல் என்ன சொல்லியிருக்கிறார், வீரேந்தர் சேவக்கின் காமெடி ட்விட் என்ன என்று யோசிக்கும் மனநிலை வந்துவிட்டது. ஒரு பிரபலத்தின் கருத்து ஒரு சமூக பிரச்னையில் அவசியம் தான் என்றாலும். எதற்கு, எப்படி கருத்து சொல்ல வேண்டும் என ஒரு வரையரை இருக்கிறது. தகவல்கள் தெரியாமல் ஒரு விஷயத்தை பற்றி ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து சொல்வது அவர்களை சார்ந்துள்ள குழுவையும் அதே நிலைப்பாட்டை எடுக்க வைப்பதாக அமையும்.

அதேபோல் சமூக வலைதளங்களில் இருக்கும் பிரபலங்கள் தங்களது கணக்கை பாதுக்காப்பாக வைத்திருக்க வேண்டியதும் அவசியம். சமீபத்தில் பல பிரபலங்களின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என செய்திகள் வைரல் ஆவது வாடிக்கையாகியுள்ளது. முதல்முறை என்றால் பரவாயில்லை. இரண்டு, மூன்று முறை இதே தவறு நடந்தால் அது உண்மையிலேயே ஹேக்கர்கள் வேலைதானா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. சில நேரங்களில் பிரபலங்கள் தங்கள் எல்லை மீறி ட்ரெண்டுக்காக செய்யும் வேலைகள் சிலவும் சர்ச்சைக்குள்ளாகின்றன. 

 பாடகி சுசித்ரா ட்விட்டர் சர்ச்சை

முதலில் பாடகி சுசித்ரா, அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனுஷ் என்ற ஹேஷ்டேக்குடன் பல ட்விட்டுகள் பதியப்பட்டன. ஆரம்பத்தில் அவரிடம் இருந்து வந்த ட்விட்டுகளுக்கு அவர் தரப்பு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த விஷயம் வைரலானதும் உடனடியாக அவரது கணக்கு முடக்கப்பட்டதாக அறிவித்தார். பின்னர் இன்றும் அவரது கணக்கிலிருந்து பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வில் நடந்த புகைப்படங்கள் பகிரப்பட்டன. இதற்கும் அவர் தனது கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகவும், தன்னை விரும்பாதவர்கள் தயவு செய்து விட்டுவிடுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது அவருக்கு மட்டுமல்லாமல், அந்த புகைப்படங்களில் இருந்த பிரபலங்களையுமே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பார்ட்டி அல்லது ப்ரைவேட் புகைப்படங்கள் ஒருவரது கணக்கின் வழியாக வருகிறது என்றால் அதற்கு தகுந்த பாதுகாப்புகளை எடுக்க வேண்டும். சுசித்ராவை நிறைய நபர்கள் ஃபாலோ செய்வதால் இணையத்தில் இந்த படம் வேகமாக பரவி விட்டது. ஒருமுறை ஹேக் ஆனதுமே பாடகி சுசித்ரா சுதாரித்திருக்க வேண்டும். 

சேவக்

வீரேந்தர் சேவக், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர். மைதானத்தில் பந்துகளை சிக்ஸர் விளசுவது போல, ட்விட்டரில் அனைவரையும் காமெடியாக விளாசி தள்ளி பெயர் வாங்கியவர். பிறந்தநாள் என்றால் கிண்டலாக ட்விட் செய்வது. பியர்ஸ் மோர்கனுடன் வாய்ச்சண்டை என தனது துறை சார்ந்த நபர்களுடனான ட்விட்டர் சண்டையில் ஈடுபட்டு வந்தார் சேவாக். திடீரென ஒருநாள், டெல்லியில் படிக்கும் ராணுவ வீரரின் மகள் தன் கருத்தை வெளிப்படுத்தி இருந்ததை கலாய்த்து வாங்கி கட்டிக்கொண்டார். பல லட்சம் ஃபாலோயர்களுடன் இருக்கும் அவர் மற்றவர்களின் தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ட்ரோல் செய்வது அவர் மீதான நல்ல எண்ணத்தை கெடுக்கிறது. மேலும் அவரது ஃபேன்ஸ் இதனை ஷேர் செய்யும் போது அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம் கெட்டு விடுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா முதல்வராக போகிறார், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைப்பு என்று பிரேக்கிங் வந்த சமங்களில் அதே ட்ரெண்டில் தமிழ்நாட்டில் 234 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என ட்விட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அரசியல் சூழலை யார் வேண்டுமானலும் விமர்சிக்கலாம் என்றாலும். இறுதியில் அது நான் அரசியல் பதிவாக போடவில்லை என அஸ்வின் பின்வாங்கியது தான் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அப்படி இல்லை என்றால் 234 என்ற சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையுடன் ஏன் ஒப்பிட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. 

இவர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு ட்விட் தான் சர்ச்சையாக அமைகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை போன்றவர்களுக்கு எந்த ட்விட் போட்டாலும் சர்ச்சையாகிறது. இவர்கள் கருத்து தெரிவிக்கவே கூடாது என்று கூறுவதும் தவறு. ஆனால் ஒரு கருத்தில் நிலையாகவும், தவறு நடந்தால் உடனடியாக அதற்கு தன்னிலை விளக்கத்தையோ, யார் ஒருவரின் எமோஷனல் விஷயத்யதையும் தாக்கும் பதிவாகவும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். இது குறித்து சமூக வலைதளங்களிலும் அவர்களுக்கு தெரிந்த துறையை மட்டும் விமர்சித்தால் பிரச்னை இருக்காது என்று கூறிவருகின்றனர். உங்கள் கணக்கு பாதுகாப்பற்றதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அதனை பாதுகாக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களது அல்லது உங்களை சார்ந்தவர்களது ப்ரைவேட் விஷயங்கள் இணையத்தில் வைரலாக உலவத் துவங்கி விடும்.

நியாயமான கருத்துக்களை சுதந்திரமாக உங்கள் முழு மனதுடன் பகிருங்கள், ஆனால் ட்ரெண்டுக்காக எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டாம். உங்களை தொடரும் பலருக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருங்கள். உங்களது பிராண்ட் வேல்யூ தானாக உயரும். 

ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்