மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Palanisamy

இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த சரோண் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து 6.3.2017 அன்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் IND-TN-10-MM-514 விசைப்படகில்  பாக் வளைகுடாவில் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, இரவு சுமார் 9.30 மணி அளவில், அவர்களை நோக்கி  வந்த இலங்கைக் கடற்படையினர், எவ்வித அறிவிப்புமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில், படகிலிருந்த ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.  இந்தச் சம்பவத்தில், காயமடைந்த சரோண் என்பவருக்கு, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தமிழக மீனவர்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை சிறைப்பிடிப்பதும்,  அச்சுறுத்துவதும்,  படகுகளைக் கைப்பற்றுவதும் தொடர் நடவடிக்கையாக இருந்துவருவதை  தமிழக அரசு அவ்வப்போது மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தி, நிரந்தரத் தீர்வு காண வற்புறுத்திவந்துள்ளது. தற்போது நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூடு  சம்பவத்துக்கு, என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அகால மரணமடைந்த பிரிட்ஜோ குடும்பத்துக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். காலமான பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாயும், காயமடைந்த சரோண் என்பவருக்கு ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!