"கதையாடலும், கொஞ்சம் இலக்கியக் கச்சேரியும்!": சமூகத்தை முன் நகர்த்தும் புதிய தலைமுறை இளைஞர்கள்! #3minsRead

வாசகசாலை நடத்திய புத்தகங்கள் பற்றிய உரையாடல் நிகழ்வு

ங்கள் பாட்டிக்குத் தினமும் எதையாவது படித்துக்கொண்டே இருக்கும் பழக்கம் உண்டு. செய்தித்தாள், சிறுகதை, பெருங்கதை, புத்தகங்கள் என்று தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருப்பார். படிப்பதை எல்லாம் வீட்டிற்கு வருபவர்களிடம் சுவாரசியமாகப் பகிர்ந்து கொள்வார். வீட்டின் முற்றம் தொடங்கி டெல்லிவரை அவரது பேச்சில் இடம்பெற்றிருக்கும். இன்றளவும் அவரால், தான் வாசித்தவற்றை நினைவில் வைத்திருக்க முடிந்திருக்கிறது. இப்படிக் கதைபேசுவது கிட்டத்தட்ட ஒருகலை. வாசிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சிறப்பானது நாம் வாசித்தவற்றை கதைபோல பகிர்ந்துகொள்ளும் திறனும்.

ஆனால், எல்லோருக்குமே இப்படியாக அமைந்து விடுவதில்லை. நகரமயமாகி விட்ட சூழலில் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் வருவதே குறைவு. அப்படி யாராவது வந்தாலும் அந்த நபரும் தனது 'ஸ்மார்ட்போனில்' ஃபேஸ்புக் போட்டோக்களுக்கு 'லைக்' போட்டுக் கொண்டிருக்கும்போது அவரிடம்போய் ’சுஜாதா’, ’சாலிங்கர்’ என்று நாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. இப்படி நாம் வாசிக்கும் தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பகிர வேண்டுமா? அதற்கான களத்தைத்தான் உருவாக்கித் தருகிறது நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட 'வாசகசாலை' அமைப்பு. கிட்டத்தட்ட புத்தக வாசகர்கள் மற்றும் புத்தக ரசிகர்களுக்கான ரியல் டைம் ஃபேஸ்புக் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அண்ணா நூலகத்தில்

ஒரு கதையை எழுதி முடித்ததோடு, ஒரு எழுத்தாளனுக்கும் அந்த புத்தகத்துக்குமான தொடர்பு முடிந்து விடுவதில்லை. தனது வாசகர் வழியாக அந்த எழுத்துக்கும் தனக்குமான பிணைப்பை மீண்டும் மீண்டும் அவர் புதுப்பித்துக் கொள்கிறார். அந்த பிணைப்பை உருவாக்க, ஏதுவாய் அமைகிறது 'வாசகசாலை' இலக்கிய உரையாடல் நிகழ்வுகள். இந்த அமைப்பின் நிகழ்வுகளை சென்னையில் உள்ள முக்கிய புத்தக நிலையங்களில் நடத்தி வந்தவர்கள், அதன் அடுத்தகட்டமாக தற்போது சென்னையில் இருக்கும் தலைசிறந்த நூலகங்களில் நடத்தி வருகிறார்கள். இதில் சிறப்பம்சம் வீட்டு நிர்வாகிகள், ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், மாணவிகள், இன்னும் பல்வேறு தரப்பினர்கள் என்று பெண்களின் பங்கு வாசகசாலையில் அதிகம்.

சுமார் இரண்டு வருடங்களாக இயங்கிவரும் இந்த குழுவைப் பற்றி அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். "மாதந்தோறும் முதல் சனிக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் இடம்பெறும் கதைகளின் மீதான கதையாடல் நிகழ்வையும், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் மீதான விவாதங்களை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் நடத்துகின்றனர். கூடுதலாக தமிழின் மகத்தான நாவல்கள் வரிசையின் மீதான அறிமுகம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சென்னை அசோக் நகர் வட்டார நூலகத்தில் நடைபெறுகிறது” என்கிறார்.

அசோக் நகர் வட்டார நூலகத்தில்

"நூலகங்களில் இதுபோன்ற சுவாரசியமான விவாதக்களமா, வித்தியாசமாக இருக்கிறதே?" என்றதற்கு, "வாசகசாலை என்பது வாசிப்பின் மீது பேரார்வம் இருப்பவர்களுக்கான ஒருங்கிணைப்புத் தளம். வாசிப்பு ஆர்வமிருப்பவர்கள் எப்போதும் நிறைந்திருக்கும் இடம் நூலகங்கள். அதனால் அங்கே நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்கள்.

நூலகங்களை வெறுமனே வாசிப்பதற்கான இடமாக மட்டுமில்லாமல், அதன் அடுத்தகட்டமான அந்த புத்தகங்களின் மீதான உரையாடல்களுக்குமாக பயன்படுத்த வழிவகை செய்திருப்பது செம்மை.

தொடர்புக்கு: +91 9942633833, +91 9790443979

வாங்க, வாசக மக்கா.. கதையாடலாம்!

- ஐஷ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!