சுபாஷ் பண்ணையாரைத் தேடும் தமிழக போலீஸ்!  - கேரளாவில் துப்பாக்கி துரத்தல் | police sets trap for Subash Pannaiyar, search continues

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (07/03/2017)

கடைசி தொடர்பு:18:17 (07/03/2017)

சுபாஷ் பண்ணையாரைத் தேடும் தமிழக போலீஸ்!  - கேரளாவில் துப்பாக்கி துரத்தல்

தலைமறைவாக இருக்கும் சுபாஷ் பண்ணையாரைத் தேடி தமிழக போலீஸார் கேரளா, மும்பைக்குச் சென்றுள்ளனர். அவரைத் துப்பாக்கி முனையில் பிடிக்கத் தீவிர முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

 பண்ணையார்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். பல விளைநிலங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்ததால் சிவசுப்பிரமணியன் 'பண்ணையார்' என்று அழைக்கப்பட்டார். இவருக்கு அசுபதி, நாராயணன் என இரண்டு மகன்கள்.  அசுபதியின் மகன் சுபாஷ் பண்ணையார், நாராயணனின் மகன் வெங்கடேஷ் பண்ணையார்.  திருச்செந்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தில் உள்ள நிலத்தகராறில் வங்கி மேலாளர் ராஜகோபாலுக்கும், பண்ணையார் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது பசுபதிபாண்டியன், ராஜகோபாலுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 1993-ம் ஆண்டு ஜனவரி 14ல் அசுபதி பண்ணையார் கொலை செய்யப்பட்டார். 

 ரத்த பூமி 

இந்த சம்பவத்துக்குப் பிறகு பழிக்குப்பழியாக கொலைகள் நடந்தன. இருதரப்பினருக்கு இடையே நடந்த கொலை சம்பவங்களால் தென்மாவட்ட கிராமங்கள் ரத்த பூமியாக மாறின. துப்பாக்கிச் சூடும் சம்பவம் அங்கு அடிக்கடி நடந்தன. பசுபதி பாண்டியன் தரப்பை பழிவாங்கத் துடித்தது பண்ணையார் தரப்பு.  கடந்த 1993ல் ஜூன் 8ல் சிவசுப்பிரமணியன் கொலை செய்யப்பட கோபத்தின் எல்லைக்கே செல்கிறது பண்ணையார் குடும்பம். 


கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் 21ல் தூத்துக்குடியில் பசுபதி பாண்டியனைக் கொலை செய்ய நடந்த முயற்சி தோல்வியடைந்தது. சிவசுப்பிரமணியன், அசுபதி மறைவுக்குப்பிறகு வெங்கடேஷ் பண்ணையார் தலைமை ஏற்றார். அப்போது, சேலம் சட்டக்கல்லூரியில் படித்து வந்தார் சுபாஷ் பண்ணையார். தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் வெங்கடேஷ் பண்ணையார் பெயர் சேர்க்கப்படுகிறது. 

 திண்டுக்கல்லில் பசுபதி 

இதற்கிடையில் ஊரில் நடந்த திருவிழாவின்போது சிறுவயதில் சிங்காரத்துக்கும், சுபாஷ் பண்ணையாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பசுபதி பாண்டியன் தரப்பிலிருந்து சிங்காரமும் பண்ணையார் குடும்பத்தினருக்கு குடைச்சல் கொடுத்து வந்தார். பசுபதி பாண்டியனுக்கும், பண்ணையார் குடும்பத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலிகள் தொடர் கதையாகின. பசுபதி பாண்டியன் தரப்பில் பீர்முகமது, பொன்இசக்கி என கொலைப்பட்டியல் நீண்டன. இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதலின்போது போலீஸ் அதிகாரியாக இருந்த ஜாங்கிட், பசுபதி பாண்டியனின் இருப்பிடத்தை திண்டுக்கல்லுக்கு மாற்றினார். வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் பசுபதி பாண்டியன் மற்றும் அவரது தரப்பினர் வரும்போது போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். போலீஸைத் தவிர பசுபதி பாண்டியனின் பாதுகாவலர்களும் செல்வதுண்டு. 

பசுபதிபாண்டியன் கொலை 

வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு கடந்த 2006 ஏப்ரல் 7ல் தூத்துக்குடி மாவட்டம், எப்போதுவென்றான் பகுதியில் பசுபதிபாண்டியன், அவரது மனைவி ஜெசிந்தா உள்ளிட்டோர் காரில் வந்தனர். அப்போது காரை வழிமறித்த பண்ணையார் தரப்பு, பசுபதிபாண்டியனை கொலை செய்ய முயன்றது. ஆனால் இந்த தாக்குதலில் ஜெசிந்தா கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 2011ல் ஜனவரி 10ல் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டார். இதில் பண்ணையார் தரப்பைச் சேர்ந்த அருளானந்தம், ஆறுமுகசாமி உள்பட சிலர் போலீஸில்  சிக்கினர். 

பசுபதி பாண்டியனைக் கொன்றவர்களைப் பழிவாங்க 2016 மார்ச்சில் பசுபதி பாண்டியன் தரப்பினர் பழையகாயலுக்கு வந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுபாஷ் பண்ணையார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால் ஆறுமுகசாமி கொல்லப்பட்டார். அவரது தலையைத் துண்டித்த கும்பல் கொலை நடந்த இடத்திலிருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள தெய்வசெயல் கிராமத்துக்குக் கொண்டு சென்றது. அங்கு இருக்கும் பசுபதி பாண்டியனின் பெயர் பலகைக்கு கீழ் தலையை வைத்துவிட்டுச் சென்றது. இதற்குப் பழிவாங்க பண்ணையார் தரப்பு முடிவு செய்தது.

சிங்காரம் கொலை 

இதற்காக சுபாஷ் பண்ணையார் தலைமையிலான கும்பல், புதிய டீம்மை உருவாக்கியது. இந்த டீம்மைச் சேர்ந்தவர்கள் பசுபதி பாண்டியன் தரப்பினருக்கு பயத்தை ஏற்படுத்த முடிவு செய்தனர். அப்போது, பசுபதி பாண்டியன் தரப்பில் பின்னாலிருந்து செயல்பட்ட சிங்காரத்தை தீர்த்துக்கட்ட பண்ணையார் தரப்பு திட்டமிட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சிங்காரத்தை நெல்லை, கே.டி.சி. நகரில் வைத்து பண்ணையார் தரப்பு கொலை செய்ததாக போலீஸார் கருதுகின்றனர். இந்த வழக்கில் போலீஸார் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர்.  "சிங்காரம் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. தலைமறைவாக இருக்கும் சுபாஷ் பண்ணையாரைத் தேடி வருகிறோம். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு சுபாஷ் பண்ணையாரைப் பிடிக்க துப்பாக்கிகளுடன் மும்பை, கேரளாவுக்கு சென்றுள்ளோம்" என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். 

கையை இழந்த சுபாஷ் பண்ணையார் 
 
பசுபதி பாண்டியனுக்குப் பதிலடி கொடுக்க சுபாஷ் பண்ணையார் தரப்பு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராமல் அவைகள் வெடித்துச் சிதறின. இதில், சுபாஷ் பண்ணையார் கை துண்டானது. பிளாஸ்டிக் கையோடு அவர் வலம் வருகிறார். மேலும் பண்ணையார் மற்றும் பசுபதி பாண்டியனுக்கு இடையே நடந்த மோதல் ஜாதி ரீதியாகவும் மாறியது. இதுவே தென்மாவட்டங்களில் ஜாதி ரீதியான கொலைகளுக்கு அடித்தளமிட்டது. இதன்விளைவு பசுபதி பாண்டியனுக்கும், பண்ணையார் தரப்புக்கும் எதிரிகள் அதிகமாகினர். தென்மாவட்டங்களில் ஜாதி ரீதியான மோதல்கள் அதிகரித்தன. 

என்கவுன்டர் 

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மணல் பிரச்னையில் வெங்கடேஷ் பண்ணையார் சிக்கினார். மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கி முனையில் வெங்கடேஷ் பண்ணையார் பஞ்சாயத்து செய்ததாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த மன்னார்குடி குடும்பம், கடந்த 2003 செப்டம்பர் 26-ம் தேதி சென்னையில் போலீஸார் நடத்திய என்கவுன்டரில் வெங்கடேஷ் பண்ணையார் பலியானார். அதுவரை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட பண்ணையார் குடும்பம் தி.மு.க.வுக்குச் சென்றது. தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இதன்பிறகு அரசியல் மோதல்களும் ஏற்பட்டன. 

ரகசிய இடத்தில் விசாரணை 

முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நீண்டகாலமாக தேடப்படும் ரவுடிகளின் பட்டியலை போலீஸ் டீம் தயார் செய்துள்ளது. அந்தப்பட்டியலில் உள்ளவர்களையும் போலீஸ் டீம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதில் தென்மாவட்டத்தைக் கலக்கிய பிரபல ரவுடி ஒருவர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
 
இதுகுறித்து போலீஸ்  வட்டாரங்கள் கூறுகையில், "தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்த பிறகும் தமிழக அரசின் இயந்திரம் முழுமையாக செயல்படவில்லை. குறிப்பாக, தமிழக போலீஸ் துறையும் அரசியல் சூழ்நிலையால் முழுமையாக செயல்படாமல் இருந்தது. தற்போது தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோர் தமிழக போலீஸ் உயரதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, சட்டம்- ஒழுங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. உடனடியாக நீண்ட நாள்களாக தேடப்படும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சுபாஷ் பண்ணையாரும் உள்ளார். அவரைத் தேடி தமிழகம் மட்டுமல்ல, வேறு சில மாநிலங்களுக்கும் போலீஸ் டீம் சென்றுள்ளது" என்றார். 

சுபாஷ் பண்ணையார் தரப்பில் பேசியவர்கள், "சிங்காரம் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையாருக்கு எந்த சம்மந்தமும் இல்லை. சிங்காரம் கொலையில் தேடப்பட்டவர்கள் போலீஸிடம் சிக்கியுள்ளனர். எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நாங்களும் அமைதியாக இருப்போம். எங்கள் மீதுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்தித்து வருகிறோம்" என்றனர். 

நமது நிருபர் 


டிரெண்டிங் @ விகடன்