வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (07/03/2017)

கடைசி தொடர்பு:13:21 (07/03/2017)

ஜெயலலிதா மரணம்.. அரசு அறிக்கையும், தொடரும் கேள்விகளும்!

ஜெயலலிதா

நெடுவாசல், பெட்ரோல் விலை உயர்வு, மீனவர் துப்பாக்கிச் சூடு, அ.தி.மு.க உட்கட்சிப் பூசல் எனப் பல்வேறு பிரச்னைகள் தமிழகத்தில் எழுந்துள்ளன. இதற்கிடையே ஜெயலலிதா இறந்த சமயத்தில், எழுப்பப்பட்ட அத்தனை கேள்விகளையும் மக்கள் முற்றிலுமாகவே மறந்திருந்தார்கள். இந்தச் சூழலில் பல மாதங்களாகவே மக்கள் எதிர்பார்த்த அரசுத் தரப்பு அறிக்கையை, சூழலுக்குச் சற்றும் தொடர்பில்லாமல் வெளியிட்டுள்ளது அரசு.

தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் முழு உடல்சிகிச்சை விபர அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளார். அவர், நோய்வாய்ப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் மருத்துவமனை தரப்பு வெளியிட்ட தகவல்களைவிட, இதில் அதிகமாகவே விபரங்கள் தரப்பட்டிருந்தாலும்... அதுவே, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.

மயக்கமா? காய்ச்சலா?

அப்போலோ தரப்பு வெளியிட்ட முதல் அறிக்கையிலேயே ஜெயலலிதாவுக்குக் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள அரசுத் தரப்பு அறிக்கையோ, அவருக்கு ஆக்ஸிஜன் குறைபாடும் மூச்சுவிடுவதில் பெரும் சிக்கலும் இருந்ததாகவும், மயங்கிவிழும் நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறது. வெறும் காய்ச்சலுக்காக மட்டும்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதனால் கேள்விக்குள்ளாகிறது.

புதிதாக இடம்பெற்றிருக்கும் சில நோய்கள்

அப்போலோ தனது அறிக்கை ஒன்றில், 'அவருக்கு நாள்பட்ட அளவில் சர்க்கரை வியாதியும் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்னையும் இருந்தது அனைவரும் அறிந்ததே' என்று குறிப்பிட்டு இருந்தது. விஷயம் என்னவென்றால், அப்போலோ அப்படி ஒரு தகவலை வெளியிடும்வரை யாருமே அதிகாரப்பூர்வமாக அதை அறிந்திருக்கவில்லை. ஆனால், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்குத் தீவிர தோல் அழற்சி நோயும், தைராய்டு சுரப்பியின் செயல்பாடும் குறைந்திருந்தது என்று குறிப்பிட்டிருந்ததுதான். இதுவரை எதிலுமே குறிப்பிடப்படாத இந்தத் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அப்போலோ ஏன் தனது முந்தைய எந்த அறிக்கையிலும் இதுபற்றிக் குறிப்பிடவில்லை?

அறிக்கையின் முரண்பாடு

எப்படியிருந்தாலும் அவர் இதயச் செயல்பாடு குறைந்ததால்தானே இறந்தார், இந்த நோய்கள் பற்றிக் குறிப்பிடாமல் போனதால் என்ன சிக்கல்வந்துவிடப் போகிறது என்கிற கேள்வி எழலாம். ஆனால் தைராய்டு சுரப்பி செயல்பாட்டில் குறைவு ஏற்பட்டால், இதயநோய் பிரச்னை எளிதில் ஏற்படும். மற்றொரு பக்கம், தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை கார்ட்டிகோ ஸ்டீராய்டு என்னும் மருந்து வகைகள்தான் கட்டுப்படுத்தும். ஜெயலலிதாவுக்கு இருந்த தீவிர தோல் அழற்சி நோய்க்காக அவருக்கு கார்ட்டிகோ ஸ்டீராய்டு வகை மருந்துகள்தான் கொடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு அறிக்கையே குறிப்பிடுகிறது.

அதே அரசுத் தரப்பு அறிக்கைதான், “அவர், தவறான மருந்துகள் எடுத்துக்கொண்டதால்தான் அவருக்கு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டதாகச் சிலர் தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள்” என்று கூறுகிறது. தனது அறிக்கையுடனே முரண்பட்ட நிலையில் இருக்கிறது அரசு.

மற்றொரு புறம், உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சந்தித்துள்ளது எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு. வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற அளவில் உடல்நிலை தேறியிருந்த ஜெயலலிதாவை, அவருக்கு இதயச் செயல்பாட்டில் கோளாறு ஏற்படுவதற்கு முதல்நாள் எதற்காக மருத்துவர்கள் குழு வந்து சந்தித்தது?

'இயல்பாகவே வந்து சந்தித்தார்கள்', 'அவர் சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்’, ’இனிப்புகள் சாப்பிடக் கொடுத்தார்கள்' என்று இன்னும் தொடர்கதை எழுதிக்கொண்டிருக்கப்போகிறதா, அரசும் கட்சி தரப்பும்?

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்