“ஊழியர்களின் அலட்சியம்... தவிக்கும் வாசகர்கள்...!” - தேவநேயப் பாவாணர் நூலகத்தின் அவலம்

தேவநேயப் பாவாணர் நூலகம்

"என் மனதுக்குப் பேரின்பத்தை அள்ளியள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகம்" என்று சொன்ன ஆபிரகாம் லிங்கனும், "நூலகம் இல்லாத ஊரை நான் ஓர் ஊராக மதிப்பதே இல்லை" என்றுரைத்த  லெனினும், "ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை" என்று சொன்ன சிசரோவும் மாபெரும் சிந்தனையாளர்கள். அவர்களுடைய அறிவுப்பசியை, நூலகங்களே தீர்த்திருக்கின்றன. அவர்கள் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ மாமேதைகளை உருவாக்கியதும், உருவாக்கிக்கொண்டிருப்பதும் நூலகங்கள்தான். 

அறிவுச் செல்வத்தின் சேமிப்புக் கிடங்காக விளங்கும் நூலகம், எல்லோருக்கும் எக்காலத்தையும் இணைத்துவைக்கும் சிந்தனைப் பாலமாக இருக்கிறது. ஆனால், ''அப்படியா இருக்கின்றன இங்குள்ள நூலகங்கள்'' எனக் கேள்வி எழுப்புகிறார் வாசகர் ஒருவர்.

தேவநேயப் பாவாணர் நூலகம்!

'மொழிஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர். இவரது பெயரில் சென்னை அண்ணா சாலையில் மிகப்பெரிய  ஒரு பழைய நூலகம் உள்ளது. இந்த நூலகத்துக்குக் கொடை அளித்திடும் புரவலர்களின் எண்ணிக்கையும், தினந்தோறும் வந்துபோகும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதேபோன்று, அங்குள்ள நூல்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால், தற்போது இந்த நூலகம் பழைமையை இழந்து நிற்பதுதான் வேதனைக்குரியது. 

இடம் மாறியிருக்கும் புத்தகங்கள்!

இதுகுறித்து அங்கு தினந்தோறும் வந்துசெல்லும் ஒரு மூத்த வாகர் ஒருவரிடம் பேசினோம். ''நான் இங்கு பல ஆண்டுகளாக வந்து செல்கிறேன். காலையில் வரும் நான், மாலைதான் கிளம்புவேன். எனக்குத் தேவையான புத்தகங்களைத் தேடி எடுத்துக் குறிப்புகள் எழுதுவேன். ஆனால், தற்போது நான் தேடும் புத்தகங்கள், அவர்கள் குறித்து வைத்திருக்கும் பெயர் இடப்பட்ட பட்டியல் அலமாரிகளில் இருப்பதில்லை. உதாரணத்துக்கு, ஓர் அறிஞருடைய வாழ்க்கை வரலாற்று நூலைத் தேடப்போனால், அது இடம் மாறி அருகிலுள்ள கவிதைகள் பட்டியல் உள்ள அலமாரிகளிலோ அல்லது கட்டுரைகள் பட்டியல் உள்ள அலமாரிகளிலோ உள்ளது. இதனால், அந்த ஒரு நூலைத் தேடுவதிலேயே ஒருநாள் பொழுதும் ஓடிவிடுகிறது அல்லது அதுபோன்ற நூல் இந்த நூலகத்தில் இல்லையோ என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதுகுறித்து நூலகத் தரப்பினரிடம் போய்க் கேட்டால், அவர்கள்...'அங்கேதான் இருக்கும். நன்றாகத் தேடிப் பாருங்கள்' என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டுத் தங்களுடைய சொந்தக் கதை தொடர்பான விவாதங்களில் ஈடுபடுகின்றனர். இதனாலேயே பல முக்கியமான குறிப்புகளை என்னால் எடுக்க முடிவதில்லை'' என்றார், ஏக்கத்துடன்.

புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அலமாரிகள்

ஊழியர்களின் அலட்சியம்!

''நூலகத்தையும், நூல்களையும் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு வாசகருடைய கடமையாகும். அதேபோன்று அதில் பணிபுரியும் ஊழியர்களும் செயல்பட வேண்டும். 'எந்தப் புத்தகம் இருந்தால் நமக்கென்ன...  இல்லாவிட்டால் நமக்கென்ன' என்று நூலக ஊழியர்கள் இருந்தால்... வாசகர்களுடைய அறிவுத்தேடலை அவர்களால் எப்படி நிறைவு செய்யமுடியும்? 'வேலைக்கு வந்தால் போதும்... சம்பளம் வந்துவிடும்' என்று நூலக ஊழியர்கள் செயல்பட்டால், எந்தவொரு வாசகனின் எதிர்பார்ப்பையும் அவர்களால் ஈடுசெய்ய முடியாது. வாசகர்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் கேட்கும் புத்தகங்களை ஆர்வத்துடனும், துடிப்புடனும் எடுத்துக்கொடுக்கும் பணியில் ஊழியர்கள் இருக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார், எழுத்தாளராய் கோலோச்சிவரும் ஒரு வாசகர். 

செயல்படாத அரங்கங்கள்!

இதைவிடச் செயல்படாமல் இருக்கும் அரங்கங்களைப் பற்றிச் சொல்கிறார், இலக்கிய வாசகர் ஒருவர். ''நான், தேவநேயப் பாவாணர் நூலகத்துக்குப் பலமுறை வந்திருக்கிறேன். இங்கு, குறிப்புதவிக்காக எண்ணற்ற நூல்களை எடுத்துப் படித்திருக்கிறேன். அப்படி, நான் எழுதி அச்சிடப்பட்ட சில நூல்கள் இங்குள்ள இரண்டு அரங்கங்களில்தான் வெளியிடப்பட்டன. அது தவிர, சில பிரபலத் தலைவர்களின் இலக்கிய நிகழ்வுகளும் இந்த அரங்கங்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால், தற்போது அந்த அரங்கங்கள் இருக்கிறதா... அல்லது இடிக்கப்பட்டு விட்டதா என்றே தெரியவில்லை'' என்கிறார், இதயம் நொந்தநிலையில். 

வழிதெரியாமல் தவிக்கும் வாசகர்கள்!

சமூக வலைதளத்துக்குள் சாமன்ய மனிதனும் சிக்கிவிட்ட இந்தக் காலத்தில், ''ஏடுகளைப் புரட்ட ஆரம்பித்தால், தேடுதல் வேட்டையைத் தொடங்கலாம்'' என்று சொல்லும் இந்த நூலகத்தின் பரமவாசகியான கல்லூரி மாணவி ஒருவர், ''என்னுடைய கல்லூரி தேவநேயப் பாவாணர் நூலகத்துக்கு அருகில் இருப்பதால், எனக்குத் தேவைப்படும் இலக்கிய சம்பந்தப்பட்ட நூல்களை எடுக்க இங்கே அடிக்கடி வருவேன். எல்லாவற்றுக்கும் வசதியாக, முக்கியமான இடத்தில் இந்த நூலகம் செயல்படுவதால், எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆனால், தற்போது மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால், இந்த நூலகத்துக்குள் செல்லும் வழி மறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், அங்குச் செல்லும் வாசகர்கள், 'நூலகம் திறக்கப்படுவதில்லையோ' என்று தவிக்கின்றனர். விவரமறிந்தவர்கள், இந்தக் கட்டடத்துக்குப் பின்புறமாகச் செல்கின்றனர். மற்றவர்கள், இதற்கு விடை தெரியாமலேயே வந்தவழியில் சென்றுவிடுகின்றனர். 

எனது தோழிகூட நூலகத்துக்கு வழிதெரியாமல், இரவல் வாங்கிச்சென்ற புத்தகத்தைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க முடியாமல் தவித்துவந்தாள். பின்னர், அவளுக்கு அங்குச் செல்வதற்குரிய வழியைக் கூறினேன். இதனையடுத்து, அந்தப் புத்தகத்தைக் கொண்டுபோய் ஒப்படைத்தாள். அப்படியொரு உத்வேகத்துடன் செயல்படும் என் தோழிக்குக் கிடைத்த பரிசு, புத்தகத்தைக் காலதாமதப்படுத்தியதற்காக நூலக ஊழியர்  அவருக்கு அபராதம் விதித்திருக்கிறார். இது யாருடைய தவறு? வாசகர்களுக்கு வழிகாட்ட வேண்டியது நூலகத் துறையின் கடமை. 'நூலகத்துக்குச் செல்லும் வழி' என்று அந்த நூலகத்தைச் சேர்ந்தவர்கள் எழுதிவைத்திருக்க வேண்டும். இதனால்தான் இதுபோன்ற நிலைமைகளுக்கு ஆளாகிறார்கள் வாசகர்கள். என் தோழிக்கே இந்த நிலையென்றால், இன்னும் வயதான வாசகர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்'' என்றார், சிறு குமுறலுடன்.

மெட்ரோ ரயில் பாதிப்பால் முடக்கப்பட்ட சாலை

அழுக்குடன் காணப்படும் புத்தகங்கள்!

''நூலகத்தில் உள்ள புத்தகங்கள் என்பது தனிப்பட்ட ஒருவருக்கு அல்ல... அவை, எல்லோருக்குமானது.  அப்படியிருக்கையில் அந்தப் புத்தகங்களில் குறிப்புகள் எழுதுவதோ; தாள்களை மடிப்பதோ, கிழிப்பதோ செய்யக்கூடாது. தங்களுக்குத் தேவையான புத்தகங்களை, யாருமே செல்லாத இடங்களில் ஒளித்துவைப்பதும் தவறு. இதனால் பிற வாசகர்கள் பாதிப்படைவார்கள்'' என்று நூலக நலனைக் கருத்தில்கொள்ளும்... இந்தப் புதுமையான வாசகர், ''இதுபோல், தற்போது இந்த நூலகம் இல்லை'' என்கிறார். மேலும், அவர் ''இங்குள்ள புத்தகங்களைக் கிழிக்கும், எழுதும், தூங்கும் வாசகர்களை நூலக ஊழியர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் அழுக்குடனேயே காணப்படுகின்றன. இப்படி அந்தப் புத்தகங்களைத் தேடி எடுத்துப் படிக்கும் வாசகர்கள், புயல்காற்றில் வீசியெழுந்த புழுதியில் சிக்கியவர்களாக... உடலிலும், சட்டையிலும் கறைபடிந்தவர்களாக வெளியே வருகிறார்கள். மேலும், சுட்டெரிக்கும் இந்த வெயில்காலத்தில்கூட அலுத்துக்கொள்ளாமல், தன் அறிவுப்பசிக்குத் தீனி போடும் வகையில் புத்தகத்தைத் தேடிவரும் வாசகர்களுக்கு மின்விசிறிகளைக்கூடச் சுழலவிடுவதில்லை. இதனால், அவர்கள் வழிந்தோடும் வியர்வைத் துளிகளுக்குள்ளேயே புத்தக ஏடுகளைப் புரட்ட வேண்டியிருக்கிறது. 'பிரெளசிங் உண்டு' என்று சொல்லப்படும் அந்த நூல்நிலையத்தில், அது செயல்பாட்டிலேயே இல்லை என்பதுதான் உச்சக்கட்ட வேதனை'' என்கிறார், அதன் பாதிப்புடன்.

வாசகர்களின் வேண்டுகோள்கள்!

''நூலகத்துக்கு மிக முக்கியமான தேவை நூலகர்களும், புத்தகங்களும்தான். நூலகத்தில் இல்லாத புத்தகங்களை அவர்கள் அரசு மூலமாகப் பெற்று,வாசகர்களின் தேவையைப்பூர்த்தி செய்யவேண்டும். அவற்றை ஒழுங்காக அடுக்கி, கேடலாக் முறையில் பராமரிக்க வேண்டும்;  தேடும் புத்தகம் விரைவிலேயே வாசகரின் கையில் கிடைக்குமாறு வழிவகை செய்யவேண்டும்; அறைகுறையான படிப்புடனும், ஆர்வமில்லாத பணியுடனும் நூலக ஊழியர்கள் பணி செய்தால் வாசகர்களுக்கு எந்தப் பயனும் இராது என்பதை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும்'' என்பதே அங்குவரும் வாசகர்களின் நீண்ட வேண்டுகோளாக இருக்கிறது.

இதுகுறித்து தேவநேயப் பாவாணர் நூலக ஊழியர்களிடம் பேசினோம். ''மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பதால், அங்கிருந்து வரும் புழுதியால் புத்தகங்கள் அழுக்காகின்றன. ஆனாலும், நாங்கள் அவற்றைத் துடைத்துவருகிறோம். மெட்ரோ ரயில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் இருக்காது. அதன் காரணமாகவே, சில சமயங்களில் 'பிரெளசிங்' சேவை பாதிக்கப்படுகிறது. அவர்கள், கேபிள்களைத் தோண்டியெடுத்துப் பணி செய்வதால், நெட் துண்டிக்கப்படுகிறது. ஆனாலும், வாசகர்களுக்குத் தொய்வில்லாமல் பிரெளசிங் செயல்படுகிறது. மேலும், விரைவிலேயே நூலகத்துக்குச் செல்வதற்கான வழிபற்றிய அறிவிப்புப் பலகையையும் வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும்படி வைக்கிறோம்'' என்றனர், பணிவாக.

''ஒரு நூலகம் திறக்கப்படும்போது, பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன'' என்ற சொன்ன மகாத்மாவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கும்வகையில், நூலகங்களின் செயல்பாடும் சிறப்பாக இருக்கவேண்டும்.

- ஜெ.பிரகாஷ்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!