‘என்னை அழிக்க நீங்களே போதும்!’ - குடும்பத்தில் கொந்தளித்த தீபா

தீபா-மாதவன்

தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு வரும் அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பேரவையின் நடவடிக்கைகளும் தீபா குடும்பத்தினரின் தலையீடுகளும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. 'எவ்வளவு சிரமங்கள் கொடுத்தாலும், ஜெயலலிதாவைப் போல மீண்டு எழுவேன்' என வேதனை கலந்த முகத்துடன் பேசுகிறார் தீபா. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 'தலைமையேற்க வாருங்கள்' என தீபாவின் பின்னால் ஒரு கூட்டம் கூடியது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் பன்னீர்செல்வம் முரண்பட்ட பிறகு, அவர் பின்னால் அ.தி.மு.க நிர்வாகிகள் அணிவகுத்தனர். 'நானும் பன்னீர்செல்வமும் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம்' என அறிவித்தார் தீபா. ஆனால், அடுத்து வந்த சில நாட்களில், 'என்னை நோக்கித்தான் தொண்டர்கள் வருகின்றனர். என்னுடைய தலைமையில்தான் அனைவரும் இயங்க வேண்டும்' எனப் பேசிவந்தார். இதன்பின்னர், பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்களும் தீபாவுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டனர். கடந்த சில நாட்களாக, தீபா மற்றும் அவரது கணவர் மாதவன்குறித்து வெளியாகும் தகவல்களால், பேரவை நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

"ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அரசியல் பயணத்தைத் தொடங்கினார் தீபா. நிர்வாகிகளை அறிவிப்பதில் இருந்து அறிக்கைகள் வெளியாவது வரையில், ஏராளமான குழப்பங்கள் நடந்துவருகின்றன. சில அறிக்கைகளில் தீபா கையெழுத்து இருப்பதில்லை. பேரவையின் நிர்வாகிகள் சிலர், மாதவனை முன்னிறுத்தி அரசியல் செய்கின்றனர். தீபாவுக்கு எதிராகவும் தகவல் பரப்புகின்றனர். மாவட்டங்களில் பொறுப்பாளர்களை அறிவிப்பதில் தெளிவில்லாமல் உள்ளனர். 'பேரவையில் உயர் பதவி அடைய வேண்டும்' என்பதற்காக மாதவனை தவறான திசையில் சிலர் வழி நடத்துகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீபா வீட்டுக்கு வரும் நிர்வாகிகள், மாதவனைச் சந்தித்துதான் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்துவந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில், பேரவைக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவலை தீபா மறுத்தார். இப்படியொரு பட்டியலை வெளியிடுவதே மாதவன்தான். அவர் சொல்லும் நபர்களுக்குப் பதவி கொடுக்க தீபா மறுத்து வருவதால், குடும்பச் சண்டை உச்சத்தில் இருக்கிறது. 'என்னை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரவேண்டியதில்லை. குடும்பத்தில் உள்ளவர்களே போதும்' எனக் கோபத்தைக் காட்டியிருக்கிறார் தீபா. ஆனால், மாதவனோ, 'எங்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லை. தீபாவை முதல்வராக்குவதே என்னுடைய பணி' எனப் பேசுகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கார்டனில் உள்ளவர்களே அதிகாரத்தை மையமாகவைத்து அடித்துக்கொள்வார்கள் என்றால், தீபா பேரவையில் நடக்கும் காட்சிகள் அதைவிடக் கொடுமையாக இருக்கிறது" என்கிறார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தீபா பேரவை நிர்வாகி ஒருவர். 

தீபா

பேரவைக்குள் நடக்கும் குழப்பங்களாலும், மக்கள் மத்தியில் தீபாவைப் பற்றிப் பரவும் தகவல்களாலும் அதிர்ச்சியடைந்த அவரின் ஆதரவாளர்கள், நேற்று தீபாவிடம் விரிவாக விவாதித்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அவரது ஆலோசகர் ஒருவர், "அரசியல் களத்தில் தீபாவுக்கு எதிராக சதி நடக்கிறது. அவர் பிராமணர் என்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது கணவர் தெலுங்கு சமுதாயத்தைச்  சேர்ந்தவர் என்றும் தகவல் பரப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல், சசிகலாவுக்கு எதிரான அ.தி.மு.க-வினர், அவர் பின்னால் அணி திரண்டு நிற்பதை, கார்டனில் உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'ஆர்.கே.நகரில் போட்டியிட்டால், அவர் வென்றுவிடுவார்' என்பதற்காக, பேரவைக்குள் குழப்பம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் தொடங்கியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள சில நிர்வாகிகளும் தீபாவுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு இறங்கியுள்ளனர். ஓ.பி.எஸ் அணிக்குள் வராமல், அவர் தனி ஆவர்த்தனம் நடத்துவதை அவர்கள் விரும்பவில்லை. நேற்று, மிகுந்த வேதனையில் இருந்தார் தீபா. அவரிடம் பேசும்போது,

'நீங்கள் தைரியமாக இருங்கள். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இப்படித்தான் பல சிரமங்களுக்கு ஆளானார்கள். ஒருகட்டத்தில் தொண்டர்களைப் பச்சை குத்தச் சொல்லவேண்டிய நிலைக்கு எம்.ஜி.ஆர் ஆளானார். ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தவர்களும் அடுத்து வந்த தேர்தல் களத்தில் காணாமல்போய்விட்டார்கள். இன்று, அ.தி.மு.க மூன்று பிரிவுகளாகப் போய்விட்டது. சசிகலா, எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோர் ஓர்  அணியாகவும் பன்னீர்செல்வம் அணியில் கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன் என கூட்டுத் தலைமையாகவும் இருக்கிறது.

ஆனால், நீங்கள் அப்படி அல்ல. இவர்களிடம் இருந்து தனித்துத் தெரிகின்றீர்கள். உங்களுக்கு விழப்போகும் வாக்குகளும் தனித் தலைமையைத்தான் சுட்டிக்காட்டும். தனி நபராக உங்கள் செல்வாக்கு அதிகமானால், கட்சிக் கட்டுப்பாடும் உங்கள் கைக்கு வந்துசேரும். நாளைக்கு ஸ்டாலினை எதிர்க்கப் போவது நீங்கள்தான். உங்களுக்கு வாக்கு கிடைப்பதற்கு யார் காரணமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீங்கள் நன்றியோடு இருங்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. பேரவையில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அனைத்தும் சரியாகிவிடும்' எனப் பேசியுள்ளனர். அவரும் இதைப் புரிந்துகொண்டு, பேரவையின் நிர்வாகிகளை மாற்றி அமைக்க இருக்கிறார். 

நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு பேசிய தீபா, 'எனக்கு எதிராக பிரச்னை செய்கின்றவர்கள் யார் என்று தெரியும். தொல்லை கொடுத்தால் ஓடிவிடுவேன் என்று நினைக்கிறார்கள். ஜெயலலிதா பிறந்தநாளில் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். மக்களுக்காகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பயணிப்பேன். நான், ஜெயலலிதா வழியில் நல்ல தொடக்கத்தைக் கொடுப்பேன்' என்றார் உறுதியாக. 'அவரது உறுதி என்னவாகும் என்பதற்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பதில் சொல்லும்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

- ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!