வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (04/03/2017)

கடைசி தொடர்பு:19:07 (04/03/2017)

''இனிமேல் அவரைப் பேச விடக்கூடாது!'' ராதாரவியைக் கண்டிக்கும் மாற்றுத்திறனாளி அமைப்புகள்

 ராதாரவி

தி.மு.க தலைவர் கருணாநிதியால் பெயர்சூட்டப்பெற்றவர்கள்  ராதாரவிக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள். அவர்களின் மனம்குன்றும் வகையில் பேசிய நடிகர் ராதாரவி, பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளதுடன், அவருக்கு எதிராகப் போராட்டமும் நடத்தவிருக்கிறது. 

ராதாரவி. இவர் நடிகர் எம்.ஆர்.ராதாவின் கலையுலக வாரிசு. அ.தி.மு.க-வில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த ராதாரவி கடந்த சில நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இருந்து விலகி, தி.மு.க-வில் இணைந்தார். இவர் பேச்சில் எப்போதும் நகைச்சுவை இருப்பதோடு... மனம் நெருடும் கருத்துகளும் இருக்கும். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, பா.ம.க நிறுவனர் ராமதாஸையும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவையும் மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டு... கிண்டலடித்துப் பேசியிருந்தார். இந்தப் பேச்சைக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டு ரசித்தனர். ஆனால், அந்தப் பேச்சுத்தான் இப்போது ராதாரவிக்கு பெரும் தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது. 

நகைச்சுவைக்காக அவர் பேசிய இந்தப் பேச்சால் பல தரப்பில் இருந்தும் அவருக்குக்  கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ''மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படும்படி அவர் பேசியுள்ளது, மனித தன்மையற்றச் செயல்'' எனப் பலரும் தங்கள் கருத்துகளைச்  சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ராதாரவியின் பேச்சுக்கு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் தி.மு.க மகளிர் அணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி. அவர், தன்னுடைய முகநூல் பக்கத்தில், ''ராதாரவி, மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இகழ்ச்சியாக, ஏளனமாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதைக் கருணாநிதியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உடல்கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம்தான் தாண்ட முடியாத தடை. மாற்றுத்திறனாளிகள், மனத்தடைகளை உடைத்தவர்கள்''  என அதில் தெரிவித்துள்ளார்.

கனிமொழி

இதுதொடர்பாக அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பெண்களுக்கான அமைப்பின் துணைத் தலைவர் ரேமா ரவியிடம் பேசினோம். ''அவர்(ராதாரவி), சினிமா நடிகராகவோ; அரசியல்வாதியாகவோ இருக்கட்டும். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைக் கிண்டல் செய்யும் அளவுக்கு அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆளில்லை. அப்படியே இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. போலியோவை ஒழிப்பதற்காக அரசாங்கம் பல திட்டங்களைக் கொண்டுவந்து குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறது. மனவளர்ச்சிக் குன்றிய ஒரு குழந்தையை, அதைப் பெற்றெடுத்த தாய் எப்படிக் கஷ்டப்பட்டு வளர்க்கிறார் தெரியுமா?'' என்று ஒருநிமிடம் பேச்சை நிறுத்திப் பின்னே இப்படிச் சொல்கிறார். ''ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தையைப் பார்த்து அவர்கள்விடும் கண்ணீருக்கு அளவே கிடையாது. சமுதாயத்தில் நமது குழந்தைகளும் ஏதேனும் ஒரு வகையில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்காக நாள்தோறும் பயிற்சி கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அந்தக் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுகின்றனர். மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளைச் சிறப்புப் பள்ளியில் கொண்டுபோய்விடும் பெற்றோர்கள், அன்றைய நாள் முழுவதுமே அவர்களுடன் இருக்கின்றனர். அதுபோன்ற குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், இதுபோன்று பேசுவது மிகவும் கண்டனத்துக்குள்ளானது'' என்ற ரேமா ரவி, ''அவருடைய பேச்சு அந்தப் பெற்றோர்களுக்கு எப்படி வலிக்கும் தெரியுமா?'' என்ற கேள்வியுடன் மீண்டும் தொடர்ந்தார்.

''மைக்கைப் பிடித்து ஒருநாள் முழுவதும் பேசிவிடலாம். ஆனால், மாற்றுத்திறனாளிகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு பேசுவதற்கு அவருக்கு என்ன தெரியும்? எம்.ஆர்.ராதாபோல அவரால் நடிக்க முடியும். ஆனால், மாற்றுத்திறனாளிகளின் வலிகளைப் புரிந்துகொண்டு உண்மையாக நடிக்க முடியுமா? இதுபோன்ற ஆட்களை இனிமேல் பேசவே விடக்கூடாது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதைக் கேட்டு, சிரித்தவர்களின் வீடுகளில் மாற்றுத்திறனாளிகள் இருந்திருந்தால்... அந்த வலி என்னவென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் குழந்தைகள் இல்லாததால்தான் எல்லோரும் அப்படிச் சிரித்துள்ளார்கள். பொதுவாக நாடகம், மேடை ஏறுபவர்களுக்கு அந்தக் குழந்தைகளின் வலி பற்றித் தெரியாது. அவர், பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்காக நாளை (5-3-17) போராட்டத்தைத் தொடங்கயிருக்கிறோம்'' என்றார், வலியுடன்.

மாற்றுத்திறனாளிகளை மனம் புண்படும்படிப் பேசுவதா நாகரிகம்?

- ஜெ.பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்