வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (06/03/2017)

கடைசி தொடர்பு:14:39 (06/03/2017)

'குடிநீர் பிரச்னையைக் கவனிங்க எடப்பாடி பழனிசாமி!'  -வானதியின் நீர் யாத்திரை

வானதியின் தண்ணீர் யாத்திரை

ண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு தேடி யாத்திரையைத் தொடங்க இருக்கிறார் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன். ' நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில் மற்றவர்களைவிடவும் அரசின் பங்கு அதிகமாக இருக்கிறது. மறுசுழற்சி முறையில் நீரைப் பயன்படுத்துவது குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த அக்கறையும் இல்லை' எனக் கொந்தளிக்கிறார் வானதி. 

தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. 'கோடை காலத்தை சமாளித்துவிட முடியுமா?' என்ற அச்சம் குடிநீர் வாரிய அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது. கொங்கு மண்டலத்தின் நீர் ஆதாரங்களில் உள்ள குடிநீர் கையிருப்பும் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. திருப்பூர் சாயப்பட்டறை தொழிலைக் காப்பாற்றுவதற்கு 100 கோடி ரூபாயில் பொது சுத்திகரிப்பு மையம் கொண்டு வர நடவடிக்கை எடுத்த வானதி, கொங்கு மண்டலத்தின் நீர் வளத்தைக் காக்க, மறுசுழற்சி முறையைக் கையில் எடுத்திருக்கிறார்.  ' உங்களது யாத்திரை என்ன பலனைக் கொடுக்கப் போகிறது?' என வானதி சீனிவாசனிடம் கேட்டோம். " எங்களது தாகம் தீர்க்கும் யாத்திரையில் நான்கு கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமான பில்லூர், ஆழியாறு அணைகளைத் தூர்வார வேண்டும்; நொய்யல் உள்ளிட்ட நீராதாரங்களை புனரமைக்க வேண்டும்; பாண்டியாறு, புன்னம்புழா, அத்திக்கடவு-அவிநாசி உள்பட நிலுவையில் உள்ள நீர்த் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். வரும் 10-ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் யாத்திரையை நடத்துகிறோம். நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தாகம் தீர்க்கும் யாத்திரைக்காக, கோவையில் உள்ள பத்து லட்சம் மக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியைத் தொடங்கிவிட்டோம். பயணத்தின்போது, சாலைகளில் மரங்களை நட இருக்கிறோம். ஒரு நீராதாரத்தை புனரமைப்பதும் எங்கள் யாத்திரையின் நோக்கம்" என்றவர், 

எடப்பாடி பழனிசாமி" குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து, நேற்று விவசாயிகள், சிறுதுளி அமைப்பினர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பயணத்தின் நிறைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம். மாநிலம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் இருக்கிறது. ஆனால், கொங்கு மண்டலத்தில் என்னுடைய பங்களிப்பு அதிகமாக இருப்பதால், இங்கிருந்து யாத்திரையைத் தொடங்குகிறேன். கோவையின் வனவளத்தைப் பாதுகாப்பது; நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க வைப்பது உள்பட பல செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எங்களுடைய கையெழுத்து இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது. நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குடிநீரை பக்கத்து மாநிலங்கள் மறுக்கும்போது, வீதிக்கு வந்து குரல் கொடுக்கிறோம். ஆனால், அவரவர்களின் ஊரில் உள்ள இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்கு நாம் எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. குளம், குட்டை, ஏரி, கோவில் போன்றவற்றில் ஆக்ரமிப்பு வராமல் பாதுகாத்தாலே போதுமானது. குளம், குட்டை, ஏரிகளைப் பராமரிக்கும் பணியில் இளைய தலைமுறையினர் களமிறங்க வேண்டும் என்பதை யாத்திரையின்போது வலியுறுத்த உள்ளோம். உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான வேலையே, சாக்கடை நீரை சுத்திகரித்து ஆற்றில் கலக்கவிடுவதுதான். ஆனால், இந்தப் பணிகளை அவர்கள் முறையாக மேற்கொள்வதில்லை. சாக்கடையை ஆற்றில் கலக்கவிடும் வேலையில்தான் ஆர்வம் காட்டுகின்றன. 'ஆற்று நீரில் சாக்கடையைக் கலக்கவிடக் கூடாது' எனச் சட்டம் இருக்கிறது. எந்த உள்ளாட்சி அமைப்புகளும் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. 

நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் தண்ணீர் கோவை நகரத்துக்குள் விநியோகிக்கப்படுகிறது. இதில், 30 மில்லியன் லிட்டர் சாக்கடை நீரைத்தான் சுத்திகரிப்பு செய்கின்றனர். மற்றவை அனைத்தும் குளம், ஏரியில் கலக்கவிடப்படுகின்றன. இதேநிலைதான் திருப்பூர் மாநகராட்சியிலும் நீடிக்கிறது. குடிநீருக்காக போராடுகிறோம். ஆனால், நம்முடைய கழிவுநீர் எப்படிச் செல்கிறது என்பது பற்றி நாம் கவலைப்படுவதில்லை. 50 ஃபிளாட்டுகள் உள்ள குடியிருப்பில், மறுசுழற்சி முறையில் கழிவுநீரைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதிகளைப் பற்றி திட்ட அனுமதி கொடுப்பவர்களும் கவலைப்படுவதில்லை. மறுசுழற்சி குறித்து போதிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீரைக் காப்பாற்றுவதற்கு குஜராத்தில் தனிச் சட்டமே உள்ளது. குடிநீரை இலவசமாகக் கொடுக்க வேண்டியது அரசின் மிக முக்கியமான கடமை. ஆனால், நமது மாநிலத்தில் மட்டும்தான் பாட்டிலில் நீரை அடைத்து, பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள். மாநில அரசுக்கு நீர் மேலாண்மை குறித்து எந்த அக்கறையும் இல்லை. நீர்நிலைகளில் மிக முக்கியமான ஆக்கிரமிப்பாளனாக மாநில அரசே திகழ்கிறது" எனக் கொந்தளித்தவரிடம், 

' சரி...ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த பிரதமர், ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கவனம் செலுத்தவில்லை? என்ற கேள்வி எழுகிறதே?' என்றோம். " காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறார். நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாகத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். 'அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம். நாடாளுமன்றத்தின் மூலம் சட்டமே கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது" என்றார் உறுதியாக. 
 
-ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்