“பன்றிக்காய்ச்சல் இப்போது பணக்காரக் காய்ச்சல்”... என்ன சொல்கிறார் அமைச்சர்!

ஸ்வைன் ஃப்ளு

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிவருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இறப்புகளும் நிகழ்ந்துவருகின்றன. 
சேலம் சாய் ரக்‌ஷன், அரியமங்கலம் ஜீவானந்தம், ஆரணியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், திருவள்ளுரில் ஒரு பெண். இப்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், வேலுார், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், இன்னும் பலர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

வயது வித்தியாசமின்றி, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி, ஆண் பெண் பேதமின்றி  எல்லா தரப்பினரையும் பாதித்துவரும்  பன்றிக்காய்ச்சல், தமிழகத்தில் சமீப நாட்களாக  பெரும்பீதியை ஏற்படுத்திவருகிறது. ஆனால், இதற்கான தடுப்பு நடவடிக்கைகளோ, முறையான சிகிச்சை நடைமுறைகளோ தமிழக சுகதாரத்துறையினால் எடுக்கப்படாததால், இந்த நோய் தீவிரமாகப் பரவிவருவதாக குற்றம் சாட்டுகின்றனர், சமூக ஆர்வலர்கள். அரசின் மெத்தனத்தால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிர்ச்சி தருகின்றனர் இவர்கள். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “ஸ்வைன் ஃப்ளூ எனச் சொல்லப்படும் பன்றிக்காய்ச்சல், சாதாரணமாக பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாகப் பரவும் தன்மைகொண்டதால், எளிதில் பரவுகிறது. தொடர் காய்ச்சல், உடல்வலி, தொண்டைவலி, இருமல், தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்தடுத்து உறுப்புகள் செயலிழந்து மரணம் நேர்கிறது. இத்தகைய கொடூரமான காய்ச்சலைக் கட்டுப்படுத்தவோ, உயிரிழப்புகளைத் தடுக்கவோ அரசு சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 10-க்கும் மேற்பட்ட மரணங்கள் இதனால் நிகழ்ந்தபிறகும், அதன் ஆபத்தை உணராமல் மெத்தனமாகவே உள்ளனர். பன்றிக்காய்ச்சலினால் மரணம் நிகழ்ந்தால், உடனே தங்களின் மருத்துவக்குழுவுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி, மேம்போக்கான நடவடிக்கைகளையே எடுத்துவருகிறது சுகாதாரத்துறை” என்றார்.

ஸ்வைன் ஃபுளு

தொடர்ந்து பேசிய அவர், “பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை, மிக இயல்பான காய்ச்சல் கண்டவராகக்கருதி சிகிச்சை அளிக்கமுடியாது. நோயாளியைத் தனிமைப்படுத்தி, அதற்கான மருந்துகளை அளித்து, பிரத்யேக சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அதிர்ச்சி என்னவென்றால், பன்றிக்காய்ச்சலுக்கான முறையான சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக மருத்துவமனைகளில் ஒன்றிரண்டைத் தவிர, மற்றவற்றில் துளியும் வசதிகளில்லை. தனிக் கண்ணாடிக்கூண்டுகளோ, அல்லது மருத்துவ சிகிச்சை உபகரணங்களோ போதிய அளவு கிடையாது. இதனால், வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கின்றனர். இந்தக் காய்ச்சலுக்கான மருத்துவச் செலவாக தனியார் மருத்துவமனை நிர்ணயித்துள்ள கட்டணம், சுமார் 20 லட்சம்” என அதிர்ச்சி தந்தார் அவர். 

“ தமிழகத்தில், தற்போது இரண்டு பெரிய மருத்துவமனைகளில் மட்டும்தான் பன்றிக்காய்ச்சலுக்கான பிரத்யேக சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளான இவை, 15 முதல் 20 லட்சம் வரை இதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. அதிலும்கூட உயிருக்கு உத்தரவாதமில்லை என எழுதி வாங்கிக்கொள்ளப்படுகிறது. பணக்காரர்கள், தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள லட்சங்களில் செலவழிக்க முடியும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள், அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வார்கள்? சமீபத்தில், அரசியல் சர்ச்சைக்குள்ளான ஒரு மருத்துவமனை, பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை மேற்சொன்ன மருத்துவமனைகளில் ஒன்றுக்கு பரிந்துரைசெய்வதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து, பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர முனைப்புக் காட்டவேண்டும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்தும், பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டோம். 

அமைச்சர் விஜயபாஸ்கர்“தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவுவதாகச் சொல்லப்படுவது உண்மையில்லை. டெங்கு வந்தபோது, டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கையே கிடைக்காத அளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். அதுதான் தீவிரம். அப்படியா இருக்கிறது தமிழகத்தில்?” எனக் கேள்வி எழுப்பியவர், “தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்ததையும், இதுவரை 6 பேர் இறந்திருப்பதையும் ஒப்புக்கொள்கிறோம். திருவள்ளூர், வேலுார், திருச்சி,கோவை இங்கெல்லாம் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டதும் சுகாதாரத்துறை இதற்கான தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டது.

இப்போது, பன்றிக்காய்ச்சலை தமிழகத்தில் முழுமையாகக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். இறந்த ஆறு பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது உண்மை. ஆனால், இறப்பு அதனால் நிகழவில்லை. பன்றிக்காய்ச்சல் சாதாரண ஒருவகைக் காய்ச்சல் என உலக சுகாதார நிறுவனமே தெரிவித்துள்ளது.  இதற்கு, டாமிஃப்ளூ மாத்திரையை எடுத்துக்கொண்டாலே காய்ச்சல் குணமாகும். ஆனால், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய நோய், கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு உண்டானால், உடனடியாக ஆரம்பநிலையிலேயே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

இவர்கள், தங்களுக்கு வந்த காய்ச்சலை சாதாரண காய்ச்சலாகக் கருதி வீட்டிலிருந்தபடியே வழக்கமான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, சிகிச்சையைத் தாமதிக்கின்றனர். இதனால், அடுத்தடுத்து உறுப்புகள் செயலிழந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடைசி நேரத்தில்தான் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். ஆறு பேரின் மரணம் நிகழ்ந்தது இப்படித்தான். இதனால்தான், பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்ததும், தாமதிக்காமல் அரசு  மருத்துவமனைகளை அணுகும்படி  தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்

தமிழகத்தின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் வகையில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 16 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் மற்றும் 2 லட்சம் வேக்சின்கள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கும் இவை இலவசமாகத் தரப்பட்டுள்ளன. 

நோயின் அறிகுறியை உணர்ந்த 8 மணிநேரத்தில் 'ஸ்வேப் பரிசோதனை' மூலம் இதை உறுதிசெய்துகொண்டு மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், குணமாகிவிடும். தனியார் மருத்துவமனைகளில் 500 முதல் 1000 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் இந்தப் பரிசோதனை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே செய்யப்படுகிறது. கட்டணத்தைத் தவிர்க்கும்படி அவர்களையும் அறிவுறுத்தியிருக்கிறோம். இப்படி நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னரும், தொடர்ந்து சுகாதாரத்துறை  பன்றிக்காய்ச்சல் விவகாரத்தில் தீவிர கவனத்துடன் நடவடிக்கை எடுத்துவருகிறது. தனியார் மருத்துவமனைகள் குறித்த புகார் உண்மையென்றால், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம். 

அமைச்சராக மட்டுமன்றி ஒரு மருத்துவராகவும் சொல்கிறேன், பன்றிக்காய்ச்சலினால் ஒருபோதும் மரணம் சம்பவிக்காது. மக்கள், அதுகுறித்து பீதி கொள்ளத்தேவையில்லை.” என்றார்.

அமைச்சர் சொன்னது நிஜம் என்றால், தமிழகத்தில் இனிப் பன்றிக்காய்ச்சலால் ஒரு மரணமும் நிகழாது என நம்புவோம்!

- எஸ்.கிருபாகரன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!