கலகத்தில் முடிந்த பெண் போலீஸின் கலகல காதல்! - அதிர வைத்த காக்கி கதை | Relationship issues causes a policeman to commit murder - Tiruvallur

வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (06/03/2017)

கடைசி தொடர்பு:16:43 (06/03/2017)

கலகத்தில் முடிந்த பெண் போலீஸின் கலகல காதல்! - அதிர வைத்த காக்கி கதை

 போலீஸ்

பெண் போலீஸை காதலிப்பதில் சக போலீஸார்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. இது ஓட்டுமொத்த காக்கிகளுக்கு அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த குமாரின் மனைவி சரண்யா. குமார், ராணுவத்தில் பணியாற்றுகிறார். சரண்யா, திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸில் பணியாற்றினார். இவர்களுக்கு ஆண் குழந்தையும் உள்ளது. சரண்யாவும், அவரது தந்தை சுருளிராஜனும் திருவள்ளூரில் குடியிருந்து வருகின்றனர்.  திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த அமிர்தராஜும் சென்னை ஆயுதப்படை போலீஸில் பணியாற்றுகிறார். இவரும், சரண்யாவும் பயிற்சிக்காக டெல்லி சென்றபோது அறிமுகமாகி உள்ளனர். இந்த நட்பு சென்னை வரை தொடர்ந்துள்ளது. அனைவரிடமும் சகஜமாக பழகும் சரண்யா, திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லானை என்பவருடனும் பழகியுள்ளார். கல்லானையுடன் சரண்யா பழகுவதை அமிர்தராஜ் விரும்பவில்லை. இதுதொடர்பாக கல்லானைக்கும் அமிர்தராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்லானை, அவருடன் பணிபுரியும் சக போலீஸார் சுந்தரபாண்டியன், சந்திரன், சந்தானகுமார் ஆகியோர் மது அருந்தினர். அப்போது, அமிர்தராஜ் தன்னை மிரட்டியதை கல்லானை தெரிவித்துள்ளார். இதனால் அமிர்தராஜை தட்டிக் கேட்க நான்கு போலீஸாரும் முடிவு செய்தனர். உடனடியாக சரண்யா வீட்டுக்கு அவர்கள் சென்றனர். வீட்டுக்குள் அமிர்தராஜும், சரண்யாவும் இருந்தனர். 
வீட்டின் கதவை சுந்தரபாண்டியன் தட்டினார். மற்றவர்கள் வெளியில் நின்றனர். அப்போது சுந்தரபாண்டியனுக்கும், அமிர்தராஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அமிர்தராஜ். கத்தியால் சுந்தரபாண்டியனைக் குத்தினார். அவரது அலறல் சப்தம் கேட்டு வெளியில் நின்ற போலீஸார் உள்ளே சென்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சுந்தரபாண்டியனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியில் அவர் இறந்தார். இந்த தகவல் திருவள்ளூர் டவுன் போலீஸாருக்குத் தெரியவந்ததும் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார். அப்போது காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அமிர்தராஜை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆயுதப்படை போலீஸார் சந்திரன், கல்லானை, சந்தானகுமார், சரண்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., நஜ்மல் ஹோடா  திருவள்ளூருக்கு நேரில் வந்து விசாரணை செய்தார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாம்சன், கூடுதல் எஸ்.பி. ஸ்டாலின், திருவள்ளூர் டி.எஸ்.பி. ஈஸ்வரன் ஆகியோர் ஆயுதப்படை போலீஸாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், சென்னை ஆயுதப்படையில் சரண்யா பணியாற்றியுள்ளார். அங்கு சில சர்ச்சையில் அவர் சிக்கியதால் டெல்லிக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அங்கும் சில சர்ச்சை ஏற்பட்டதால் மீண்டும் திருவள்ளூருக்கு இடமாற்றப்பட்டார். சம்பவத்தன்று சரண்யா, அவரது அக்காள் தேவி, சரண்யாவின் தந்தை 70 வயதான சுருளிராஜன், அமிர்தராஜ் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போதுதான் அமிர்தராஜிக்கும் சுந்தரபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க வந்த சந்திரனுக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. சுந்தரபாண்டியனைக் கொலை செய்த வழக்கில் அமிர்தராஜை கைது செய்துள்ளோம். சரண்யாவின் அக்காள் தேவி கொடுத்த புகாரில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக கல்லானை, சந்தானகுமார், சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சரண்யா மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

சரண்யாவைத் தவிர மற்ற யாருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இதில் சுந்தரபாண்டியன் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். வீட்டுக்கு ஒரே பையன். அவருக்குத் திருமண ஏற்பாடு நடந்து வந்த சூழ்நிலையில் நண்பனுக்காக சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். சரண்யாவிடம் பழகுவதில் கல்லானை, அமிர்தராஜ் ஆகிய இரண்டு போலீஸ்காரர்களுக்கு இடையே நடந்த தகராறு சுந்தரபாண்டியனின் உயிரைப் பறித்து விட்டது" என்றனர். 

போலீஸ் விசாரணைக்குப்  பிறகு ஆயுதப்படை போலீஸார் கல்லானை, சந்திரன், சந்தானகுமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் ஏதாவது நீதிமன்றத்தில் சரண் அடையப் போவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுவே போலீஸார் இல்லாமல் மற்றவர்கள் என்றால் உடனடியாக போலீஸ் தன்னுடைய கடமையைச் செய்திருக்கும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் போலீஸ் என்பதால் குற்றவாளிகளைச் சுதந்திரமாக வெளியில் அனுப்பி இருக்கிறது போலீஸ். போலீஸ் பணி என்பது கட்டுப்பாடுகள் நிறைந்தவைகள். அப்படியிருந்தும் தனி மனித ஒழுக்கம் தவறிய செயல்கள் தொடர்ந்து போலீஸ் துறையில் அரங்கேறி வருகின்றன. இதைத்தடுக்க போலீஸ் துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். 

காதல் என்ற புனிதமான வார்த்தை பல சந்தர்ப்பங்களில் சங்கடங்களை ஏற்படுத்திவிடுகிறது. அப்படித்தான் திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸில் நடந்த காதல் சம்பவம் ஓட்டுமொத்த காக்கிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

-எஸ்.மகேஷ் 

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close