'தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தாம்...' மத்திய அரசுமீது நல்லகண்ணு காட்டம்

நல்லகண்ணு ஆர்ப்பாட்டம்

"தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தாம். இந்திய மீனவர்கள்தாம். அதை உணர்ந்து அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாயிகள் சங்கங்களின் சார்பில், நெல்லை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்,எல்.ஏ.வும் நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவருமான எஸ்.வி. கிருஷ்ணன், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான நல்லகண்ணு கலந்துகொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களான கோக், பெப்சி நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது, இதனால் மாவட்டத்தின் விவசாயம் பாதிப்படையும் ஆபத்து இருப்பதால், இந்த நிறுவனங்கள் செயல்பட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அனைத்துப் பகுதி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

நல்லகண்ணு ஆர்ப்பாட்டம்

அத்துடன், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு இருக்கும் வரலாறு காணாத வறட்சிக்கும் வர்தா புயல் பாதிப்புக்கும் மத்திய அரசு, 39,290 கோடி நிதியை உடனே வழங்க வேண்டும். தமிழக அரசு, விவசாயம் பொய்த்துப்போனதால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இதரப் பயிர்களுக்கும் சிறு, குறு விவசாயிகள் எனப் பார்க்காமல் அனைவருக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு கிடைக்க உறுதியளிக்க வேண்டும். கரும்புக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாயும் வாழைக்கு 75,000 ரூபாயும் தென்னை ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கிட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், தற்போது ஏரி குளங்கள் நீரின்றிக் காய்ந்து கிடக்கும் நிலையில், அவற்றை உடனடியாக தூர் வாரி மராமத்துப் பணிகளைச் செய்ய வேண்டும். வறட்சி காரணமாக வேலை இழந்துள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு 25,000 இழப்பீடு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு 150 நாட்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் வீதம் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நல்லகண்ணு இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, ‘‘ தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் நீர் இல்லாத அளவுக்குக் கடுமையான வறட்சி நிலவுகிறது. விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் மத்திய மாநில அரசுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் பொய்த்துப்போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும்.

நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்படும் குளிர்பான நிறுவனங்களுக்குத் தண்ணீர் வழங்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. அந்தத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், தற்போது நீதிமன்றம் அந்த நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கத் தடை இல்லை எனத் தீர்ப்பு கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், அந்த நிறுவனங்களுக்கு தற்போது 15 லட்சம் லிட்டர் நீர் கொடுக்கப்படுகிறது. அதுவும் ஆயிரம் லிட்டருக்கு 37 ரூபாய் 50 காசுக்குத் தாமிரபரணியில் தண்ணீர் கொடுப்பது வேடிக்கையானது. இந்த ஆலைகளுக்கான அனுமதியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவரை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் பகை நாடாகச் சொல்லப்படும் பாகிஸ்தான்கூட, எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காகக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த குஜராத்தைச் சேர்ந்த 51 மீனவர்களை விடுதலை செய்தது. ஆனால், இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் இலங்கைக் கடற்படையானது தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கைது செய்தும் சுட்டுக் கொன்றும் வருகிறது. இது மிகவும் கண்டனத்துக்கு உரிய செயல். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மத்திய அரசு தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்கிற மனநிலையுடன் மத்திய அரசு இந்த விஷயத்தை அணுக வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்’’ என்று பேசினார்.

- ஆண்டனிராஜ்

படங்கள் : எல்.ராஜேந்திரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!