வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (04/03/2017)

கடைசி தொடர்பு:11:19 (04/03/2017)

கோபாலபுரம் பஞ்சாப் வங்கியில் கொள்ளையடிக்கச் சென்ற திருடனின் அட்டகாசம்!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாக்கரை உடைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையன், வங்கியில் உள்ள ஆவணங்களை எரித்துவிட்டுச் சென்றுள்ளான்.

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோபாலபுரம் கிளையில்,  இன்று அதிகாலை, வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன், லாக்கரில் உள்ள பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளான். லாக்கரை உடைக்க முடிவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவன், வங்கியில் இருந்த சில ஆவணங்களை எரித்துவிட்டுச் சென்றான். கொள்ளையனின் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால், லாக்கரில் இருந்த 10 லட்ச ரூபாய் தப்பியது.

பாதுகாவலர் யாரும் இல்லாத நிலையில், வங்கியை நோட்டமிட்ட கொள்ளையன், கொள்ளையடிக்க முயற்சிசெய்துள்ளான். வங்கியின் உள்ளே வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்துவருகின்றனர். ராயப்பேட்டை போலீஸார், கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை கிழக்கு இணை ஆணையர் மனோகரன், கொள்ளை முயற்சி நடைபெற்ற வங்கியில் ஆய்வுசெய்தார்.

கொள்ளைச் சம்பவம் காரணமாக, வங்கியில் இன்று பரிவர்த்தனை நடைபெறாது என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

-எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க