இலங்கையை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்! திருமாவளவன்

ஐ.நா சபையின் தீர்மானத்தை மதிக்காத இலங்கையை, சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரிக்க, இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து, 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை அரசு தொடர்ந்து புறக்கணித்துவருகிறது. போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில், பிற நாட்டு நீதித்துறை வல்லுநர்களை உள்ளடக்க வேண்டும் என்ற ஐ.நா சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக்கூடாது. இலங்கைப் போர்க்குற்ற வழக்கை, ஐ.நா பொது மன்றத்தின்மூலம் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்துக்கு அனுப்பிட, தற்போதைய ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை இந்திய அரசு ஆதரித்து, அழுத்தம் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதையும் தற்போதைய மைத்ரிபாலா அரசின் கீழும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பதையும் இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் செயலாளரின் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. இந்த நிலையில், ஐ.நா மனித உரிமை கவுன்சில், இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் தருவது இலங்கை அரசின் தமிழர் விரோதப் போக்குக்கு ஆதரவு அளிப்பதாகப் பொருள்படும்.

வடகொரியாவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை கவுன்சில் அந்த நாட்டுக்கு விதித்த நிபந்தனைகளை அது செயல்படுத்தத் தவறியதால், அந்த வழக்கு இப்போது சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வடகொரியாவைப் போலவே இலங்கை அரசும் ஐ.நா-வின் தீர்மானத்தை மதிக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. எனவே, இலங்கையையும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்துவதுதான் சரியாக இருக்கும். தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தில், 2010-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப்போகச்செய்யும் விதத்தில் திருத்தம் கொண்டுவர, இலங்கை அரசு முயல்கிறது. அதற்கு, இந்திய அரசு ஒத்துழைப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம்செய்யும் நடவடிக்கையை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையின் போர்க்குற்றங்களை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரிக்க, இந்திய அரசு அழுத்தம் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் மார்ச் -8ம் தேதி சென்னையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!