வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (07/03/2017)

கடைசி தொடர்பு:14:36 (07/03/2017)

கலாபவன் மணியின் அறிந்துகொள்ள வேண்டிய மறுபக்கம்!

''நான் உதவி என்று நினைத்து எதையும்  செய்வதில்லை. நான் சாலக்குடிக்காரன், சாலக்குடிக்காரனாகவே வாழ விரும்புகிறேன். நான் ஓட்டிய ஆட்டோதான்... எங்கள் குடும்பப் பசியைப் போக்கியது. பழைய வாழ்க்கை என்றைக்கும் அழிந்துவிடுவதில்லை. நான் அதனை மறக்கவும் விரும்பவில்லை''... இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? திரையுலகைக் கலக்கிகொண்டிருந்த நேரத்தில்  யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத நேரத்தில் கண்ணீரில் ஆழ்த்திவிட்டுச் சென்ற கலாபவன் மணி.

கலாபவன் மணியின்  சிலை

பல்குரல் கலைஞனாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கி மம்மூட்டி, மோகன்லாலுக்கே சவால் விடுக்கும் வில்லன் வரை வளர்ந்தவர் மணி. அது மட்டுமல்ல ஹீரோ,  காமெடியன், குணச்சித்திர வேடங்கள் என எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அதற்கு கலாபவன் மணி பொருந்துவார். மணியின் நடிப்பைப் பார்த்து வியந்து நின்றவர்கள்தாம் அதிகம். கடைசியாக அவர் நடித்த தமிழ்ப்படம் 'பாபநாசம்'. போலீஸ்காரர் வேடத்தில் மிரட்டியிருப்பார். நடிகர்,  நாட்டுப்புற பாடகர் எனப் பன்முகத் திறமை கொண்ட மனிதர்... மர்மமான முறையில் இறந்துபோவார் என்று யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள்?

கேரளத்தின் சாலக்குடியில் பிறந்த கலாபவன் மணி எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டவர். ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றியவர். 'கலாபவன்' என்ற கலைக்குழுவில் சேர்ந்ததால், மணி என்ற பெயருடன் 'கலாபவன்' ஒட்டிக்கொண்டது. சினிமாவில் உச்சத்தில் இருந்த போதும்,  மணி தான் பிறந்து வளர்ந்த மண்ணை மறந்துவிடவில்லை. கேரளத்தைப் பொறுத்த வரை ‘சாலக்குடி’ பின்தங்கிய பகுதிதான். ‘அதிரப்பள்ளி’ எனும் பிரமிக்க வைக்கும் அருவி இங்குதான் உள்ளது. 

வெள்ளந்தி மனிதர்களான ஆதிவாசி மக்கள் நிறைந்த பூமி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மணி அந்த எளிய மக்களுடன் நேரத்தை செலவழிப்பது வழக்கம். வாழ்க்கையின் முதல் பாதியில் அவர் அனுபவித்த வறுமை, மக்களோடு மக்களாகவே அவரை, கடைசி வரை வாழ வைத்திருந்தது. உதவி என்று யார் வந்து மணியிடம் கேட்டாலும் கிடைக்கும். சொல்லப்போனால், அவரே மக்களைத் தேடிப் போவார். கேரளத்தின் முக்கிய பண்டிகை ஓணம். அந்த சமயத்தில் மணி சாலக்குடியில் இருந்தால், வீட்டிற்குள் மட்டும் கொண்டாடாமல் ஆதிவாசி மக்களுடன் ஓணத்தைக் கொண்டாடி, விருந்தளித்து, புத்தாடைகள் அளித்து மகிழ்வார். 

மணி

சாலக்குடி சுற்றுவட்டாரம் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி. இங்கு ஒரு அரசு பெண்கள் பள்ளி உள்ளது. பெண் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்  உள்ள சிரமத்தை மணி உணர்ந்தார். கேட்காமலேயே அந்தப் பள்ளிக்கு பேருந்து ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.  மணியின் பார்வையில் யாரும் குற்றவாளிகள் இல்லை. 'அவர்கள் சூழ்நிலையால் குற்றவாளியாக்கப்பட்டவர்கள்' என்ற மனோபாவம்  கொண்டவர். சிறைக் கைதிகளையும் நேசத்துடன் பார்க்கும்  மனம் அவருக்கு இருந்தது. 

யாரையும் பழைய வாழ்க்கையைக் காரணம் காட்டி ஒதுக்கி வைத்துவிடக்கூடாது என்பது அவரது  எண்ணம். நேரம் கிடைத்தால் சிறைக் கைதிகளை மகிழ்விக்கும் பணியில் ஈடுபடுவார் மணி. விய்யூர் மத்திய சிறையில், ஒரு முறை  மணி நிகழ்த்திய காமெடி நிகழ்ச்சியை அந்தக் கைதிகள் இன்றும்கூட மறந்திருக்க மாட்டார்கள். மணிக்கு அம்மா மீது பாசம் அதிகம். வயது முதிர்ந்த பெண்களைக் கண்டால் மிகுந்த மரியாதை செலுத்துவார். திருச்சூர் அருகேயுள்ள முதியோர் காப்பகத்துக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 'தேசிய விருதை வெல்வதைவிட இது மகிழ்ச்சியான விஷயம்' எனக் குறிப்பிடுவார் மணி.

வயிறு குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்த அந்தக் கலைஞன் இறந்து நேற்றுடன் ஒரு வருடம்  ஆகிறது...  ஆனாலும் அவரை யாரும் மறந்துவிடவில்லை.  நடிகராக இருந்தாலும் மக்கள் மீது அக்கறை கொண்டிருந்த அந்தக் கலைஞனை அவரது சொந்த மண் மறந்துவிடவில்லை. சாலக்குடி அருகே  தந்தை ராமன்குட்டி  நினைவாக  மணி  'கலாக்ரிஹாம்' என்கிற நாடகப் பள்ளி நடத்தி வந்தார். இங்குதான் சிலையாக உருவாகி நிற்கிறார் மணி. 

கடந்த 2011ம் ஆண்டுவாக்கில் பிரபல மலையாளப் பத்திரிகை மலையாள மனோராமா, ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்திக்கும் மணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 'சாலக்குடி சந்தை குப்பையும் கூளமுமாகச் காட்சியளிக்கிறது' என்பதுதான் மனோரமா சொன்ன செய்தி. மணிக்கு வந்ததே கோபம். சென்னையில் சூட்டிங்கில் இருந்தவர், நேரே கிளம்பி சாலக்குடி வந்தார். மனோரமா குறிப்பிட்டிருந்த சந்தையை, நேரில் சென்று நண்பர்களோடு சுத்தம் செய்தார்.

மணி..  உண்மையான மக்கள் கலைஞன்...!

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்